2. ஆதிலோக மாய சரித்திரம்

66 3 2
                                        

ஆறு ஆண்டுளுக்கு பின்,

வைர மாளிகையின் வைரம் அழகாக பிரகாசிக்கத் தொடங்கி அன்றைய விடியல் கதிர்களை ஆதிலோகம் எங்கிலும் பரப்பிடத் தொடங்கியது.

லோகத்தின் ஒரு முனையில் உள்ள ரட்சகராஜ்யத்தின் வடக்கு எல்லையில் இருக்கும் வைர மாளிகையின் ஜொலிஜொலிக்கும் வைர ஒளி, ராஜ்யத்தின் தெற்கு எல்லையைக் கடந்து... வனதேசத்தின் இரு மாய இனங்களின் வாழ்விடம் தாண்டி... மறு முனையில் இருந்த அந்த இருண்ட இடத்தில் தடைபட்டு நின்றது.. அது, ரட்சகராஜ்யத்தின் நிழலில் மறைந்திருக்கும் இருளின் ராஜ்யம்... சாயல் அரசாங்கம் என்னும் நிழல் தேசம்.

இருள்... திரும்பும் திசையெல்லாம் இருள்... பரந்து விரிந்த அந்த பெரும் ராஜ்யம் முழுவதும் காரிருள் மட்டுமே ஆட்சிசெய்து கொண்டிருக்க.... ராஜ்யத்தின் மையத்தில் இருந்த இருள்மாளிகையில் ஒரு அறையின் முகப்பில் மட்டும் ஒரே ஒரு திரைசீலை, உள்ளுக்குள் ஒளி இருப்பதை காட்டிடும் விதத்தில் மிளிர்ந்து கொண்டிருந்தது.

மொத்த ராஜ்யத்திற்கும் சேர்த்து, இருள் மாளிகையின் அந்த ஒரு அறை மட்டுமே ஒளியில் நிறைந்திருக்க... அவ்வறையின் மையத்தில் இருந்த மஞ்சத்தின் மீது அமர்ந்திருந்தவளோ தன் வாழ்வில் தனக்கென எஞ்சியிருக்கும் ஒரேயொரு மகிழ்ச்சியை.. தன் புத்திரனைக் காண, மணி நேரங்கள் கடந்தும் இருள் சூழ்ந்த வாயிலை நோக்கிக்கொண்டு காத்திருந்தாள்.

இத்தனைக்கும், இருளில் மூழ்கிடும் இராப்பொழுது அன்றி பளிச்சென்ற ஒளி மின்னத் தொடங்கிய காலைவேளை தான் அது... ஒளி வீசிடும் காலை பொழுதில் கூட இருளிலே மூழ்கிக் கிடக்கும் அக்காரிருள் சூழும் ராஜ்யமே நிழல் தேசம். அதுதான் ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவள் கணவன் அவளை விட்டுச்சென்ற இடம்... விதி அவளுக்கென கொடுத்த அவளின் இன்றைய இருப்பிடம்.

தேசம் என்னவோ வெறும் இருளில் மூழ்கியிருக்க... அந்த தேசத்தின் தலைமை இடமான இருள்மாளிகை, அதற்கும் மேல். காரிருள் கூட உள்நுழைய அஞ்சும் ஒரு இறுக்கமான சூழல் நிலவிடும் அக்கோட்டையில், இவளின் இந்த ஒரேயொரு அறை மட்டும் சதா நேரமும் ஒளியில் ஜகஜோதியாக மிளிர்ந்து கொண்டிருக்கும். அதன் காரணம்.. அறையினுள் இருக்கும் அவள் மாத்திரமே.

காவல் வீரா (ஆதிலோக விதிமீறல்)Where stories live. Discover now