காத்திருப்பு...

293 13 11
                                    

காத்திருப்பின் சுகம் அலாதியானது.. ஆனால் யாருக்காக எதுக்காக காத்திருக்கிறோம் என்பதிலே தான் அதன் சுகம் இருக்கிறது. .

பல நேரங்களில் பல விஷயங்களுக்காகவும் பல மனிதர்களுக்காகவும் காத்திருந்தது உண்டு. ஆனால் அவளுக்கான என் காத்திருப்பின் சுகம் அலாதியானது.  அவள் வருவாளா மாட்டாளா என எதிர்பார்ப்பிற்கும் ஏமாற்றத்திற்கும் இடைப்பட்ட காத்திருப்பின் சுகத்தை உணரச் செய்தவள்.

அவள் எனக்கானவள் இல்லை ஆனால் அது ஒரு போதும் என் காத்திருப்பின் சுகத்தை குறைத்ததில்லை.

பல சமயங்களில் நேர தாமதமாகவும், சில சமயங்களில் அவள் வராமலும் இருந்ததுண்டு..ஆனால் நான் அவளுக்காக காத்திருக்காமல் இருந்ததில்லை..

அவள் நலிவடைந்த அரச குடும்பத்தின் இளவரசி போன்றவள். பாதுகாவலர்கள் இன்றி ஒரு நாளும் அவளை கண்டதில்லை.

வறுமையின் வெளிப்பாடு அவளின் தோற்றத்தில் இருந்தாலும், கம்பிரமான அவளின் தோற்றமும், பார்வையின் வசீகரமும், ஓரக் கண் சமிக்கைகளும், கொஞ்சும் பேச்சும், சத்தமான அந்த சிரிப்பும் ஆண்களை மட்டும் அல்ல, பெண்களையும் அவள் வருகைக்காக காத்திருக்க வைத்ததுண்டு.

மீசை அரும்பிய காலத்தில், காத்திருப்பின் சுகம் அறியாமல் மற்றொரு பகட்டான ஆடம்பர அழகியின் பின்னால் சென்றதுண்டு.

ஆனால் அந்த அரச குடும்பத்து இளவரசியின் மீதான ஈர்ப்பு இவள் மீது எனக்கு ஒரு போதும் ஏற்பட்டதில்லை.

அவள் மழையும் காற்றையும் ரசிக்க எனக்கு பழகிக் கொடுத்தவள்.

வீதி வரை வந்த அவள் வீடு வரை வரமாட்டாளா என பல நாள் ஏங்கியது உண்டு.

காலம் கனிந்து அவள் என் வீடு வரை வரும் காலம் வந்த போதும் அதே கம்பீரமும் வசிகரமும் அவளிடம் இருந்தது..

அப்போதும் அவள் மீதான என் காத்திருப்பும் எதிர்பார்ப்பும் இம்மியளவும் குறையவில்லை. அதுதான் அவள்.

முதிர்கன்னியாக அவள் இன்றும் என்னை காத்திருக்க வைத்திருக்கிறாள். என்னை மட்டும் அல்ல.

கிழவர்களையும், இளைஞர்களையும் காத்திருக்க வைத்திருக்கிறாள்.

பெண்களையும், குழந்தைகளையும் காத்திருக்க வைத்திருக்கிறாள்.

ஆம், அவள் எனக்கானவள் அல்ல..எங்களுக்கானவள்.

நலிவடைந்த அரச குடும்பத்து இளவரசி எங்களுக்கானவள்..



அவள் வேறு யாருமல்ல.. எங்கள் ஊரின் அரசு பேருந்தது.. 7A :)

😆😆😆😍😘😆😆

காத்திருப்பின் சுகம் உணரச் செய்தவள்..

காத்திருப்பு...Where stories live. Discover now