அடிக்கடி அந்த நாற்காலியில் சித்ரா கண்மூடி அமர்ந்திருப்பது.. செழியனுக்கு வித்தியாசமாக தோன்றியதில்லை.. அவளுக்கு அது பிடித்திருக்கிறது என நினைத்துக் கொண்டான்.
ஒரு நாள் கண்மூடி அதில் சாய்ந்து அமர்ந்திருந்தவள்.. தன் விரல்களால் ஒரு கையை மெல்ல வருடினாள். என்ன செய்கிறாள் என புரியாமல் அவளை பார்த்துக் கொண்டே நின்றான் செழியன்.
விரல்களால் கன்னத்தில் மெல்ல வருடியபடி.. ஒற்றை விரலால் இதழை தடவினாள். அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரில் எதையோ உணர்ந்த செழியன்.. “சித்து..”என அழைத்தான்.
மிதுனின் நினைவில் தன்னை மறந்து இருந்த சித்ரா.. திடுக்கிட்டு கண்விழித்தாள். செழியனை கண்டதும்.. என்ன என்பது போல அலட்சியமாக பார்த்தாள்.
“என்ன செஞ்சுட்டு இருக்க..”என கேட்டான் செழியன்.
தனக்கு திருமணம் ஆகிவிட்டது.. என்ற உண்மை அப்போது தான் உணர்வுக்கு வர.. ஏதோ தவறு செய்து விட்டதை போல மனம் சுட்டது.. பேசாமல் அமைதியாக இருந்தாள் சித்ரா.
அவள் மௌனமே செழியனுக்கு அவள் மனதை உணர்த்த.. “இந்த மாதிரி சேர் மிதுன் வீட்டில உண்டா..”என கேட்டான் செழியன்.
“ஆமா..”என்றாள் சித்ரா வெறித்த பார்வையுடன்.
செழியன் ஏதோ சொல்லத் தொடங்கும் முன்.. “எல்லாம் தெரிஞ்சு தான கல்யாணம் பண்ணிக்கிட்ட..” என்றாள் அலட்சியமாக.
சற்று நேரம் அமைதி நிலவியது.. “இதே மாதிரி சேர்ல தான்.. அவன் மடியில.. என் மிதுன் மடியில.. நான் இருந்தேன்.. எதுவும் பேசாம.. என்னை கட்டிப்பிடிச்சிட்டு.. நாங்க சந்தோஷமா இருந்தோம்..” என்றாள் சித்ரா.
அவளின் ஒவ்வொரு வார்த்தையும் மனதில் தீயென சுட்டது. இருந்தும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் செழியன்.
“அவனோட ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அந்த வீட்டில நாங்க மட்டும் தனியா.. எவ்ளோ சந்தோஷமா இருந்தோம்.. என் கையால ஊட்டிவிடச் சொல்லி சாப்பிடுவான்.. எனக்காக அவனே சமைப்பான்.. எனக்காக பார்த்து பார்த்து தேடித்தேடி வாங்கின புடவையை தருவான்.