ஓவியத் திறன்

5 0 0
                                    


    THIS WORK IS NOT MINE BUT IT IS WRITTEN BY MY GRANDFATHER PULAVARKO T.N. ARIVUOLI., M.A., M.Ed (புலவர்கோ தி.நா. அறிவுஒளி., க.மு., கல்.மு.,). I WISH TO CONVERT HIS WORKS INTO DIGITAL. SO HERE IT IS GUYS.
    THIS STORY IS A PART FROM HIS BOOK CALLED "OLI KADHAIKAL" (ஒளிக் கதைகள்) WHICH WAS PUBLISHED IN THE YEAR 1995
   
 கிரேக்க நாட்டில் பல துறைகளில் சிறந்த கலைஞர்கள் வாழ்ந்தனர். ஓவியக் கலையில் யவன (கிரேக்க) நாடு மிகப் புகழ் பெற்றிருந்தது.

     சூக்சிசு என்பவனும் பார்ராசியசு என்பவனும் கிரேக்க நாட்டில் புகழ் பெற்ற ஓவியக் கலைஞர்களாக விளங்கினர்.

    சூக்சிசுக்கும் பார்ராசியசுக்கும் கருத்து வேற்றுமை உண்டானது. ஒருவரை ஒருவர் வெறுத்தனர்.

'   சூக்சிசு சிறந்த ஓவியனா?' 'பார்ராசியசு சிறந்த ஓவியனா?' என்ற வினா எழுந்தது. ஊராரும் இந்தச் சிக்கலைப் பெரிதுபடுத்திப் பேசலாயினர்.

'   ஓவியர் இருவரும் அருமையான ஓவியத்தை வரைந்து மக்கள் பார்க்கும் பொது இடத்தில் காட்சிக்கு வைக்கவேண்டும் என்றும், அதை மக்கள் பார்த்துத் திறமை மிக்கவரைக் கண்டு தீர்ப்பளிக்க வேண்டும், பாராட்டவேண்டும்' என ஒரு முடிவு செய்தனர்.

    அதன்படி சூக்சிசும், பார்ராசியசும் தனித் தனித் தமது திறமை வெளிப்படும் வண்ணம் மிக முயன்று ஓவியம் வரையலாயினர்.

    குறிப்பிட்ட நாள் வந்தது.

    ஓவியர் இருவரும் ஒரு கூடத்தில் தாம் வரைந்த ஓவியத்தைத் தனித் தனியே அமைத்தனர்.

    முதலில் சூக்சியசின் ஓவியத்தின் திரையைத் திறந்தனர். அதில் ஒரு கொடி முந்திரி (திராட்சை)க் கொடியும் பழக்குலையும் வரையப்பட்டிருந்தது உண்மைப் பழக்குளை கொடி போல அவ்வளவு இயற்கையாக விளங்கியது படம். அப்போது பலகணி வழியே பறந்து வந்த பறவைகள் படத்தினுள்ள கனிக் கொத்துகளை உண்மையானவை என்று எண்ணிக் கொத்த முயன்று ஏமாந்தன.

     அதைக்கண்டு மக்கள் வியந்தனர். சூக்சியசின் ஓவியத் திறனைப் புகழ்ந்து பாராட்டினர்.

    'தன் ஓவியமே சிறந்தது' எனச் சூக்சியசு எண்ணி மகிழ்ந்தான்; பெருமிதப் பட்டான்.

    பார்ராசியசின் ஓவியம் மக்களின் பாராட்டைப் பெறமுடியாது என்றும் சூக்சியசு எண்ணிக் களித்தான். அதனால், "பார்ராசியசு, உன்னுடைய ஓவியம் எங்கே? காட்டு மக்கள் பார்த்துத் தீர்ப்பளிக்கட்டும்" என்றான் சற்று செருக்குடன்.

    பார்ராசியசு அமைதியாக, "சூக்சியசு என்படம் அதோ, அங்கே இருக்கிறது. திரையை நீக்கிப் பார்!" என்றான்.

    சூக்சியசு எழுந்து சென்று பார்ராசியசு காட்டிய பக்கம் சென்று அங்கு ஓவியத்தை மூடியிருந்த திரையை விலக்கக் கைகளால் தொடத் தொடத் திரை அவன் கையில் அகப்படவேயில்லை.

     மீண்டும் உற்று நோக்கினான்.

     அப்போதுதான் ஓவியனான சூக்சியசுக்கு உண்மை புரிந்தது.

     பார்ராசியசு வரைந்த ஓவியமே அதுதான் என்று சூக்சியசு உணர்ந்தான்.

     ஓவியனே உண்மைத் திரை தொங்குவதாகப் புரிந்து கொண்டு ஏமாந்து போகக் கூடிய அளவுக்கு மிகச் சிறப்பாக வரைந்த திறம் மக்களுக்கும் புரிந்தது.

     சிற்றறிவுள்ள பறவைகளை மருட்டிய கொடி முந்திரிப் பழக் கொத்துள்ள படத்தை விட.

     ஆற்றிவும், கலைப் பயிற்சியும் உள்ள ஓவியக் கலையில் தேர்ந்தவனையே ஏமாற்றிவிட ஓவியம் மிகமிகச் சிறந்தது என மக்கள் உணர்ந்தனர்.

     பார்ராசியசே சிறந்த ஓவியன் என மக்கள் தீர்ப்பளித்தனர்.

     திறமை மிகுந்திருப்பது நல்லது; அதனால் பூசலும் பொறாமையும் கொள்ளுதல் கூடாது.

     பிறரைத் திறமை குறைந்தவர் என்று எப்போதும் எண்ணக் கூடாது.

     அடக்கமாக இருந்து அருஞ்செயல் செய்வதே மக்களால் பாராட்டப்படும்.

ஓவியத் திறன்Where stories live. Discover now