திருபயற்றூர் கோவில்

29 4 0
                                    


*அப்பர் பெருமான் தேவாரம்*

திருப்பயற்றூர் திருநேரிசை
[4/32/1,10 - 01/05/19]

குறிப்பு: *"பழங்காலத்தில் மீளகு வாணிபத்தில் ஈடுபட்ட அடியார் ஒருவர் மிளகுக்கு விதிக்கப்பட்ட அதிகமான சுங்க கட்டணத்தால் மிகவும் நஷ்ட்டப்பட்டு, சுங்கச்சாவடியை தாண்டும் வரை மிளகு மூட்டைகள் பயறு மூட்டையாக மாற வேண்டும் என்று இறைவரிடம் விண்ணப்பித்தனர், அதன்படி திருவருளால் மிளகுமூட்டை சுங்கஞ்சாவடி வரை பயிறாக மாறி இருந்த தலம் ஆதலால் இது "பயற்றூர்" எனப்பட்டது"*

திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியே நாகூர் செல்லும் சாலையில் மேலபூதனூர் வரை சென்று திருமருகல் செல்லும் பாதையில் இத்தலம் அமைந்துள்ளது

கண்நோய்களை தீர்க்கும் சிறப்புடை தலமாக இத்தலம் விளங்கி வருகிறது, சான்றாக இத்தல கல்வெட்டு ஒன்றில் *"திருப்பயற்றூரில் பஞ்சநதவாணன் என்பவருக்கு நோயால் வருந்திய கண் நன்றாகும்படி, அவர் சாதியார் அறுநூறு காசுக்குத் திருச்சிற்றம்பலம் உடையானுக்குச் சொந்தமாயுள்ள கிடங்கு நிலம் அரைமா வாங்கிச் இறைவருக்கு உரிய நிலமாக விட்டுள்ளனர்"* என்ற செய்தி கிடைக்கிறது

அப்பரடிகளின் ஒரு திருநேரிசை பெற்றுள்ள இத்தலத்தில் அப்பர் பெருமான் *"சாத்தனை மகனா வைத்தார்"* என்ற தொடரைக் கையாண்டு *"இறைவரது மகனாக அரிஹர புத்திர ஐயப்பர்"* இருப்பதனையும் எடுத்து ஒதுதல் எண்ணத்தக்கதாம்

மேலும் திருக்கயிலை மலைமீது இராவணனது புட்பக விமானம் செல்லாமல் தடையுற்றதால் சினந்துதான் இறைவரது மலையை எடுக்க முயன்றனன் என்ற அரிய குறிப்பினை *"மூர்த்திதன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப் பார்த்துத்தான் பூமி மேலாற் பாய்ந்துடன் மலையைப் பற்றி ஆர்த்திட்டான்"* என்று பாடுகிறார் குளிச்செழுந்த நாயனாராம் கோதில் தமிழாளியார்

பொதுவாக கோபம் வந்தால் அனைவருக்கும் கண் சிவக்கும் அல்லவா!? அதுபோல திரிபுரங்களை எரிக்கும் பொழுது இறைவருக்கு கோபத்தால் கண்கள் சிவந்தன என்பதனை *"கவர்ந்திட்ட புரங்கண் மூன்றுங் கனலெரியாகச் சீறிச் சிவந்திட்ட கண்ணர் போலுந் திருப்பயற்றூர் அனாரே"* என்று இரண்டாம் பாடலில் குறிக்கும் அப்பரடிகளின் பாடல்கள் இவை

*பாடல்*

உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகியோட
விரித்திட்டார் உமையாளஞ்சி விரல்வ விதிர்த்து அலக்க நோக்கித்
தரித்திட்டார் சிறிது போது தரிக்கிலர் தாகித்தாமுஞ்
சிரித்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற்றூரனாரே.

மூர்த்திதன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலாற் பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்து மடர்த்துநல் லரிவை யஞ்சத்
தேத்தெத்தா என்னக் கேட்டார் திருப்பயற்றூர் அனாரே.

*பொருள்*

திருப்பயற்றூர்ப் பெருமானார் குருதிவெள்ளம் ஆறாக ஓட யானையின் தோலை உரித்துத் தம் திருமேனியில் விரித்துப் போர்த்தார் . யானைத்தோலை உரித்ததனையும் போர்த்ததனையும் கண்டு பார்வதிதேவியார் அஞ்சித்தம் விரல்களைப் பலகாலும் உதறி வருந்தியதனைக் கண்டு , சிறிதுநேரம் அத்தோலைப் போர்த்தியபின் அவ்வாறு தொடர்ந்து போர்த்தும் ஆற்றல் இல்லாதவரைப் போலக் காட்சி வழங்கித் தாமும் பற்கள்தோன்றச் சிரித்துவிட்டார்

திருப்பயற்றூரனார் , சிவபெருமானுடைய கயிலைமலையைக் கடந்து புட்பகவிமானம் போகாதாக , அச்செய்தியைச் சொல்லிய தேரோட்டியை வெகுண்டுநோக்கி , மனத்தான் நோக்கிப் பூமியில் தேரினின்றும் குதித்து விரைந்து கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்டு இராவணன் அதனைப் பெயர்த்து ஆரவாரம் செய்தபோது மலை நடுங்குதல் கண்டு பார்வதி அஞ்சும் அளவில் அவன் தலைகள் பத்தையும் விரலால் நசுக்கிப் பின் பாடிய தேத்தெத்தா என்ற இசையைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு அருள் செய்பவரானார்.

You've reached the end of published parts.

⏰ Last updated: May 01, 2019 ⏰

Add this story to your Library to get notified about new parts!

 தமிழ் சிந்தனை துளிகள்Where stories live. Discover now