அகம்.. புறம்..

157 10 6
                                    

                    ரு வியாழக்கிழமையன்று பகல் நேரம் பாடசாலையில் என் வகுப்பறையில் அமர்ந்திருந்தேன். என் அருகில் எப்பொழுதும்போல வாயோயாது கதைபேசிக்கொண்டு அமர்ந்திருந்தாள் என் தோழி.

நான் சுவற்றில் தொங்கிய கடிகாரத்தின் வட்ட முகத்தையும் என் தோழியின் வட்ட முகத்தையும் மாற்றி மாற்றிப் பார்த்தவாறு இன்று நேரம் இன்னும் கொஞ்சம் வேகமாகக் கழிந்துவிடாதா என்று ஏங்கிக் கொண்டிருந்தேன்.

இரண்டு கணிதப் பாடவேளைகளை வகுப்பில் சும்மா அமர்ந்து கடத்த வேண்டியிருந்தது. எங்கள் கணித ஆசிரியர் தனக்கு அலுவலகத்தில் ஒரு முக்கியமான வேலை இருப்பதாகக்கூறி எங்களை வகுப்பறைக்குள்ளேயே அமைதியாக இருக்குமாறு கூறிவிட்டு ஒரு வேலைகூடத் தராது சென்றுவிட்டார். வெளியே எங்கேனும் சென்று வரவும் முடியவில்லை.

ஏனோ அன்றைய தினம் காலையிலிருந்தே சுரத்தின்றி ஆரம்பமானது. எனக்குப் பிடித்த எங்கள் தமிழாசிரியையும் வந்திருக்கவில்லை. அந்த வருத்தம் வேறு..

"சோ Bபோரிங்.." என்றேன் ஒரு கொட்டாவியை வெளியே விட்டுக்கொண்டு..

"அப்ப நான் இது வரைக்கும் பேசினதெல்லாம் சும்மா தலவிதின்டு கேட்டுன்டு இருந்தியா?"

என் தோழி எண்ணெயிலிட்ட கடுகு ரூபத்துக்கு மாற எத்தனிக்க, அவளை அமைதிப்படுத்திவிட்டுக் கதிரையில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன். இப்பொழுது அவள் வாயிலிருந்தும் ஒரு கொட்டாவி வெளியேறியது.

அப்படியே அமர்ந்துகொண்டு இருவரும் கண்களால் இரைந்து கொண்டிருந்த வகுப்பை அலசிக் கொண்டிருந்தோம்.

வகுப்பில் ஆசிரியரில்லாத தைரியத்தில் மார்க்கர் பேனாக்களை எடுத்து வெண்பலகையில் கீறித் தம் ஓவியத் திறமையை வெளிக்காட்ட முயன்று கொண்டிருந்தது ஒரு குழு. ஒரு மூலையிலே ஓரிருவர் சேர்ந்துகொண்டு ஏதோ கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். இன்னுமொரு குழு மேசைகளை வட்டமாகப் போட்டுக்கொண்டு வட்ட மேசை மாநாடு நடத்திக் கொண்டிருந்தது. ஒருத்தி தான் இருக்கும் உலகம், தன் பெயர், விலாசமென்று அனைத்தையும் மறந்து மடியில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு அதில் கண்கள் பதித்து மேஜையில் கையூன்றிக் கொண்டிருந்தாள். இன்னொருத்தி ஒரு தாளில் ஏதோ எழுதுவதும் பின்பு அதன்மேலே கிறுக்குவதுமாக பயங்கர பிஸியாக இருந்தாள். இன்னுமொருத்தி ஏதோ அடுத்த நாளே தவணைப் பரீட்சை நடைபெறுவதுபோல தீவிரமாகப் பாடப் புத்தகங்களைப் பிரித்துப் படித்துக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோலத்தில் இருந்தால்தானே அது வகுப்பறை!

கதைச் சொட்டுக்கள் Where stories live. Discover now