ஆர்த்தியிடம் ஜனனி விவரத்தை கூற, "ஓகே. முடிஞ்சது முடிஞ்சு போச்சு. இந்த கேப் அவனுக்கு அவசியம் தான். என்ன..அவன ரொம்ப மிஸ் பண்ணுவேன்." என்றாள் ஆர்த்தி.
அதற்கு, "ம்ம். நானும் தான். சரி அது இருக்கட்டும். ரிசல்ட்ஸ் என்னாச்சு?" என்று ஜனனி விழியில் வழிந்த நீரை துடைத்து விட்டு கேட்டாள்.
"சொல்றேன். சிவா, ஜீவா இன்னும் நாலு பேர வெய்ட் லிஸ்ட் பண்ணிர்காங்க. அதுல ஒருத்தர் தான் நெக்ஸ்ட் ரவுண்டுக்கு அனுப்புவாங்களாம். அத அடுத்த வாரம் மெயில அனுப்புவாங்களாம். நீங்க ரெண்டு பேரும் போனதும் ஜீவாவும் கிளம்பிட்டான். அவன் நம்பர்கு ட்ரை பண்ணேன் பட் கால் எடுக்கல. விடு நாளைக்கு காலேஜ்ல சொல்லிக்கலாம்" என்றாள்.
அதுவும் சரியென பட, "சரிடி. நாளுக்கு பார்க்கலாம்" என்று அழைப்பை துண்டித்தாள்.
வந்ததில் இருந்தே மகளின் முக வாட்டத்தை கவனித்த ஜனனியின் தந்தை அவளை மகிழ்ச்சியாக்க புதிதாக வெளிவந்த படத்திற்கான மூன்று டிக்கெட்டுகளை எடுத்து வந்தார். அது இரவு நேர காட்சி என்பதால் தன் அன்னையை மட்டும் விட்டு மற்ற மூவருக்கும் சேர்ந்து எடுத்திருந்தார். தனக்காக தன் தந்தை செய்த இந்த முயற்சியை உணர்ந்து அவரை சென்று அணைத்து கொண்டாள்.
"நீங்க தான்பா எப்பவும் பெஸ்ட்" என்றாள் புன்னகைத்து.
அவளது அன்னையும் அருகே வந்து அவள் தலையை கோதி, "சரி வா போலாம். புக் பண்ண கேப் வந்திருக்கும்" என்றார்.
மூவரும் அந்த திரையரங்கத்திற்குள் சென்று அமர்ந்தனர். ஒருவழியாக இடைவேளை வந்ததும் பாப்கார்ன் வாங்க தந்தையுடன் வெளியே வந்தவள் அங்கே ஓரத்தில் ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து அவ்விடம் திரும்பினாள். அங்கே ஜீவா அங்கு பணிபுரியும் உடை அணிந்து கொண்டு திரையரங்க மேலாளரிடம் திட்டு வாங்குவதை கேட்டு அதிர்ந்தாள்.
"உன்கிட்ட முன்னாடியே சொன்னேன். டைம்கு வர முடிஞ்சா வா இல்லாட்டி வேற வேல தேடிக்கோனு. ஏன் தம்பி இப்படி என் டைம வேஸ்ட் பண்ற. ஏதோ கஷ்டம்னு சொன்னாதால இந்த சேன்ஸ் கொடுத்தேன். இதான் கடைசி முறை பார்த்துக்கோ" என்று எச்சரித்தார்.
அதற்கு பதிலாக தலையாட்டிய ஜீவா, "சாரி சார். நீங்க பண்ணது பெரிய ஹெல்ப். இனி இப்படி நடக்காது" என்றான்.
"சரி சரி வேலையா பாரு. அங்க பாப்கார்ன் கவுண்டர்ல போய் நில்லு. சுரேஷ் இன்னைக்கு திடீர்னு வரல. எனக்குன்னே வர்றீங்களா இப்படி" என்று அலுத்துக் கொண்டே சென்றார்.
அவர் சொன்னது போல வெளியே வந்து பாப்கார்ன் கவுண்டர் செல்ல அப்போது தான் ஜனனியை கவனித்தான் ஜீவா. அவளை அங்கு எதிர்பாராததால் என்ன கூறுவதென புரியாமல் நிற்க ஜனனியின் தந்தை அவளை அழைத்தார்.
"என்னாச்சு? யாரது?" என்று கேட்டார்.
அங்கே கவுண்டரில் நின்றவர்கள் வேறு அவனிடம் ஆர்டர் சொல்லி துரிதப்படுத்த வேறுவழியின்றி அவர்களிடம் பணத்தை பெற்று பாப்கார்ன்களை போட்டுக் கொடுத்தான். தன்னிடம் கூட சொல்லாமல் அவன் இங்கே வேலைப் பார்ப்பது அவளை கோபப்படுத்தியது. தன்னிடம் கூட உதவி கோரவில்லையே என்ற வருத்தத்தால் உருவான கோபம் அது.
________________________________________வணக்கம் மக்களே ❤️,
இந்த அத்தியாயம் உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன். மறக்காம உங்க கருத்துக்கள சொல்லுங்க..
YOU ARE READING
பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்
Teen Fictionகாதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.