அறிமுகம்

430 4 0
                                    


அறிமுகம்

இன்றைய நாகரிகங்களின் பல்வேறு நிகழ்வுகள் சரிவர அறியப்படாது மறைந்து போய் விட்டன. உலகின் மிகப் பழமையான வரலாறுகளை கொண்ட பிராந்தியங்களுள் பாரத தேசமும் சீனமும் குறிப்பிடத் தகுந்தன. ஏனைய பண்பாடுகளை விட அதிகமான இலக்கிய செறிவும் காவியங்களையும் கொண்டது இவ்விரண்டு நாடுகளும். காவியங்கள் பலவும் கட்டுக்கதை என ஒதுக்கப்பட்டு விட்டன,
அவற்றில் சில உண்மை வரலாறுகளும் அடங்கும்.பாரத காவியங்களுள் இராமாயணம் பல்வேறு ஆச்சர்யங்களையும் ஆராய்ச்சிகளையும் உள்ளடக்கியது. அந்த மகா காவியத்தினுள் யாவராலும் நேர் நின்று எதிர்க்க இயலா மாவீரனாய் விளங்கியவன் வாலி. அவனுக்கு எதிர்க்கும் அனைவரின் பலத்தில் பாதி வந்துவிடும் என்றும் அத்தகைய அற்புதத்தை செய்வது அவன் தந்தையான இடியின் அதிபதியாக விளங்கும் இந்திரன் வாலிக்கு கொடுத்த மந்திர மாலையினால் தான் என்பார்கள், வாலியின் மறைவிற்கு பிறகு அந்த மந்திர மாலை வாலியின் மகனானஅங்கதனிடம் சேர்ந்தது. இவ்வாறு அந்த மணிமாலை நான்கு தலைமுறைக்கு பிறகு தகுதி வாய்ந்த ஒருவன் கிடைக்காததாலும் அதன் அளவிட இயலாத ஆற்றல் காரணமாக சாது ஒருவரிடம் கொடுக்கப்பட்டது. பின்பு அதனை பற்றிய எண்ணங்கள் மக்களிடம் மறைந்து விட்டன. புத்த மத எழுச்சியின் போது புத்த சாதுக்களினால் தென்மேற்கு சீன தேசத்தில் ஷாம்பலா எனும் பூலோகசொர்க்கம் உருவாக்கப்பட்ட போது அந்நகரை பாதுகாக்க நியமிக்கப்பட்ட தளபதி லீ -முராரிக்கு அம் மந்திர மாலை வழங்கப்பட்டது. அதன் பிறகு அவனுடைய சந்ததிக்கு அம்மாலைவழங்கப்பட இருந்தது. அவன் மிகவும் பாதுகாப்பான முறையில் அந்நகரை ஆட்சி செய்ய தொடங்கினான். ஏனெனில் ஷாம்பலா நகரில் அமைந்த புத்த மடாலயத்தில் காலச் சக்கரம் கங்கத் எனும் புத்த துறவியினால் அமைக்கப்பட்டு சாஜரி எனும் பெண் துறவியினால் உயிரூட்டப்பட்டது .அதில் காலச் சக்கரம் மட்டும் அல்லாது பிரபஞ்ச வாசலும் ஒருங்கே இணைக்க பட்டது. அந்த கால பிரபஞ்ச சக்கரம் நடுவே உலகின் அதிபதியாக விளங்கும் இறைவனுக்கு தங்க சிம்மாசனம் நிறுவப்பட்டது. அதன் அருகே போடப்பட்ட பீடத்தில் அமர்ந்து ஷாம்பலாவின் தலைமை பிட்சு அந்நகரை நிர்மானிப்பார்.
அந்த சிம்மாசனம் பற்றி அறிந்த பலரும் அதை அடைய நினைத்தாலும் தளபதி முராரி அவர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியதால் போர் தொடுக்கும் துணிவு எவருக்கும் இல்லை. மங்கோலிய அரசன் செலஸ்த்கான் பெரும் படையுடன் ஷாம்பலாவை தாக்கினான். போரின் ஆறாம் நாள் முடிவில் தளபதியின் பலம் பற்றி அறிந்தவன் தந்திரமாக அவனை கொல்ல சதித் திட்டம் தீட்டினான். யுத்த களத்தில் வேறொருவனை நிறுத்திவிட்டு பிட்சு வேடத்தில் ஆயிரம் துஷ்ட மந்திரவாதிகளுடன் நகரினுள் நுழைந்தான். அதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மந்திரவாதிகளும் அடக்கம். கலிங்க தேசம் எனப்படும் தற்போதைய தென்னிந்தியாவில் இருந்து சென்ற ஒரு காளாமுகனும் ஒருவன்.இவன் சதியை பற்றி அறிந்த தலைமை பிட்சு மடாலத்திற்குள் வர இயலாதபடி மந்திர வேலியை ஏற்படுத்தினார். யுத்த களத்தில் இருந்து திரும்பிய தளபதி வருவதற்குள் தலைமை பிட்சுவை தீய ஆவிகளை கொண்டு செலஸ்த்கான் கொன்றான். அவர் இறந்ததும் மந்திர வேலி உடை படத் துவங்கியது. தளபதி தான் பெற்ற மந்திர மாலையின் சக்தி காரணமாக எளிதில் எண்ணூறு பேரை வதைத்தான். மீதமுள்ள மாந்திரிகர்களும், சூனியவாதிகளும் இளவயதினனும் ஒரு சிறுவனும் ஆதலால் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு குடிநீர் கூட மறுக்கப்பட்டது. செலஸ்த்கான் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டான். அவன் உடல் பனி ஓநாய்க்கு இரையாக்கப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு பிறகு மெல்ல மெல்ல அனைவருக்கும் உடல் நிலை குன்றியது. காளாமுகன் சிறையிடப்பட்ட அந்த சிறுவனை அருகில் அழைத்தான். "விநாசனம் நின் பணி " என கூறி தனது மோதிர விரலை கீறி மூன்று துளி குருதியை அவன் நாவில் சொட்டினான். மற்ற நூற்றி தொன்னூற்று எட்டு பேரையும் கொன்று அனைவரின் மூளையையும் அச்சிறுவனுக்கு வழங்கினான். குருதிவெறி பிடித்த காட்டேறி போல் விழுங்கினான்.கடைசியில் அச்சிறுவனுக்கு சகுனி என நாமம் இட்டான். ஏழு நாள் இரவு பகலாக மந்திர உபதேசம் வழங்கினான்.எட்டாம் நாள் சூரிய உதயத்தின் போது அவன் குருவின் அனுமதி இல்லாது பல்வேறு மந்திர உபதேசங்களை அடுத்தவர்க்கு வழங்கியதால் தலை சுக்கு நூறாய் வெடித்து இறந்தான். மெல்ல பிணங்களின் வாடையும் , அவர்களின் சாபமும் நகரை தாக்க மற்ற பிட்சுகள் சிறையை திறந்த போது சகுனி மட்டும் வெளியில் வந்தான். மற்றவர்கள் அனைவரும் கோரமாக இறந்து கிடந்தனர். சகுனியை கருணை மனதுடன் விடுதலை செய்ய முற்பட்டனர். ஆனால் அவன் இறைஞ்சி கேட்டதால் அவனை பிட்சு வாக மாற்ற ஏற்றுக் கொண்டனர். அடுத்த தலைமை பிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரு வருடம் கழித்து செலஸ்த்கான் மகன் ஜாபர்ந் பெரும் படையுடன் ஷாம்பலாவை தாக்கிய போது அவனை வென்று திரும்பிய போது அந்நகரின் நுழைவு வாயில் மட்டும்தான் இருந்தது.அதன் பிறகு தளபதி லீ - முராரியும், ஷாம்பலா நகரும் கற்பனை வரலாறு என சித்தரிக்கப்பட்டது. தளபதி முராரி பிறகு ஜப்பானிய தேசம் சென்று காணாமல் போய்விட்டார்.
ஆனால் சர்வ வல்லமை படைத்த அந்த நகரம் பிரபஞ்சத்தின் மறு கோடியில் தன்னை வேறொரு புவி போன்ற கிரகத்தில் தன்னை புதுப்பித்து கொண்டது. சகுனி அந்த கால சக்கரத்தை மாற்றி அமைத்து இயக்கி அந்நகரையே இந்த பூமியை விட்டு மறைய வைத்தான். ஆனால் சிம்மாசனம் அவனது இலட்சியமாக இருக்கவில்லை. வேறொருவனை அரசனாக்கினான் . அங்குள்ளவர்கள் அனைவரும் அரசன் தான் இதற்கெல்லாம் காரணம் என நினைக்கும் படி பார்த்துக் கொண்டான். அவன் மனம் தளபதியை கொல்வதற்காக மட்டுமே துடித்தது. சிறிது காலத்தில் ஷாம்பலா நகரம் பெரும் நாடாக மாறியது. புதிய இளவரசன் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவன் தான் விலியாட்.









கபாடம்Where stories live. Discover now