சமாராவின் கைதியாக, அவள்!

12 4 25
                                    

தோரனையாய் வெளவால்கள் தொங்கிக் கொண்டிருக்கும் காரிருள் படர்ந்த நீண்ட நடைபாதையில், செல்லும் வழியை காண தீ-பந்தம் தேவையில்லை என்பதுபோல் இருளில் கூட தெளிவாய் தெரியும் தன் பார்வையின் உதவியுடன் அங்கிருக்கும் சுவர்களை தன் கூர் நகங்களால் தேய்த்தவாரே நடந்துக் கொண்டிருந்தாள், சமாரா. ஒத்தையடி பாதையை போல் நீண்டுக் கொண்டிருந்த அந்த பாதையில் நிலவிடும் நிசப்தத்தை கிழித்துக் கொண்டிருப்பது அவளின் நகங்கள் சுவற்றில் உராயும் அந்த சத்தம் மட்டுமே.

அவளுக்கு இடமும் வலமும், இரு தூண்களுக்கு இடையே ஒரு சதுர சுவர் என வரிசைகட்டித் தூண்களும் சுவர்களும் மட்டுமே சதுரம் சதுரமாய் அரண்போல் நிமிர்ந்து நின்றிருந்தது. சம்பந்தமே இல்லாமல் இவ்விடத்தில் எதற்கு இப்படி சுவர்கள் எழுப்பப் பட்டிருக்கிறது என்னும் குழப்பத்தை பார்ப்பவர்களுக்கு நிச்சயம் உண்டாக்கிடும், அவ்விடம். ஆனால், சமாரா செய்த அடுத்த காரியத்தால், சந்தேகத்திற்கும் குழப்பத்திற்கும் இடமே இல்லாமல் போனது இங்கு.

முட்டுசந்து போல் அப்பாதை நிறைவடையும் இடத்தில் நின்றவள், வலதுபுறம் இறுதியாக இருந்த சதுர-சுவற்றை நோக்கித் தன் கைகளை உயர்த்திட, அவள் கையின் வழியே பாய்ந்துவந்த கருநிற விசையானது அந்த சுவற்றை தாக்கிய நொடி அதன் கற்கள் விலகி, இரும்புக் கம்பியிட்ட அறை ஒன்றினை காட்டியது. அது ஒரு சிறை! மாய சிறை. அங்கிருக்கும் சதுர சுவர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாய சிறையின் அறைகளே.

தன்னால் திறக்கப்பட்டிருக்கும் அந்த சிறையின் முன் நின்ற சமாரா, "ஹ்ம் இன்றும் உயிருடன் தான் இருக்கின்றாய்." வாயிலில் நின்றபடியே சிறைக்குள் பார்வையை செலுத்தியவள், ஏளனமாகச் சிரித்தாள். அவளுக்கு பதில் மொழியாக, அந்த சிறையினுள் இருந்து மங்கிய வெண்ணிற ஒளியும், நாகம் சீறிடும் சத்தமுமே அவளை முதலில் அடைந்தது. அதனை தொடர்ந்து இரும்புச் சங்கிலிகள் ஒன்றோடு ஒன்று இடித்துக் கொள்ளும் சத்தமும் கேட்டது.

காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)Where stories live. Discover now