நல்ல தரிசனம் கோவிலில். தன் பின்னே குழந்தை போல் குழந்தை கை பிடித்து தான் செல்லும் திசையெல்லாம் வந்த பார்த்திபனை பார்க்கையில் பெரிய புன்னகை மனதினில் ஆரபிக்கு.புரட்டாசியின் முதல் சனிக்கிழமை இன்று. பெருமாள் கோவிலில் கூட்டம் சற்று அதிகம் தான். முகத்தை சிறிதும் சுருக்கவில்லை, தன்னுடைய கையை அவள் இடித்த பொழுது குழந்தை கையை சேர்த்து இறைவனை வணங்க வைத்தான்.
'ரொம்ப தான்' ஆரபி உதட்டை சுளித்து மனதார வேண்டினாள். அவனுக்கும் சேர்த்து அவளே அத்தனை வேண்டுதலையும் வைத்தாள். அவள் வேண்டுதல் மொத்தமும் அவள் கணவனுக்காக மட்டுமே.
தான், மகள் கூட பின்னுக்கு தான் சென்றிருந்தனர். அவன் நன்றாக இருந்தால் இவர்கள் இருவரும் நிச்சயம் நன்றாக தான் இருப்பார்கள் என்கிற அழுத்தமான எண்ணம் அவளிடம்.
"ப்பா பலூன்" பூர்வி காற்றில் பறந்துகொண்டிருந்த பலூனை பார்த்து குதூகலிக்க மனைவியை அங்கேயே நிறுத்தி இவன் குழந்தைக்கு அவள் கேட்டதை வாங்கி வந்தான்.
கைகளில் இரண்டு பலூன் வீதம் நான்கு பலூனோடு வந்த மகளை முறைத்தாள், "ஏன்டி நோக்கு ஒன்னு போதாதா?"
"ம்மா டூ" என அவள் கையில் இரண்டை கொடுத்து அரிசி பற்கள் தெரிய சிரித்தது அந்த வாண்டு.
"நேக்கா?" கேலியாக மகளிடம் கேட்க,
"ம்ம்ம்" என்றது அந்த குட்டியும் தலை அசைத்து.
"வச்சுக்கோ ஆராம்மா" என்றான் கணவனும் கள்ள சிரிப்போடு.
"ஏன்னா, மனசு இதமா இருக்குல"
காற்றில் பறக்க போராடும் பலூனை சிறை செய்ததில் கொள்ளை இன்பமாய் சிரித்த முகமாய் நின்ற மகளை பார்த்து ஆமோதிப்பாய் தலை அசைத்தான் பார்த்திபன்.
"பார்த்தி..." அவன் காலை சுரண்டி ஆரபி அழைக்க, தலை தூக்கி அவள் கை காட்டிய திசையில் பார்த்தான். கோவிலிலுக்கு வந்திருந்தார் தாமோதரனும்.
"இந்த பெரியவா தானே அன்னைக்கு பூர்விய அழாம சமாதானப்படுத்தினா?"