"ஏன்டா உனக்கு பசிச்சா நீயே சாப்பாடு வச்சுக்க மாட்டியா, எப்ப பாரு இவனுக்கு நேரம் காலம் பாக்காம நாம தான் சாப்பாடு போடணும்"விஷ்ணுவின் அன்னை சலிப்போடு சமையலறை உள்ளே செல்ல குளித்து இடையோடு ஷார்ட்ஸ் மற்றும் உள் பணியனோடு மட்டுமே வந்த விஷ்ணு அன்னையின் கொதிநிலையை வித்யாசமாக பார்த்தான்.
தந்தையை திரும்பி பார்க்க அவர் முகமும் ஏதோ சரியில்லை என காட்டியது.
"உங்க கையால ஒரு தோசை சாப்பிட்டாலும் அதோட ருசியே தனி தானே ம்மா" அன்னைக்கு காக்கா பிடித்த மகனை திரும்பி அவர் முறைக்க, அமைதியாக தம்ளரில் தண்ணீரை நிரப்பினான்.
'ஏன் இவ்ளோ சூடு?' பெரியவன் வாயை அசைத்து சகோதரனிடம் கேட்க புத்தகத்தில் ஒரு கண்ணும் சகோதரன் திட்டு வாங்குவதில் ஒரு கண்ணையும் வைத்திருந்த சிறியவன் தோளை குலுக்கி பதில் கொடுத்தான்.
கையில் தண்ணீரை ஊற்றியவன் அதை சகோதரன் நோக்கி தெளித்தான், "எப்ப பாரு புக்கும் கையுமாவே இரு" என்று குறைப்பட்டான்.
"ஏன் அவன் அப்டி இருக்குறதுல என்ன தப்பு, உன்ன மாதிரி ஏனோ தானோனு படிச்சு இருக்கணுமா?"
"என் படிப்புக்கு என்னவாம்?" - விஷ்ணு
"அவனோட அந்த ஏதோ தானோ படிப்பு தான் இப்ப நாம இருக்க இந்த வீட்டை கொடுத்துச்சு" என்றார் விஷ்ணுவின் தந்தை மனைவியை முறைத்து.
"வீடு வாசல் இருக்கு, இல்லைனு சொல்லலையே. இதோ அவனுக்கு ஒரு வாழ்க்கை அமையிதா?"
"மா அண்ணா சாப்பிடட்டும் ம்மா" என்றான் சகோதரனும்.
விறுவிறுவென உள்ளே நடந்தவர் ஏற்கனவே ஊற்றி வைத்திருந்த இட்லியை எடுத்து வந்து வைத்தார். அவர் சென்று வந்த வேகமே அவர் கோவத்தை இன்னும் எடுத்து கூறியது. விஷ்ணுவுக்கு தேவையானவை அனைத்தையும் தட்டில் வைத்தவர் அவன் உண்டு முடிக்கும் வரை தான் பொறுத்தார்.
"இப்ப சொல்லுங்க ஏன் இந்த கோவம்?"
"சொன்னா தீத்து வச்சிடுவியாடா" இதற்கும் முறைப்பு தான் அன்னையிடம்.