4

1.6K 54 25
                                    

நிச்சயதார்த்தம் நடக்க இன்னும் ஒரு வாரம் என்ற நிலையில், துணி எடுக்க மாப்பிள்ளை வீட்டார் ஊரிலிருந்து முந்தின இரவே வந்து சேர்ந்திருந்தனர். இரவு உணவு முடிந்து மொட்டை மாடியில் ஆயாசமாக எல்லாரும் கலகலத்து கொண்டிருந்தனர்.

இவள் மட்டும் தனியே வானில் நிலவை வெறித்த படி நின்றிருந்தாள். "என்ன அண்ணி, அண்ணா இல்லன்னு ஒரே பீலிங் போல" என வம்பிழுத்தாள் ஹீரா. ஆம் அவன் மட்டும் பெங்களூரிலிருந்து காலை வருவதாக ஏற்பாடு. 

"அப்படிலாம் ஒன்னும் இல்ல போடி" என அவளை தள்ளி விட்டாள் நம் நாயகி. திருமணம் பேசி முடித்து இரு மாதங்கள் ஆன நிலையில் இரண்டு குடும்பமும் கொஞ்சம் நெருங்கி இருந்தனர், அதிலும் இவ்விருவர் கூடுதலாகவே ஒட்டிக்கொண்டனர்.

"ஒன்னும் இல்லன்னு வாய் தான் சொல்லுது, ஆனா கண்ணும் மனசும் அலபாஞ்சிட்டு தானே இருக்கு" என அவளை வாரினாள் ஹீரா

"இல்ல அவர் இருந்தா இன்னும் நல்லா இருக்கும் இல்ல.. அதான்" என இழுத்தாள் இவள். சரியாக அந்த நேரம் அவன் அழைக்க இவள் கைபேசி சிணுங்கியது. எல்லோரும் இவளையே பார்க்க இவள் எடுக்கலாமா வேண்டாமா என திணறினாள். "பார்ரா நீங்க பீல் பண்ணது சார்க்கு எட்டிருச்சோ? கரக்டா கால் வருது" என அவள் கையிலிருந்து போனை பிடுங்கினாள் ஹீரா. "ஏய் பப்பூ" இவள் கத்தியது காதில் வாங்காமல் அவள் அழைப்பை ஏற்றிருந்தாள்.

"என்ன சார் என்ன பண்றீங்க?" "ஓஹோ.. யாரு யார கூப்பிடனும்? வதுவா.. யார்பா வது? அப்படி யாரும் இங்க இல்லையே" இங்கு அவனின் வது.. வதனா போனை வாங்க நெளிந்து கொண்டிருந்தாள்.

"சரி சரி தரேன்டா கொரங்கு, இந்தாங்க வது மேடம் அவர் உங்க கிட்ட தான் பேசனுமாம்" கண்ணடித்துவிட்டு அங்கிருந்து நகன்றாள் ஹீரா.

"ஹலோ.."

"ஹாய் பேபி என்ன பண்ற?"அவன் குரல் கேட்டவுடன் இவளுக்கு மட்டும் மழை பெய்தது போல் சிலிர்த்து போனாள்.

"ம்ம் சும்மா தான் அத்தான். எல்லா மாடில பேசிட்டு இருக்கோம், நீங்க தான் மிஸ்ஸிங்"

"அதான் நாளைக்கு வந்துருவேன்ல, வந்து ஜமாய்க்கலாம் விடு"

"சரி. நீங்க கிளம்பியாச்சா?"

"ஹான் இப்போ தான் பேபி வண்டி ஏறுனேன். சரி காலைல பாப்போம். குட் நைட்"

"குட் நைட் அத்தான். பாத்து வாங்க, பாய்" வழிந்தோடும் முறுவலை அடக்க வழி தெரியாமல் திரும்பி கொண்டாள் வதனா. சும்மா விடுவாளா ஹீரா?

"யாரோ சோக கீதம் வாசிச்சிட்டு இருந்த மாறி இருந்துச்சு, யாரு பா அது?"

"ஹே போடி சும்மா ஓட்டாத" என்று சிரித்தாள் வதனா. அப்படியே இரவு நெடு நேரம் வம்பளந்து விட்டு உறங்க சென்றனர் அனைவரும். பெண் பார்க்கும் படலத்திற்கு பிறகு நாளை தான் அவனை திரும்ப வீட்டில் அனைவரின் முன் நேரில் காண போகிறாள், அன்று வராத வெட்கம் கூட இன்று ஏனோ வந்து ஒட்டிக்கொண்டது இவளுக்கு. விடியலை எதிர்நோக்கி கனவுலகில் உறங்காமல் உறங்கி போனாள் வதனா.

கதவு தட்டும் சத்தம் கேட்க விழித்து மணி பார்க்க, மணி 6 என காட்டியது. "ஹே எழுந்து வந்து குளி டி" அவள் அம்மா குரல் கேட்டு எழந்தவள்

"அவர் வர முன்னாடி குளிச்சிரனும்" என நினைத்து துணியை எடுத்து கொண்டு கதவை திறந்து வெளியே வந்தவள் அப்படியே ஆணி அடித்தது போல் நின்று விட்டாள். சோபாவில் அமர்ந்து காபி குடித்து கொண்டு இருந்தான் அவன்.

சட்டென்று திரும்பி வேகமாக அறையுள் புகுந்து கதவை சாத்தினாள் வதனா. நெஞ்சம் தாறு மாறாக தாளம் போட்டது. "ஏ பப்பூ.. பப்பூபூபூ..." தூங்கி கொண்டிருந்த ஹீராவின் மேல் பொத்தென விழுந்தாள் வதனா.

"அம்மா... என்ன அண்ணி" என கண்ணை திறக்காமலே முணங்கினாள் அவள். "உங்க அண்ணா வந்துட்டாரு டி. அச்சோ.. நான் குளிக்க கூட இல்ல.. இப்போ எப்படி வெளிய போறது.." இவள் பிதற்ற ஹீரா திரும்ப தூங்கியிருந்தாள். "அடியே.. எந்திரி டி.." இவள் உலுக்க அவள் அசைந்த பாடில்லை.

இழுத்து மூச்சுவிட்டு விட்டு கதவை திறந்து அவன் புறம் திரும்பாது நேராக குளியல் அறையில் புகுந்து கொண்டாள் வதனா. அங்கு அவனோ இவளின் கூத்தை இரசித்து கள்ளத்தனமாக சிரித்தான்.

என்னை களவாடிய கள்வாWhere stories live. Discover now