செல்லாதே-1

5.6K 118 249
                                    

விடியற்காலை பனியின் குளிரை மெது மெதுவாய் விளக்கி தன் சகாக்களைப் பார்க்கவென தன் கதிர்களை பாரினில் விரித்து வெளியே வந்தான் கதிரவன்.இலைகளின் மேல் பதிந்திருந்த பனித்துளிகள் கதிரவனைக் கண்டு பயந்தோடின. தம் குஞ்சுகளுக்கு இரை தேட பறவைகள் வெளிக் கிளம்ப இயற்கை அன்னை தன் கடமைகளை யாருக்கும் தொந்தரவில்லாமல் அமைதியாய் செய்து கொண்டிருந்தது. இயற்கைக்கே அமைதியைக் கற்றுக் கொடுத்தவள் போல சாந்தமே உருவாக துயிலில் இருந்தவளை யன்னலினூடே வந்த கதிரொளி தாக்க கண்ணீர் குளத்தில் நீந்தும் மீன்களான தன் கயல் விழிகளை கசக்கியவாரே எழுந்தமர்ந்தாள் ஒருத்தி.

படுக்கையை சரி செய்தவள் யன்னலினருகே நின்று வெளியை ரசிக்க,நீ பார்ப்பதை நானும் பார்ப்பேன் எனக் கூறிக்கொண்டு வெளியே வந்தது இரு கண்ணீர்த்துளிகள். அவசரமாய் அதைத்துடைத்தவள் குளியலறை நோக்கி நடக்க. அவளைத்தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் இவளின் தம்பி அகிலன்.

அகிலன் இவளை விட இரண்டு வயது சிறியவன். இவளை அழ வைக்கவென்றே பிறந்தவன். இவர்கள் சண்டை பிடிக்காமல் ஒரு நாள் நகர்ந்ததென்றால் இருவரில் ஒருவர் வீட்டில் இருக்காத நாள் தான்.

இவளும் விட்டு கொடுத்து போக மாட்டாள். சண்டை என்று வந்து விட்டால் இரண்டில் ஒன்றை பார்த்து விடுவோம் என்ற முடிவோடு தான் இருப்பாள்.

மற்றைய நாளாக இருந்தால் இந்நேரம் அவன் தள்ளி விட்டு சென்றதுக்காக அவனை நோக்கி எதையாவது வீசி எரிந்திருப்பாள். ஆனால் இன்று அமைதியாக அவன் தள்ளி விட்டதில் சுவரோடு ஒட்டி நின்றவள் அப்படியே நின்று கொண்டாள்.

எங்கே தன்னை நோக்கி எதுவும் இன்னும் பறந்து வரவில்லையே என திரும்பி பார்த்த அகிலன் அவள் அமைதியாய் இருப்பதை பார்த்து விட்டு "அம்மா... இன்னைக்கு எதையும் வெளில காய வெச்சிராதீங்க... இன்னைக்கு மழை தான்..." என சொல்லி விட்டு வாஷ் ரூமுக்குள் நுழைந்தான்.

தாய் அஞ்சலி சட்டியில் இருக்கும் எதையோ கிளறிக்கொண்டே "காலைலயே அவள சீண்டாதன்னு எத்துண தடவை உனக்கு சொல்லி இருக்கேன்... சட்டு புட்டுன்னு உன் வேலைய முடிச்சிட்டு வா... அவளுக்கு கிளாஸ் இருக்கு... அவ நேர காலத்தோட போகணும்..." என குரல் கொடுத்தார்.

நீங்கிச் செல்லாதே!Where stories live. Discover now