சிவ கீதை : 18

11 1 0
                                    


கர்ப்ப கோசத்திலிருந்து வெளிப்பட்ட சிசுவானது அந் நிலையில் யாதும் செய்ய இயலாதவனாய் நாய், பூனை போன்றவற்றில் இருந்து ஜனங்களால் பாதுகாக்கப்படுபவனாக இருக்கிறான். அச் சிசு ராக்ஷஸனை தகப்பன் போலும் டாகிநீ தேவதையை தாய் போலும் எண்ணுகிறான்.

சீழையும் பாலையும் பிரித்தறிய முடியாத சிசுப்பருவம் எவ்வளவு கடினமானது...
எத்தனை காலம் ஸுஷும்னை எனும் நாடி கபத்தினால் சூழப்பட்டுள்ளதோ அத்தனை காலம் வரையும் சிசுவால் பேச இயலாது. இக் காரணத்தினாலே கர்ப்பத்திலும் சிசுவிற்கு அழுவதற்கியலுவதில்லை.

பின்னர் இளமைப்பருவம் வந்ததும் முன்ஜென்மம் குறித்தும், கர்ப்பகால சத்தியங்கள் குறித்தும், கர்ப்பகால வாசம் குறித்தும் அனைத்தும் மறந்தவனாய் ஸ்திரீ போகம் ஒன்றிலேயே பெரிதும் ஆவல் கொண்டவனாய் சற்று நேரம் பாடுவதும் சற்று நேரம் ஓடுவதும் போன்ற செயல்களைச் செய்கின்றான். வேகமாய் மரத்தில் ஏறுகிறான், பெரியோர்களைத் துன்புறுத்துகின்றான். காமக்குரோதங்களால் யாதும் அறியாதவனாய் அனைவரையும் அலட்சியம் செய்கிறான். ஸ்திரி போக இச்சையால் நொந்து மனதினால் மிகவும் தஹிக்கப்படுகின்றான்.

ஸ்திரீயின் தேகத்தை அஞ்ஞானத்தால் மோஹித்தவனாய் வாழ்கிறானே தவிர ஜகத்தைப் பற்றி சிறிதும் விவேகித்துப் பார்ப்பதில்லை. உயிரானது நீங்கிவிட்டால் பெண்ணின் உடலானது ஐந்தாறு தினங்களில் எவ்வாறு மாறும் என்று சிறிது கூட ஆலோசிப்பதில்லை.

இப்படியே இளமைப் பருவத்தைக் கடந்ததும் முதுமையடைந்து மிகவும் துன்புறுகின்றான். கபத்தினால் கட்டப்பட்ட மார்புடையவனாகின்றான். உண்ட உணவும்  சீராகசெரிப்பதில்லை. பற்களுதிர்ந்து பார்வையும் குன்றி சுவைகளைக் கூட பிரித்தறிய முடியாத நிலைக்கு உள்ளாகின்றான்.

வாயுவின் பீடையால் கோணிப்போன இடை, கழுத்து, கைகால்கள் உடையவனாகவும் பலமற்றவனாகவும் எண்ணிலடங்கா சோகங்களையுடையவனாகவும் தனது பந்துக்களாலேயே அவமதிக்கப்படக்கூடியவனாகவுமாகின்றான்.

சுத்தமில்லாதவனாகவும் எளிதில் கிடைக்காத போகங்களையே சிந்தித்துக்கொண்டு இருக்குமிடம் விட்டு அசையாமல் இருக்கின்றான். எவ்விந்திரியமும் வேலை செய்வதற்கு இயலாமற் போனமையால் சிறுபாலகர்களும் பரிகஸிக்கின்ற நிலையை அடைகிறான்.

அதன் பின் மரணகால துக்கத்திற்கு நிகரே இல்லை. பந்துக்களால் சூழப்பட்டிருப்பினும் சமுத்திர நடுவிலுள்ள நாகத்தை கருடன் கொண்டு செல்வதுபோல்  எமனால் கொண்டுசெல்லப்படுகின்றான். என் மனைவி.... என் பணம்... என் பிள்ளைகள் என மிக ஆழமான பற்று கொண்டு இருந்தாலும் தவளையானது பாம்பினால் விழுங்கப்படுவது போல் எமனால் கைப்பற்றப்படுகின்றான்.

எமனால் ஆன்மா கைப்பற்றப்படும்போது அடையும் நிலையையும் இம் மாயப் பிணிக்கு மருந்தையும் அறிந்திடலாம் அடுத்த பதிவில்.

தொடரும்....

🌷🌷🌷சர்வம் சிவார்ப்பணம்🌷🌷🌷

சிவகீதை (சம்பூர்ணம்)Where stories live. Discover now