சிவ கீதை : 41

15 1 0
                                    

எம்பெருமானை பக்தியுடன் நோக்கிய ராகவன் "ஓ பகவானே... தேவரீர் எவற்றால் பூஜிக்கப்படுகின்றீரோ, எவற்றிற்கு அனுக்ரஹிக்கின்றீரோ அதனைத் தெரிந்துகொள்ளும் பாக்கியத்தை எனக்கும் தந்தருள வேண்டும். தயைகூர்ந்து திருவாய் மலர்ந்தருளுங்கள்" எனப் பிரார்த்தித்தார்.
                            சீதாபதியின் வேண்டுதலை ஏற்ற கௌரிரமணன் கருணைபொங்கும் விழிகளுடன் விபரிக்க ஆரம்பித்தார்.
                            மண், பசுவின் சாணம், விபூதி, சந்தனம், மணல், சடை(மரம்), சிலை இவைகளினாலாவது இரும்பு, ஈயம், வெங்கலம், துத்திநாகம், பித்தளை, செம்பு, வெள்ளி, பொன், பலவிதமாயுள்ள ரத்தினங்கள், பாதரஸம், கற்பூரம் இவைகளினாலாவது செய்யப்பட்ட பிரதிமையாகிய லிங்கம் யாதொன்று உள்ளதோ, அதனில் என்னைப் பூஜிக்க வேண்டும். அதனால் உண்டாகும் பயனானது உத்தரோத்தரம்கோடி பங்கு அதிகமாகும்.
                            அடிக்கடி சுபத்தை விரும்பும் இல்லறத்தோன் மண்ணினாலாவது, மரத்தினாலாவது, வெண்கலத்தாலாவது, இரும்பினாலாவது, சிலையினாலாவது நிர்மாணிக்கப்பட்ட பிரதிமையைப் பூஜிக்க வேண்டும். அங்ஙனம் பூஜிப்பானாயின்...
முறையே,
         🔸ஆயுள்
         🔸செல்வம்
         🔸குலம்
         🔸தர்மம்
         🔸புதல்வர்கள் என அனைத்து இன்பங்களையும் பெறுவான்.
                                  எந்த மனிதன் வில்வ மரத்திலாவது அதன் கனியிலாவது என்னைப் பூஜிக்கின்றானோ அவன் இம்மையில் மிகுந்த செல்வமுடையோனாய் இருந்து, மறுமையில் என்னுலகையே அடைவான். எவனொருவன் வில்வமரத்தடியில் இருந்து மந்திரங்களை விதிப்படி ஜெபிப்பானோ, அவன் ஒரே தினத்தில் அம் மந்திரத்திற்கு புரஸ்சரணஞ்(சித்தி சமயத்தில் செய்யும் கிரிகை) செய்யத்தகும்.
                                  எந்த ஒரு மனிதன் வில்வ வனத்திலேயே ஆச்சிரமத்தை அமைத்துக்கொண்டு எப்போதும் வசிப்பானோ, அவனிற்கு சகல மந்திரங்களும் வெறும் ஜெபத்தினாலேயே சித்தியடைகின்றன.
                                  மலையின் சிகரத்திலாவது, நதிக்கரையிலாவது, வில்வமரத்தின் அடியிலாவது, சிவாலயத்திலாவது, அக்நிஹோத்ர சாலையிலாவது, விஷ்ணுவுடைய சந்நிதியிலாவது எவனொருவன் ஜபம் செய்வானோ அம் மனிதனிற்கு அசுரர்களும் யக்ஷ ராக்ஷதர்களும் இடையூறு செய்யவே மாட்டார்கள்.(யாராலும் இடையூறு செய்யவும் இயலாது.) அவனைப் பாவங்கள் தீண்டாது. அவன் சிவசாயுஜ்ஜியத்தை அடைகின்றான்.
                                  பூமியிலாவது, ஜலத்திலாவது, அக்நியிலாவது, வாயுவிலாவது, ஆகாயத்திலாவது, மலையிலாவது, இருதயக் கமலத்திலாவது எம் மனிதன் நியமத்தையுடையவனாய்க் கொண்டு என்னைப் பூஜிப்பானோ, ஓ தசரதபுதல்வனே! அவன் செய்யும் சொற்ப பூஜைமூலமாகவே சகல பலன்களையும் அடைகின்றான்.
                                  ஓ ரகுகுல ஸ்ரேஷ்டா! #தன்_இருதயக்_கமலத்தில் #இறைவனைக்_குறித்து_செய்யும் #பூஜைக்கு_நிகரான_பூஜையில்லை. புலயனாகவே இருந்தாலும் என்னை இருதயக் கமலத்தில் வைத்துப் பூஜிப்பவன் என் ஸாயுஜ்யத்தை அடைகின்றான்.
                                 
🔹கம்பள ஆசனத்தில் அமர்ந்து ஜெபிப்பவன் விரும்பிய சகலமும் கிடைக்கப்பெறுவான்.

🔹மான் தோலில் ஜெபித்தால் முக்தி நிகழும்.

🔹புலித்தோலில் இருந்து ஜெபித்தால் மோக்ஷச் செல்வம் கிட்டும்.

🔹தர்ப்பையால் செய்யப்பட்ட ஆசனத்தினால் ஞானம் கிட்டும்.

🔹இலையால் செய்த ஆசனத்தில் அமர்ந்து ஜெபித்தால் ஆரோக்கியம் உண்டாகும்.

🔹கருங்கல்லில் க்லேசம் நிகழும்.

🔹கட்டையினிலிருந்து ஜெபிப்பவன் பலவகைப்பட்ட வியாதிகளை அடைவான்.

🔹வஸ்த்திரத்தில் அமர்ந்து ஜெபிப்பவன் செல்வத்தையும் காந்தியையும் பெறுவான்.

🔹பூமியிலமர்ந்து ஜெபித்தால் மந்திரம் சித்திக்காது.
                                  ஜபத்தையும் பூஜையையும் வடக்கு அல்லது கிழக்கு முகமாகச் செய்தல் வேண்டும்.
                                 

தொடரும்...

🌷சர்வம் சர்வேஷ்வரர் லீலை🌷

சிவகீதை (சம்பூர்ணம்)Where stories live. Discover now