சிவ கீதை : 28

13 1 0
                                    

மரணமடைந்தபின் அவ் ஆன்மாவிற்கு என்ன தான் நிகழ்கின்றது...??
                                   பாவங்களின் பயனை அனுபவிக்க வேண்டிய ஆன்மாவானவன், மரணத்தின் பின் யாதனாதேகம்(பாவ பலன்களை அனுபவிக்கக்கூடிய தேகம்) எனும் வாயவ்யதேகத்தைப் பற்றி யமதூதர்களிற்கு உட்பட்டு நரகங்களையே அடைவான்.
                                     எவன் எப்பொழுதும் யாகம், நீர்த்தடாகம் அமைத்தல், அன்னசத்திரம் ஸ்தாபித்தல் போன்ற நற் கருமங்களை அனுஷ்டிக்கின்றானோ அவன், தான் பூஜித்த அக்னியை ஹேதுவாய்க் கொண்டு யமதூதர்கள் எனப்படும் ஆதிவாஹி முதலாகிய தேவதைகள் மூலம் பித்ருலோகம் செல்கின்றான். தூமதேவதை, ராத்திரி தேவதை, கிருஷ்ணபக்ஷ அபிமானிதேவதை, தக்ஷிண அபிமானிதேவதை ஆகிய இவர்கள் மூலமாகவே பித்ருலோகத்தை அடைகின்றான். சந்திர லோகத்தில் திவ்வியமான தேகத்தைப் பெற்று பெரும் சுகபோகத்தில் இருக்கின்றான். அந்த உலகத்தில் இந்த ஜீவன் சந்திரன் போன்றவனாய் கர்மபலன் அனைத்தும் அனுபவித்து முடியும் வரை வசிப்பான். அதன் பின் மீண்டும் போன வழியே திரும்பி வருகின்றான்.
                                     அவன் அவ் ஸ்தூல தேகத்தை விடுத்து ஜீவத்துவத்தை மாத்திரம் உடையவனாய் ஆகாயம், வாயு, மேகஹேது பின் மேகம் என இவைகளையடைந்து பின் மழை மூலமாய் கர்மங்களிற்குத் தக்கபடி தானியங்களும் உணவுகளுமாகின்றான்.
                                     ஜீவன்கள் சுகதுக்கங்களைப் புசிப்பதன் பொருட்டு சிலர் மீண்டும் கர்ப்பவாசத்தை நோக்கிப் பயணிக்கின்றனர். ஏனைய சிலரோ கர்மானுஷ்டமான சித்தசுத்தியின் படி சிரவணம் செய்தவண்ணம் முக்தியடைகின்றனர்.
                                     நாம் தற்போது முதல் வகையினரான கர்ப்பவாசத்தை நாடும் ஜீவன்களைக் குறித்துக் காணலாம். இவ் வகை ஜீவன் பூமிக்கு உணவு வழி வந்த பிறகு அன்னமாய் தாய் தந்தையர்களால் புசிக்கப்படுகின்றான். பின் சுக்கிலமாயும் சோணிதமாயும் ஏற்பட்டு கர்ப்பம் ஏற்படுகின்றது. பின் கர்மத்திற்கு தக்கபடி பெண் அல்லது ஆண் அல்லது அலியாய் உருப்பெறுகின்றான்.
                                     இவ்வாறு ஜீவன்களின் கதி கூறப்பட்டது.  இனி அவனுடைய முக்திக்கிரமத்தை உரைக்கின்றேன் கவனமாய்க் கேள் ராமா.
                                     எவன் சாந்தி தாந்தி(மனவடக்கம்) முதலியவைகளை உடையவனாகக்கொண்டு எப்போதும் ஸகுணோபாஸ்தியில் ஆவலுற்று இருக்கின்றானோ அந்த மனிதன் "தேவயாநம்" எனும் மார்க்கத்தினால் பிரம்மலோகம் செல்கின்றான். அர்ச்சிஸ்(மோக்ஷத்திற்குச் செல்வோரை முதலிற்கண்டு உபசரித்து வழிநடத்தும் தெய்வம்) வடிவமாய்த் தினாபிமானி தேவதையை அடைந்து பின் சுக்லபக்ஷ அபிமானி தேவதையை அடைந்து அதன் பின் கிருஷ்ணபக்ஷ அபிமானி தேவதையை அடைந்து அதற்கும் பின் ஸம்வத்ஸர அபிமானி தேவதையையும் அடைகின்றான்.
                                     பின் ஆதித்ய சந்திர லோகங்களையும் அதனையடுத்து வித்யுல்லோகத்தையும் அடைகின்றான். அதன் பின் திவ்யபுருஷன் ஒருவன் பிரம்மலோகத்திலிருந்து அங்கு வருகின்றான். அவன் அவ் ஜீவனை திவ்விய தேகம் உடையோனாகச் செய்து அழைத்துக்கொண்டு செல்கின்றான். பிரம்ம லோகத்தில் திவ்விய தேகத்துடன் இருந்து, விரும்பிய போகங்களைப் புசித்துக்கொண்டு வெகுகாலம் இருந்து பிரம்மனோடு கூட முக்தியடைகின்றான்.
                                     யாதொருவன் சுத்த ப்ரும்மத்தை உபாசிக்கின்றவனோ அவன் ஓரிடத்திற்கும் செல்வதில்லை. அவனுடைய பிராணன் உப்புகல்லுடன் இணைந்த நீர்போல ப்ரம்மத்துடனேயே லயமடையும். (நீருடன் சேர்ந்த உப்பானது தன் சுவை முழுவதையும் நீருடையதாக்கி தனனோடு ஒப்பச் சமன் செய்து நிற்கும். அது போலவே விரும்பி உயிரைச்சார்ந்த இறைவனும் தனக்குரிய எண்குணங்களையும் அவ் உயிரிற்கும் வழங்கி தன்னோடொப்பச் செய்து நிற்பார்)

தொடரும்...

🌷சிவனார் பேரருள்🌷

சிவகீதை (சம்பூர்ணம்)Where stories live. Discover now