5•

53 6 0
                                    

          தாய்வீடும் தங்கையின் குழந்தையுமென்று தன் மனைவி இந்நாட்களில் மலர்ச்சியாகவே தன் கண்களுக்குக் காட்சி தருவதனால் அர்ஷாதின் மனமிங்கு நிறைந்து வழிந்து கொண்டிருந்தது.

அதே நிறைவுடன் அன்றும் இரவு வேலைவிட்டு மாமியின் வீட்டிற்குச் சென்றவனை வரவேற்றவளோ யாருடனும் பேசப் பிடிக்காது அறையில் அடைந்து கொண்டிருந்த ஆசியாதான்.

அவன் எதற்குப் பயந்தானோ, அதுவே அங்கு அச்சொட்டாக நடந்திருந்தது.

தன் தாயும் தங்கையும் தன்னை வந்து தேற்ற, தன் அழுகையை மௌனத்தால் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவள் அர்ஷாதைக் கண்டதும் பொங்கி வந்த கண்ணீரை அடக்க முடியாது அழுது தீர்த்தாள்.

அவள் தலையைத் தடவியவன் அவளைத் தேற்றியவாறே ஆறுதல் மொழி பகர்ந்தான். இரவுணவையும்கூட அவள் ஒழுங்காக உட்கொள்ளவில்லை.

"வீட்டுக்குப் போவோம் வாங்களேன்"

"இப்ப நைட் இல்லயா? நாளைக்கு போவோம். இப்ப ஒன்டும் யோசிக்காம தூங்குங்க ஆசியா."

அவளை ஒருவாறு தூங்கச் செய்தான் அர்ஷாத்.

அவளுக்கும் தெரியும். இந்த சோதனைகள் எல்லாமே இறைவனின் அன்பின் வெளிப்பாடுகள்தான். இந்தப் பார்வைக் கோணத்தில் இறைவனின் பக்கமிருந்து வரும் சோதனைகள் யாவுமே அடியானுக்குக் கிடைக்கும் கௌரவிப்புக்களே.

ஆனாலும் இடையறாது ஒவ்வொரு வகைகளிலும் அது அவளது முகத்திற்கு முன்னால் நினைவு கூறப்படும் வேளைகளில் தான் மனதளவில் உடைந்து கரைவதை அவளால் தடுக்க முடிவதில்லை.

தாயாரினதும் தங்கையினதும் பக்கபலமும் கணவனின் அரவணைப்பும் படைத்தவனோடிருக்கும் பிரார்த்தனை எனும் தொடர்புப் பாலமும்தான் அவளைக் கொஞ்சமாவது ஆசுவாசப்படுத்தின.

விடிந்ததும் பஜ்ரைத் தொழுதுவிட்டு 'முஸல்லா'வில் அமர்ந்திருந்த ஆசியா, அர்ஷாத் பள்ளிவாசலிலிருந்து வந்ததுமே வீட்டிற்குப் போகவென்று ஆயத்தமானாள். யார் தடுத்தும் அவள் கேளாததால் அவள் தாயார்தான் தேநீர் தயாரிப்பதைக் காரணங்காட்டி அவர்களைக் கொஞ்சம் தாமதமாக அனுப்பி வைத்தார். 

மனமுடைவுடன் ஆசியா அங்கிருந்து சென்றமை அவள் வீட்டினர் எல்லோருக்குமே கஷ்டத்தைக் கொடுத்தது. ஷிரீனுக்குத்தான் அந்தப் பெண்மணியின் மீதிருந்த கோபாவேச வெறி போகப் போக பூதாகரமாகியது.

"பேசாம இன்னும் கொஞ்ச நாள் இரியேன் dதாத்தா. ப்ளீஸ்.."

குழந்தையின் உடல் முழுவதும் முத்தங்களைப் பதித்துக்கொண்டிருந்த ஆசியாவிடம் கெஞ்சினாள் ஷிரீன்.

"இல்ல ஷிரீன். எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. வீட்டுக்குப் போகனும் போல.. கட்டாயம் டக்குன்டு வருவேன் என் செல்லத்தைப் பார்க்க.. போயிட்டு வாரேன்"

மனமேயில்லாமல்தான் ஆசியாவை வழியனுப்பி வைத்தாள் ஷிரீன்.

அர்ஷாதுடன் வீட்டுக்குச் சென்றவள் அன்று ப்ரீ ஸ்கூலுக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கவே அர்ஷாதும் ஏதும் கேட்காமல் தானும் வேலைக்குச் செல்லாது வீட்டிலிருந்தான். அப்படிப்பட்ட மனநிலையுடன் அவளை ஒருபோதும் வீட்டில் தனியே விட்டுச் செல்வதில்லை அவன்.

வழமையான சுறுசுறுப்போ உற்சாகமோ மருந்திற்கேனும் இல்லாமலே தன் வேலைகளைப் பார்த்துக்கொண்டும் அறையில் அமர்ந்து கொண்டும் தொழுது கொண்டுமிருந்தாள் ஆசியா.

அர்ஷாத் தான் இடைக்கிடை அவளை இயல்பாக்கும் பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொண்டவாறு இருந்தான். அன்று அவளுக்குப் பிடித்ததை மட்டுமே சமைத்தான்.

நாட்கள் ஓட, கொஞ்சமாக அவளது உற்சாகம் தலைதூக்கிப் பார்க்கத் தொடங்கியிருப்பினும் பாலர் பாடசாலை தவிர வேறெங்குமே அவள் வெளியில் செல்வதை விரும்பவில்லை. அர்ஷாதின் மனம்வேறு தன் மனைவியை இவ்வாறு பார்க்கையில் கஷ்டத்தைக் கண்டெடுத்துக் கொண்டது.

தன் தாய்வீட்டிற்கு மட்டும் ஓரிரண்டு தடவைகள் சென்று வந்தாள். தவிர வீடே கதியென்று கிடந்தாள் ஆசியா.

நினைத்தது எல்லாம்..✔Where stories live. Discover now