ஆடிக் கொடை

805 98 216
                                    

ஆள் உறங்குமளவு விரிந்திருந்த அந்த வாழை இலையில், சோறு குன்றென குவித்து வைக்கப் பட்டு, கொற்றவையின் காலடியை நிறைத்திருந்தது. சோற்று குவியலின் மேல் அன்று பலியிடப்பட்ட ஆடு, பன்றி, எருமையின் தலைகள் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தன, அவற்றின் அறுக்கப்பட்ட காதுகள், இலையை சுற்றிலும் அணிவகுத்தன. அன்று ஆடிக் கொடை , ஓராண்டுக்கு ஒருமுறை வரும் கொற்றவையின் நாள், சுற்றியிருக்கும் அனைத்து பாலை மக்களும் அந்த நாளில் இங்கு ஒன்று கூடுவர், பறை காதை கிழிக்கும், பல்வேறு பூசைகள் , பலிகள் , வேண்டுதல்களென அந்த ஒரு சாமத்தை மறக்க ஒரு வருடம் தேவைப்படும், இந்த முறை அப்படி எதுவும் நிகழவில்லை.
பாலையின் எல்லையை தாண்டும் சனக்கூட்டம் , இம்முறை கொற்றவை பூடத்தை தாண்டவில்லை, நடனமாடும் விறலியர் இல்லை, பண் இசைக்கும் பாவலர் இல்லை, மக்களின் வேண்டுதல்களில் உயிர் இல்லை, பறை இரைந்ததே அன்றி இசைக்கவில்லை. பலி கெடாக்களின் ரத்தம் குடித்து தாளாமல் கொப்பளிக்கும் நிலத்திற்கு இம்முறை தொண்டை கூட நனையவில்லை . சாமத்தை தாண்டி பகலிலும் நீளும் கொடை , இம்முறை இரண்டாம் சாமத்திற்குள் அடங்கி விட்டது, ஏன் கொற்றவைக்கு துணையாய் கோணங்கி கூட இல்லை, அந்த கரும்பாறையில் பதினைந்து அடி உயரத்துக்கு பூதாகரமாக நின்று அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள், ஆயிரமாண்டுகளாய் கல்லில் படிந்த எண்ணை அவளை நிலவொளியில் ஒளிர வைத்தது. பாலை நில வாசிகள் வீரர்கள் முரடர்கள் கயவர்கள் ஆனால் மருந்துக்கு கூட சிற்பிகள் இல்லை, அதனால் தம் மக்களை போலவே அவளும் உடல் முழுதும் காயங்களைக் பெற்றிருந்தாள், கண்கள் தவிர அவள் உடலின் எந்த அங்கமும் உழியால் குதறப்படாமல் இல்லை, ஆனால் கண்கள் போதும் அவளுக்கு. அவள் கண் பார்த்திராத தொலைவே இல்லை, அந்த பாலையின் எல்லா வீடுகளும் அவள் இடத்திலிருந்து பார்த்தால் தெரியும், சின்ன சின்னதாய் பனை ஓலையில் வேய்ந்த வீடுகள் அனைத்தும் ஒரே உருவம் , அப்பாலையின் காளையனின் வீடு மட்டும் சற்று உயர்ந்து கொற்றவையின் பூடத்தின் எதிர் புறமே அமைந்திருந்தது. அவன் தான் கொற்றவையின் தலைமகன், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னாள் அவன் காளையனாய் பொறுப்பேற்ற போது , விடலையனென எவரும் அவனை நம்ப வில்லை, இன்று இந்த பாலை மட்டுமின்றி சுற்றி இருக்கும் எட்டு பாலையும் இவன் முழக்கத்துக்கு அடங்கும், கட்டியங் காளையன் என அவன் பெயர் சொன்னாலே, வெட்டாறு உருவாகும் குறிஞ்சியில் இருந்து அது கலந்து கடலாகும் நெய்தல் வரை, மன்னாதி மன்னறர்கும் தொண்டை அடைத்துக் கொள்ளும், அவன் மார்பை போர்த்த, ஒரு புலியின் தோல் போதாது, அவன் தூக்கி எரியும் வேல் தொடும் உயரத்தை எட்ட எந்த பனைக்கும் உயரம் போதாது. காலமெங்கும் கட்டளைகளாய் முழங்கியதாலோ என்னவோ இன்று அவன் தன் குழந்தைக்கு கூறும் கதையும் கர்ஜனையாய் அவ்விடத்தின் மௌனத்தை சிதைத்தது.

கொற்றவைWhere stories live. Discover now