🕵40🕵

963 111 185
                                    

"ஆகாஷ்... இங்கே என்னை பார்!" என்று அவன் முகத்தை தன் இரு கைகளாலும் நேராக தாங்கி சில நொடிகள் விழிகளை ஊடுருவிய ஜெய்சங்கர், "உனக்கு நான் எதுவும் தனியாக விளக்கவே தேவையில்லாமல் இத்தனை விஷயங்களையும் நீ புத்திசாலித்தனமாக தானாகவே தெரிந்து வைத்திருக்கிறாயே... இன்னும் நான் சொல்லப் போகும் மீதி விஷயத்தையும் கொஞ்சம் பொறுமையாக கேட்க வேண்டும் என்ன?" என்றான்.

"என்ன... இங்கிருந்து நான் போய் தான் ஆக வேண்டும் என்று சொல்லப் போகிறீர்களா?" என சோகமாக கேட்டவனை தன் மடியில் அமர வைத்து விரல்களை மென்மையாக வருடினான் ஜெய்.

அங்கே நடப்பவற்றையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர் நரசிம்மமூர்த்தி வியப்பின் உச்சத்தில் இருந்தார். இதுவரை அவர் எத்தனையோ நோயாளிகளை மனரீதியாகவும், ஆன்மாவின் தொடர்பால் பாதித்தவர்களாகவும் பலவகையில் கண்டு குணப்படுத்தி வந்திருக்கிறார். ஆனால் தன் வாழ்நாளில் அவர் இப்படியொரு கேஸை பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை, ரத்த பந்தமில்லாத ஒரு சொந்தத்திற்காக பிரிவதை பற்றி இருப்பிரிவினருமே இவ்வளவு தூரம் வருந்துவது அவரையும் சில நிமிடங்களுக்கு உணர்ச்சிவசப்பட தான் வைத்தது.

"உன்னிடம் எதையும் நான் வற்புறுத்தப் போவதில்லை, என்னுடைய வார்த்தைகளின் முடிவில் உன் முடிவை நீயே சொல். நீதான் புத்திசாலிப் பையன் ஆயிற்றே... நிதர்சனம் உணர்ந்து பதிலளிப்பாய் என நம்புகிறேன். அன்று உன்னை நான் நிண்ணியூரில் காப்பாற்றவில்லையே என்ற கோபம் உனக்கிருந்தது நியாயம் தான், கொஞ்சம் ஜாக்கிரதையாக விஷயத்தை கையாள வேண்டும் என்ற எண்ணத்தில் உன் உயிரை கோட்டை விட்டு விட்டேன்!" என வேதனையோடு பெருமூச்செரிந்தவன் அவன் முகம் பார்த்து விழிகள் கலங்க, "இன்று வரை அதற்காக குற்றவுணர்வில் தவித்துக் கொண்டு தானிருக்கிறேன். எத்தனை பேருக்கு உதவிகரமாக இருந்தாலும் என் உயிருள்ள வரை அந்த வடு மட்டும் என்னுள் அழியவே அழியாது. நீ இறந்தது தெரியாமல் ஒருபுறம் உன்னை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான் எங்கள் சேனலில் இருந்து அழைத்து ஏரியில் ஒரு சிறுவனின் சடலம் மிதப்பதாகவும் விசாரித்து செய்தி அனுப்புமாறும் கூறினார்கள். ஏனோ தெரியவில்லை அந்த கணமே என் மனதில் இனம்புரியா பாரம் ஏறி உளைச்சல் தோன்றியது. வந்த இடத்திலும் அது நீதான் என தெரிந்ததும் உதவி கேட்டு வந்தவனை காப்பாற்ற இயலவில்லையே என்று என்னையே நான் வெறுத்தேன். உணர்வில்லாமல் நின்றிருந்த எனக்கு உன்னை பற்றிய விவரம் கேட்டு காவலர்கள் விசாரிக்கும் பொழுது ஒருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை என்கவும் முதலில் குழப்பம் தோன்றியது. பிறகு உன் குடும்பத்தின் நிலையை தெரிந்துக் கொள்ள நீங்கள் குடியிருந்த ஊரில் சென்று விசாரித்தேன். அப்பொழுது தான் உங்கள் குடும்பம் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக யாருடைய தொடர்பிலும் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. ஏதோ பெரிய பிரச்சனை என புரிந்து உன்னை காப்பாற்ற முடியவில்லை என்றாலும் பரவாயில்லை அதற்கு பிராயச்சித்தமாக உன் குடும்பத்தினரையாவது காப்பாற்ற வேண்டும் என்று தான் ஏற்கனவே உனக்காக போட்டிருந்த திட்டத்தை செயல்படுத்தி உன்னை அந்த முரடர்கள் இழுத்து சென்ற இடத்தை அடைந்தேன்!" என அன்றைய நிகழ்வுகள் முழுவதையும் விளக்கமாக கூறினான்.

என்னை தெரியுமாHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin