தீயாய் சுடும் என் நிலவு 30

2.1K 92 18
                                    

"என்னை விரும்பின ஒரு பொண்ணு இப்படி கஷ்டப்படறது மனதை வருந்த அவளுக்கு பேசி புரிய வைக்கணும்னு நிறைய முறை போன் பண்ணேன். ஆனா, அவ எடுக்கலை. வீட்டுக்கு வந்து உன்னை பார்க்கவும் பாவமா இருந்துச்சு. உங்க ரெண்டு பேருக்கும் நான் உண்மையா இல்லைன்னு ரொம்ப நொந்து போனேன்.

அப்போ தான் அன்னைக்கு காலைல உன்கிட்ட சந்தோஷமா பேசிட்டு ஆஃபீஸ்கு போனேன். மறுபடியும் என் பிரென்ட் போன் பண்ணான். அவன் சொன்னதை கேட்டதும் எனக்கு வாழ்க்கையே வெறுத்துட்ட மாதிரி இருந்துச்சு" என்று நிறுத்தினான்.

அவனின் கரத்தை எடுத்து தன் இரு கரங்களுக்குள் மென்மையாய் பிடித்து கொண்டாள். அவளின் இந்த சின்ன ஆறுதல் கூட பெரிதாக பட்டது தீரனுக்கு.

"சோபியா விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிகிட்டதா எனக்கு தகவல் வந்தது. அவ்ளோ தான் எனக்கு என் மேலேயே ரொம்ப வெறுப்பு. எல்லோர் மேலயும் கோவம் எல்லை மீறுச்சி. ஆபிஸ்ல இருக்க முடியலை. சோபியா என்னை பத்தி என்ன நினைச்சிருப்பா? இவனை நம்பினதுக்கு அவ உயிரை விட்றது தான் ஒரே வழின்னு உயிரை விட்டிருப்பாளோன்னு தோணுச்சு. எத்தனை முறை நான் மன்னிப்பு கேட்டாலும் அவளோட ஆத்மா என்னை மன்னிக்கவே மன்னிக்காதுன்னு ஊமையாய் அழுதேன். என்ன இருந்தாலும் நான் நேசிச்ச முதல் பெண். அந்த சோகத்தை மறக்க முடியாதுன்னாலும் வழக்கம் போல் குடிக்க சென்றேன். எவ்வளவு நேரம் என்று தெரியாது அளவு தெரியாமல் குடித்தேன். எப்படி இருந்தாலும் தூங்க வீட்டுக்கு வந்து தான ஆகணும். போதை தலைக்கேறிய நிலையில நண்பனின் உதவியோடு வீட்டுக்கு வந்தேன்" என்றவன் தன் முகத்தை இரு கரங்களால் மூடிக்கொண்டு அழுதான்.

என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் போனாலும் தான் விரும்பிய உயிர் அழுவதை பார்க்க முடியாமல் அவனை தன் நெஞ்சோடு சாய்த்துக்கொண்டு அன்னையானாள்.

சிறிது நேரம் கழிந்தவுடன் மீண்டும் பேச தொடங்கினான்.

"வீட்டு வாசல் வரை நண்பன் விட்டுட்டு போக அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு எதுவுமே ஞாபகம் இல்லை. மறுநாள் எப்பவும் போல கண் முழிச்சா நீ வீட்ல இல்ல. தலைவலி ரொம்ப அதிகமாக வீட்டுக்குள்ளயே தேடினேன். நீ இல்ல. அக்கம் பக்கத்துல கேட்டா யாருக்கும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. ஏற்கனவே ஒருத்தியை தொலைச்சிட்டேன். இப்போ உன்னையும் காணாமல் பைத்தியம் மட்டும் தான் பிடிக்கவில்லை." என்று நிறுத்தினான்.

தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு)Where stories live. Discover now