Chapter 03 of 16

33 4 0
                                    

நான் ராமன் வீட்டுக்குச் சென்றபோது அவர் வீட்டுக்கு வெளியே பதட்டமாக நின்றுகொண்டிருந்தார். என்னைக் கண்டதும் விரைந்து வந்து என் கையைப் பற்றிக்கொண்டார். அவர் நிறைய அழுதிருக்க வேண்டும். அவர் கண்களில் தூக்கத்தின் சாயலே தெரியவில்லை.

"விக்னேஷ் ..." அதற்குமேல் வார்த்தைகள் எழும்பவில்லை.

"கீதா பேசினா. அனிதா எங்க?"

ராமன் என்னை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

"நாங்க யாருக்கும் எந்த கெடுதலும் செஞ்சதில்ல. எங்களுக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்குது?" கிச்சனிலிருந்து சுவேதாவின் விசும்பலைக் கேட்க முடிந்தது.

"அழாதீங்க. எல்லாம் சீக்கிரமே சரியாப் போயிடும்" கீதாவின் ஆறுதல் வார்த்தைகள் தொடர்ந்தன.

நாங்கள் அனிதாவின் ரூமிற்குச் சென்றோம். அனிதா தன் கைகளை முழங்கால்களுக்கிடையில் வைத்துக்கொண்டு சுருண்டு கட்டிலில் படுத்திருந்தாள். சிவப்புக் கலர் நைட்டி அணிந்திருந்தாள். அது போன வருடம் இருவரும் ஷாப்பிங் போயிருந்தபோது அருகிலிருந்த கடை ஒன்றில் கீதா வாங்கிக் கொடுத்தது.

அவள் எங்களைப் பார்த்துக்கொண்டு பக்கவாட்டில் படுத்திருந்தாள். கண்கள் மூடியிருந்தன. ஆனால் அவள் தூங்கவில்லை என்று எனக்குப் பட்டது. கண்களுக்குக் கீழே கன்னம் சற்று ஈரமாக இருந்தது. அவள் பொன்னிறக் கழுத்தைச் சுற்றித் தெரிந்த நீண்ட சிவந்த தடிப்பு, ஒரு மணி நேரம் முன்னதாக அவள் செய்ய முயன்றதைச் சொல்லாமல் சொன்னது. என்னால் ஸ்டெடியாக நிற்க முடியவில்லை. அறையிலிருந்த ஜன்னலுக்குச் சென்று அதைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டேன். வயிறு பந்துபோல் சுருண்டுகொண்டது. இதயம் கனத்தது. கண்களில் கண்ணீர் நிரம்பி நின்றது.

'விக்னேஷ் ... கனட்ரோல் பண்ணிக்க. ஒரு பெரிய சுமையைத் தாங்கவேண்டியிருக்கிறது. இந்தக் குடும்பத்தில் வேறு யாராலும் அந்தப் பொறுப்பைத் தாங்கமுடியாது. அனிதா உன் கண்ணில் நீர் வழிவதைப் பார்த்தால், அவள் மீண்டும் விரக்தியடைந்துவிடுவாள். கண்ட்ரோல் பண்ணிக்க.' இந்த சுயதேற்றுதல் எந்த அளவுக்கு உதவும் என்று எனக்குத் தெரியவில்லை.

Despair to Hope (Tamil Version)Where stories live. Discover now