Chapter 07 of 16

32 2 0
                                    

"... அப்படி ரமணர் சிறுவனாக இருக்கும்போதே இங்கு வந்து தியானம் செய்துகொண்டிருப்பார். சிவப்பு எறும்புகள் எல்லாம் அவர் கால்களில் ஏறிக் கடிக்கும். அதை எதையும் பொருட்படுத்தாமல் அவர் தியானத்தில் மூழ்கியிருப்பார் ..." சன்னதி குருக்கள் ரமணர் கதையை சுவாரஸ்யமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். நான் அந்த சம்பவங்கள் எல்லாம் முன்னமே புத்தகத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால், அனிதா கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். நான் குருக்களின் கதை சொல்லும் நேர்த்தியை ரசித்துக்கொண்டிருந்தேன்.

அது திங்கட்கிழமை காலை. நாங்கள் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயிலில் பாதாள லிங்க சன்னதியில் நின்றுகொண்டிருந்தோம்.

நான் இரண்டு நாட்கள் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்திருந்தேன். கீதா சுவேதா வீட்டுக்குச் செல்ல விரும்பினாள். காலை உணவு முடித்ததும் நாங்கள் நெய்வேலியிலிருந்து கிளம்பிவிட்டோம். அங்கிருந்து ஒண்ணரை மணிநேர டிரைவ்.

நாங்கள் அந்த பாதாள லிங்க சன்னதியிலிருந்து வெளியில் வந்து, கோவிலின் பரந்து விரிந்த திறந்தவெளி முற்றத்துக்கு வந்தோம். ஒரு மூலையில் இருந்த படிகளில் அமர்ந்தோம். அனிதா கோபுரத்தைப் பார்த்து உட்கார்ந்துகொள்ள, நான் தொண்ணூறு டிகிரியில் கொடிமரத்தைப் பார்த்து உட்கார்ந்து கொண்டேன். அவள் லைட் சாக்லட் கலர் சேலை அணிந்திருந்தாள். கண்களைச் சுற்றி இருந்த கருவளையங்கள் மறைந்திருந்தன. அவள் முகத்தில் எதிர்காலத்தைப் பற்றிய கவலை இன்னும் நீங்கவில்லை. ஆனாலும் நேற்றைவிட முகம் இன்று சற்று தெளிவாக இருந்தது. கழுத்தைச் சுற்றி இருந்த நீண்ட சிவப்புத் தடிப்பு மறைந்திருந்தது.

"என்ன, அங்கிள்?"

"ஒன்றுமில்லை."

"நீங்க என்னயப் பார்த்துட்டிருந்தீங்க?"

அவள் கழுத்தை நான் பார்க்க யத்தனித்ததை அவள் கவனித்திருக்க வேண்டும்.

"சும்மாதான்."

"நீங்க என்ன பார்த்தீங்கன்னு எனக்குத் தெரியும்."

Despair to Hope (Tamil Version)Where stories live. Discover now