நண்பா நிறுத்திவிடு!!

17 4 2
                                    

பிழைகளை மறைக்க
பிதற்றுவதை நீ
நிறுத்திவிடு

நீ
பிழைப்பதற்காய் பிறரைப்
பிழைகாண்பதையும்
நிறுத்திவிடு

உன் பிழையில்
நியாயம் தேட
நினைப்பதை நீ
நிறுத்திவிடு

எடுத்ததற்கெல்லாம்
அடுத்தவனை
விரல் நீட்டுவதையும்
நிறுத்திவிடு

இயலாமையிலிருப்பவனிடம்
உன்னியலுமையைக் காட்டிட நினைப்பதை
நீ நிறுத்திவிடு

நம்பியவனை
நட்டாற்றில் விடும்
பழக்கத்தையும்
நிறுத்திவிடு

எதிரியைக்கூட
முதுகில் குத்தநினைக்கும்
குணத்தை நீ
நிறுத்திவிடு

ஆணவம் கொண்டு
ஆடுவதை நீ
நிறுத்திவிடு

அடுத்தவன்
அம்மணம் தேடி
வாழ்வதையும்
நிறுத்திவிடு

இழிவாய் ஒருவனை
பார்ப்பதை நீ
நிறுத்திவிடு

உயர்வென
உன்னை
நினைப்பதையும்
நிறுத்திவிடு

ஓ..!! நண்பனே..
உன்னனைத்து
செயல்களின் பின்னும் -

- காற்புள்ளியிட்டு
தொடர நினைக்காதே
முற்றுப்புள்ளியிட்டு
முடிக்கவும் நினைக்காதே

நறுமணத்தையும்
துர்நாற்றத்தையும்
பிரித்தறியும்
புத்தியைக் கொண்டவன் நீ

பகுத்தறிவுடன் - உன்
பயணத்தில்
தொடர்ந்து செல்

- தகுந்த இடங்களில்
காற்புள்ளிகளையும்
முற்றுப்புள்ளிகளையும்
வைத்துக்கொண்டு

பகுத்தறிவுடன் - உன்
பயணத்தில்
தொடர்ந்து செல்

இறுதியில்...

இந்த உலகம்
உன்னைப் போற்றாவிடினும்
ஒரு உள்ளமேனும்
உனைப்போற்றும்

அன்பனே...
அன்று நீ காண்பாய்
இந்த வாழ்க்கையின்
உண்மை வெற்றியை

அதுவரை...
உனையாழ நினைக்கும்
அரக்க குணத்தை
முற்றுப்புள்ளியிட்டு நீ
நிறுத்திவிடு

****

என் பாதை என் நியதி Where stories live. Discover now