காகிதக் கனவுகள்

7 2 0
                                    

அவன் கனவுகளை எல்லாம்
அந்தக் காகிதங்களுக்குள்ளே
கண்ணீராய் சிந்தி
காத்துவைத்திருக்கிறது அவன் பேனா...

அடிக்கடி அதையெடுத்து
அவன் வாசிக்கும் போதெல்லாம்
கடலினில் மூழ்கியவன் மோலெழுவது போல்
பெருமூச்சு விடுகையில்
விளக்கே அணைந்து போகும்

அலை வந்து அழித்த
காலடித்தடம் போல்
அழிந்து போன கனவுகள் எத்தனையோ
கடலோரக் கோபுரங்கள் போல்
சிதைந்து போன கனவுகள் எத்தனையோ...

காட்டாற்று வெள்ளமாய்
கரை புரண்ட கண்ணீரை
அள்ளிப் பருகிய கனவுகள் தான் ஏராளம்
அதை அவன் தலையணையிடம் கேட்டால் தெரிந்து கொள்ளலாம்...

பூக்களாய் பொத்திவைத்த கனவொன்று
வாசம் வீசாமலே
வாடிப்போன போது
வலிகளையெல்லாம் கவியென வடித்து
மலரொன்றால் அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்திருக்கிறான்
அந்த நாட்குறிப்பேட்டில்....

சுவைக்க முடியாத கனவொன்றை
கவிதையாய் வரைந்து
சிறு துளி சக்கரை இட்டு
எறும்புகளை சுவைக்க வைத்திருக்கிறான்...

கறை படிந்த கனவொன்றை
துவைத்துத் தர முடியுமா என
வண்ணானிடம் வினவியிருக்கிறான்...

ஆகாயக் கோட்டை என்ற தலைப்பில்
ஆறேழு பக்கங்களுக்கு
கனவொன்றை கவிதையாக்கி
அபாபீல் கூட்டமொன்று
அடிமையாய் வேண்டுமென கேட்டிருக்கிறான்

கல்வீடு என்ற கவிதையின் கீழ்
அழகாய் ஒரு வீடு வரைந்து
அதில் அம்மாவின் பெயரை பொறித்திருக்கிறான்....

காந்தியை அவனுக்கு மிகவும் பிடிக்குமாம்
ஏனெனில்
கந்தலும் கிழிசலுமாய்த் தான்
அவர் ஆடையிருக்குமாம் என
கவிபாடியிருக்கிறான்...

சைக்கிள் என்ற கவிதைக்குக் கீழே
சிராய்ப்புகளுடன்
சிறுவனொன்றின் படம் வரைந்து
நிறைவேறாது போன அவன்
சிறுபராய ஆசைக்கு
உயிரூட்டியிருக்கிறான்..

பக்கங்கள் பிரட்டப்பட
துக்கங்களாய் அவன் கவிதைகள்
என்னை தாக்கிச் சென்றன...

இறுதியில்...
அவள் என்ற தலைப்பில்
ஆனந்தக் கவிதையொன்றை
பல வண்ண மைகளால்
எழுதிதிக்கொண்டிருந்தான்...

" நிறைவேறாத என் கனவுகள் தந்த
மொத்த வலிகளுக்கும்
இறைவன் தந்த மருந்து
அவள்!!! "
என ஆரம்பிக்கிறது அந்தக் கவிதை.

****

என் பாதை என் நியதி Where stories live. Discover now