கருப்பு முகமூடி

7 2 1
                                    

யாராவது எனக்கு
கருப்பு முகமூடியொன்று கொடுங்கள்
இரவோடிரவாக
இவர்களோடு கலந்து விட

நல்லிரவில் எனக்கு
நயவஞ்சகத்தை கற்பிக்க யாருமிருந்தால்
இன்றே என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்

கூடியிருந்து குழிப்பறிக்கும்
கண்கட்டு வித்தையறிந்த ஒருவரெனக்கு
குருவாக வேண்டும்
துரோகத்தனத்தில் நான் பட்டம் பெற
துரோனராய் எனக்கொரு குரு வேண்டும்

நாகரீகம் வளர்ந்தும்
நானின்னும் பட்டிக்காடாயிருக்கிறேனாம்
துரோகமெல்லாம் நாகரீகமெனும்
துஷ்டர்களின் கதையிது...

என் கண்ணீரைக் கண்டதும்
கைதட்டிச் சிரிக்கின்றனர்
கால் தடுக்கி நான் விழ
என் மேல் ஏறி நடக்கின்றனர்

அருகிலிருந்தே அடுத்தவனிடம்
கண்களால் கதை பேசுகின்றனர்
இது தப்பென்று ஒதுங்கினால்
அப்பாக்காலத்தான் என்கின்றனர்

நான் மட்டும் தனித்திருப்பதாலோ என்னவோ
தினம் இவர்களுக்கு இரையாகிறேன்
இனியும் என்னால் முடியாது
இன்றே இவர்களுடன் இணையப்போகிறேன்

யாராவது ஒரு முகமூடி கொடுங்கள்
நானும்
துரோகத்தை நயவஞ்சகத்தை கற்கப்போகிறேன்..

****

என் பாதை என் நியதி Where stories live. Discover now