~06~

53 10 6
                                    

             வழமையாக கிழக்கில் உதிக்கும் சூரியன் தான் அன்றும் உதித்தது. அதீனாவின் அறை ஜன்னல் வழியாகப் பாரத்தால் தெரியும் அதே மாமரம் தான் அங்கு இன்னும் ஒய்யாரமாக நின்றிருந்தது. அதன் கிளையில் இரு அணில்கள் அமர்ந்து இரகசியம் பேசிக் கொண்டிருந்தன.

தினமும் வருவது போலவே வீட்டுக்குருவிகள் கீச்சிட்டுக் கொண்டு பறந்து வந்து தரையிறங்கின; சிதறிக் கிடந்த பருப்பு விதைகளை சுவைத்தன. மரங்களின் இலைகள் இலேசாக அசைந்ததை அதீனா பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

ஒரு நாளும் அவள் இவ்வாறு இயற்கையை இரசித்தது கிடையாது. கடந்த ஒரு வாரத்தில் அவளுக்கு என்னென்னவோ நடந்து விட்டது. ஜன்னல்க்கட்டில் முழங்கையை ஊன்றி, உள்ளங்கையால் தாடையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு வெளியே பார்த்துக் கொண்டிருப்பது இப்போது பழக்கமாகி விட்டிருந்தது.

அடிக்கடி அடுத்த வீட்டு மொட்டை மாடியை மொய்க்கும் கண்களை திசை திருப்புவதற்குத் தான் அவள் எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது!

அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் அதீனாவின் தந்தையைத் தவிர அனைவரும் வீட்டிலிருந்தனர். வார இறுதி நாள் என்பதால் சற்று நிம்மதியாகத் தனியே அமர்ந்து கனவுலகில் மிதந்து கொண்டிருந்தாள் இவள்.

எதேர்ச்சையாக மீண்டும் கண்கள் மொட்டை மாடியைப் பார்த்து விட, அங்கே இவ்வளவு நேரம் அவளையறியாமலே அதீனா தேடிக் கொண்டிருந்த அய்னைன் குழந்தை தமீமுடன் நின்றிருந்தான். திரைச்சீலையை முழுமையாக இழுத்து மூடி விட்டு அறிவாளி போல ஒரு சிறிய இடைவெளியில் கண்ணை வைத்துப் பார்த்தவள் முகத்தில் தானாகவே ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

எந்நேரமும் கடுகு வெடித்தாற் போல முகறையை வைத்துக் கொண்டு ஒரு சிறு புன்னகையாவது புரியாத அய்னைனிடம் அவளுக்கு என்ன பிடித்துப் போயிற்று என்று தெரியவில்லை. ஆனால் எல்லாம் பிடித்துப் போயிற்று என்று மட்டும் புரிந்தது.

இதயத்திலோர் ஆணிWhere stories live. Discover now