66 நான் குடிக்கவில்லை

2.2K 109 19
                                    

66 நான் குடிக்கவில்லை

"நான் குடிக்கவில்லை" என்ற ஸ்ரீராமின் வார்த்தைகள் மிதிலாவின் நிலையை தலைகீழாய் புரட்டி போட்டது. சற்று நேரத்திற்கு முன்பு வரை, அவன் குடிக்காமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்த மிதிலாவுக்கு இப்பொழுது உதறல் எடுத்தது. அவள் கொண்டிருந்த தைரியம் அனைத்தும் காற்றில் பறந்தது. அவளுக்கு குப்பென்று வியர்த்துப் போனது. எந்த ஒரு அசைவுமின்றி, அவளிடம் இருந்து மிக முக்கியமான பதிலை எதிர்பார்த்து காத்திருந்த ஸ்ரீராமை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவனுடைய தீர்க்கமான பார்வை கூறியது அவன் பொய் கூறவில்லை என்று. அவன் குடிக்கவில்லை. அவன் அவளுக்கு வெகு அருகில் நின்று கொண்டிருக்கிறான். சற்று நேரத்திற்கு முன்பு வீசிய மதுவின் வாடை, இப்பொழுது அவன் மீது வீசவில்லை. தனது கோட்டில் மட்டும் மதுவை தெளித்துக் கொண்டு வந்திருப்பானோ...? தரையில் கிடந்த அவனது கோட்டின் மீது அவள் பார்வை சென்றது. ஆம், அந்தக் கோட்டு அவன் தோளில் இருந்த போது தான் அவன் மீது வாடை வீசியது. அதனால் தான்,

*நான் குடிக்கவில்லை என்று கூறினால் நீ நம்புவாயா என்று கேட்டானோ?*

இவ்வளவு நேரமாக குடித்தது போல் நடித்துக் கொண்டா இருந்தான்? ஏன் அப்படி செய்ய வேண்டும்? அப்படி நடிக்க காரணம் என்ன? அவன் மனதில் இருப்பதை கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்பதற்காகவா? அப்படி என்றால், இவ்வளவு நேரம் அவன் தன் சுய நினைவோடு தான் பேசிக்கொண்டிருந்தானா?

"நீ என்னை காதலிக்கலையா?" என்ற அவன் குரல் மெலிதாய் ஒலித்தது.

சற்று முன்பு அவன் கேட்ட அதே கேள்வியை சிறிய மாற்றத்துடன் கேட்டான் அவன். அந்த மாற்றம் வேண்டுமானால் சிறிதாக இருக்கலாம். ஆனால், அதில் இருந்த அர்த்தம் மிகப்பெரிது. *நீ என்னை காதலிக்கிறல்ல?* என்பதற்கும், *நீ என்னை காதலிக்கலையா?* என்பதற்கும் தான் எவ்வளவு வித்தியாசம்...!

முதல் கேள்வியில் அவள் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் இரண்டாவது கேள்வியிலோ, எதிர்பார்ப்பும் ஏக்கமும் நிறைந்திருந்தது. திருமதி மிதிலா ஸ்ரீராம் அதை புரிந்து கொண்டாள். அவனுடைய கேள்விக்கு அவள் இப்போது பதில் கூறியாக வேண்டும். என்ன பதில் கூறப் போகிறாள்? அவனுக்கு பதில் கூறக்கூடாது என்பதல்ல... இந்த ஒரு இக்கட்டான சூழலை அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதே நேரம், அவள் ஸ்ரீராமை ஏமாற்றவும் தயாராக இல்லை. இப்பொழுது அவனுக்கு பதில் கூறாவிட்டால் வேறு எப்போது கூற போகிறாள்? இப்பொழுது கூறாமல் வேறு ஒருநாள் கூறுவதில் என்ன பலன் இருந்துவிடப் போகிறது...?

என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️Where stories live. Discover now