கோரநாடு - 1. எழாலேறு

138 15 42
                                    

எழாலேறு:

வான்நடுவே ஓடுகிற மேகங்க ளோர்குடையாய்
ஆனதொரு மாமலை சூழ்நாடு- தேன்சொரியும்
கானகங்க ளேயரணாய் மாறியே காக்கின்ற
வான்புக ழோர்கோர நாடு.

கடல்நீர் உறிஞ்சிக் கருநிறம் கொண்ட கவின்மழை மேகங்கள் வானத்தை சற்றே கைநீட்டித் தொட்டுவிட எத்தனிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் முகட்டுடன் இதழோடு இதழ் சேர்த்துக்கொண்டிருக்கும் இனிய வேளையில், அந்த மேகங்களின் மேலே இரு புறமும் விரிந்தும் குறுகியும் நீண்ட சிறகுகளால் மேகக் குதிரைகளைக் கட்டி இழுத்துப் பறந்தவாறே வட்டமடித்துக்கொண்டு, பரவி விரிந்திருக்கும் காட்டுப்பகுதியில் நீக்கமற நிறைந்திருக்கும் அத்தனை மரங்களையும் ஊடுருவித் தனக்கேற்ற இனியதோர் இரையாக நின்றுகொண்டிருக்கும் ஒரு காட்டுமுயலைக் கடைக்கண்களால் குறிபார்த்தபடி, காற்றைக்கிழித்து, மின்னலைப் போலே சட்டெனக் கீழிறங்கி, நீண்ட நெடுந்தூரம் ஒற்றைப் பாய்ச்சலில் ஓங்கி இரு கால்நகங்களால் அம்முயலைக் கழுத்து நரம்புகள் உடையுமளவு இறுக்கக் கவ்விப் பிடித்து, அதே வேகத்துடன் மேல்நோக்கிப் பறந்து மலைமுகட்டின் உச்சிக்கு சென்று அமர்ந்த எழால் என்று அழைக்கப்படக்கூடிய பறவைகளின் அரசனாகவும் பாரிலே வலிமை கொண்ட பறவைகளில் முதன்மை பெற்றும் விளங்கும் ஒரு கழுகு தான் நினைத்த செயலைத் திறம்பட முடித்த பெருமிதத்தில் நிதானமாகத் தான் பிடித்து வந்த முயலை ஏறிட்டுப்பார்க்கையில், கிட்டத்தட்டக் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் அந்தக் காட்டுமுயலின் நிலைக்கும் அந்த நாட்டின் நிலைக்கும் பெரிய வேறுபாடு ஏதும் இல்லாதது வெள்ளிடைமலையென விளங்கிற்று அக்கழுகுக்கு. காலகாலமாகவே அப்பகுதியில் வாழ்ந்துவரும் காலப்பறவையாதலால் மெல்ல அந்நாட்டின் நிலப்பரப்பும் நிமிர்ந்தெழுந்து பின் நிலைகுலைந்த ஓர் அரசின் வரலாறும் காட்சிகளாக விரிந்தன அக்கழுகின் கண்களில்.

இயற்கை அன்னையின் இளைய மகளாக விரிந்திருக்கும் மலைச்சரிவுகளின் நடுவே, பலதரப்பட்ட மக்கள் கூடுகிற நாளங்காடி அல்லங்காடி சந்தைகளைப்போல உயரமான, குள்ளமான, பருமனான எனப் பலவகையான மரங்களும் தாவரங்களும் உயர்ந்து வளர்வதால் பச்சைப்பட்டாடை அணிந்தது போலக் காட்சியளிக்கும் காடுகள் நிறைந்தும், கோட்டைகளோ பாதுகாப்போ தேவைப்படாதபடிக்கு மலைகளே மாபெரும் அரணாகவும் காடுகளே காவலாகவும் விளங்கிப் புகழ் சேர்க்கவும், அள்ளக் அள்ளக் குறையாத அருந்தமிழின் இனிமை போல ஒருபோதும் வற்றி உடலொடுங்கிப் போகாத அமராநதியே கோட்டைக்கான அகழியாகவும் மாறிப் பொறுப்புடன் பயணிக்கும் அழகு நிறைந்ததாகவும்,  விண்ணிலிருந்து நேரடியாகத் தரைக்கு இறங்கி நின்றிருக்கும் கோட்டையையும் தன்னகத்தே கொண்டு இயற்கை அன்னையின் செல்ல மகளாய் எப்புறமும் அழகொன்றே வீற்றிருக்கும் அமைப்புடனும் மலைகள் சுற்றிலும் மாலையாகக் கோர்க்கப்பட்டது போன்று விளங்குவதால் கோரகம் கோர்நாடு கோரநாடு என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்நாடு இன்று தான் கொண்ட நற்பொருள் மாறிக் கண்ணுறவொண்ணாக் கோர நிகழ்ச்சிகள் நடக்கும் கோரமான நாடாகவே மாறிவிட்டது.

கோரநாடுWhere stories live. Discover now