கோரநாடு- 7. வேல்விழி

52 8 21
                                    

வேல்விழி:

பால்மர மேலேறிப் பார்புகழ நின்றவன்
நீல மகள்தனைக் கண்டதால்- தோல்கிழிந்து
மேல்வழிப் பாயும் குருதியை யும்மறந்தான்
வேல்விழி தன்னிற் கலந்து.


கண்டவர் மயங்கிட நிற்கும் கார்குழலியின் கருங்கூந்தலைப் போல் அடர்ந்து நிறைந்த கானகத்தின் நடுவில் கோரநாட்டுப் படைவீரர்களிடம் சிக்கி விலங்கிடப்பட்டு அவர்களால் பிடித்து வரப்படும் வழியில், முன் சென்ற வீரன் மேல் பாய்ந்து கொல்ல வந்த காட்டுப் புலியொன்றைக் கணப்பொழுதில் கொன்றுவிட்டு அனைவரையும் சொல்லொணா வியப்பில் ஆழ்த்தியவனும், அதிரப் பொருதிடும் நேரமும் அனைத்துப் புறமும் நிகழ்வனவற்றை ஒரு துளி பிசகின்றி கவனித்துக்கொண்டிருப்பவனும், எத்தகைய சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்காதவனுமாகிய இளங்குமரன் தன்னைச் சுற்றி நின்ற வீரர்கள் ஒவ்வொருவரின் நிலையையும் நன்றாக உணர்ந்திருந்ததோடு, அடுத்து நடக்கப் போவதை எதிர்பார்த்து ஒரு கையில் தன் குறுவாளைப் பிடித்திருந்த நிலையிலேயே சட்டெனத் திரும்பி இடது புறம் நின்றிருந்தவனது காலில் ஓங்கி மிதித்ததால் அவ்வீரன் அலறியபடி கீழே விழ, அவனது வாளையும் தாவிப் பிடித்து ஒரு சுழற்று சுழற்றி தலையை ஒருக்களித்து அனைவரையும் ஒரு மீக்குறு பார்வை பார்த்துக் காற்றில் நடனமாடத் தயாராகிறவன் போல் நின்றிருந்தான்.

ஒவ்வொரு வீரனாக வராமல் ஒட்டுமொத்தமாக எஞ்சியிருந்த ஆறு பேரும் நேரத்தை சிறிதும் வீணடிக்காமல் அவன் மேல் பாய்ந்தனர். இதை முன்பே ஊகித்திருந்ததால் அவர்களிடமிருந்து விலகிக் கீழே விழுவது போல் நகர்ந்து சென்று தன் வாளை வீரன் ஒருவனது காலில் பாய்ச்சினான். அதே வேகத்தில் நின்று கொண்டிருந்த ஒருவனது கழுத்தில் குறுவாளைச் சொருகிவிட்டு மீதி இருந்தவர்களைச் சுட்டெரிப்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு முன்னேறி ஓடலானான் குமரன்.

கோரமாநகரின் விற்பனைக்கூடமொன்றில் வைரநகை ஒன்றைத் திருடிவிட்டுத் தங்களிடம் சிக்கிக்கொண்ட கொள்ளையன் ஒருவன், குற்றுயிராகக் குதிரை மீது சுருண்டு படுத்து வந்துகொண்டிருந்த நிலையில் இப்படி ஒரு விஸ்வரூபம் எடுப்பான் என்பதை சிறிதும் எதிர்பார்த்திராததால் ஒரு கணம் திகைத்து நின்ற அருமைநாயகனும் அவனது வீரர்களும் தாங்கள் பிடித்து வந்திருப்பது ஒரு மாபெரும் வீரனைத் தான் என்பதை அறிந்துகொண்டார்களாதலால் ஒரு நீண்ட சண்டையை எதிர்பார்த்திருந்தனர். ஆனால் திடீரென அவன் தப்பித்து முன்னேறி வேகமாக ஓடத் தொடங்கியதால் சற்றே ஊக்கம் பெற்று அவனை வேகமாகத் துரத்த ஆரம்பித்தனர்.

அவ்வப்போது மழை பெய்துகொண்டே இருந்ததால் நீர் தேங்காது வழிந்து கொண்டிருக்கும் இலைகளில் சரசரவென உரசியபடியே ஓடிக்கொண்டிருந்த குமரன் வழியில் வளர்ந்திருந்த காட்டு மூங்கில் ஒன்றை இறுகப் பற்றி இழுத்து சுண்டிவிடவே பின்னால் அவனை நெருங்கி வந்துகொண்டிருந்த வீரர்கள் இருவர் முகத்தைப் பதம்பார்த்தன மூங்கில் முட்கள். இதற்கெல்லாம் சிறிதும் அசராது முன்னேறி வந்த அருமைநாயகனும் எஞ்சியிருந்த வீரர்களும் தங்கள் கைகளிலிருந்த ஈட்டிகளை எறியத் தொடங்கினர். அவற்றை எல்லாம் அனாயசமாகத் தட்டிவிட்டுக் கொண்டே வழியில் குறுக்கிட்ட ஒரு வேங்கைமரத்தில் விறுவிறுவென ஏறலானான் குமரன். இவன் ஏறுகிற வேகத்தை கண்டு திகைத்த பறவைகள் மழையையும் மறந்து வேறு மரத்திற்கு பறந்து சென்றன.

உழிஞைக்கொடிகள் சுற்றிலும் இறுக்கப்பற்றிக் கொண்டதாலும், மழைநீரால் நனைந்து வழுக்குவதாலும் ஏறுவதற்குக் கடினமாக இருந்தபோதிலும் பல காலமாகக் காட்டுப்பகுதியில் வாழ்ந்து வந்ததால் இலகுவாக ஏறிய குமரன் அத்துடன் நிற்காது கிடைமட்டமாக வளர்ந்த விழுதுகள் போன்ற உறுதியான கொடிகளைப் பற்றிக்கொண்டு எழுந்து நின்று சில நூறு கைமுழங்கள் தூரமிருந்த அந்த மாபெரும் மதில் சுவரை கவனித்தான். ஒரு கணம் பின்தொடரும் வீரர்களையும் மதிற்சுவரின் உயரத்தையும் நன்கு உற்றுநோக்கிவிட்டு கண்களை இறுக்க மூடி சிந்தித்துத் திறந்தான்.

கையிலிருந்த குறுவாளால் காலுக்கடியில் இருந்த ஒரு கொடியை வெட்டி எடுத்து மழைநீர் நீங்கும்படியாகப் பட்டையைச் சீவிவிட்டுத் தன் உடலைச் சுற்றி இறுக்கிக் கொண்டு தரையில் விழுவது போல வேகமாகக் கீழிறங்கிப் பின் அதே வேகத்தில் மேலே ஒரே பாய்ச்சலில் தாவி மதிற்சுவரையும் தாண்டி ஓங்கி வளர்ந்திருந்த ஒரு பசுமரம் எனப்படும் பால் மரத்தின் கிளையில் நின்றான். வேகமாக வந்து நின்றதால் மரக்கிளைகளிலிருந்து ஒரு மீச்சிறு தூறல் சிந்தி அடங்கியது. பின் நிதானமாகத் தன் உடலைச் சுற்றிய கொடியை அறுத்துக் கீழே விட்டுவிட்டு அவ்விடத்தை நோக்கலானான்.

அங்கு அவன் கண்ட காட்சி அவனை வானுலகிற்குக் கைபிடித்து அழைத்துச் சென்றது. இதுகாறும் கோரநாட்டு வீரர்களுடன் சண்டையிட்டுத் தப்பித்து, ஓடி, மாறி மாறி வரும் மழையிலும் வெயிலிலும் நனைந்து மரத்துக்கு மரம் தாவிப் பாய்ந்து வந்த களைப்பு அத்தனையும் ஒற்றை நொடியில் போக்கும் விதமாக, மலர்ந்து நிற்கும் முழுமதி முகத்துடன் கண்களை மூடி சுற்றுச்சூழலை முற்றும் மறந்து காவி உடையணிந்து, ஆழ்ந்த தவத்தில் அமர்ந்திருக்கும் கார்மேகக் குழலியின் அழகிய வதனத்தை அள்ளிப் பருகிக்கொண்டிருந்ததால் பேச்சு மூச்சின்றி அசையாது நின்று கொண்டிருந்த குமரன் தன் நிலையை முற்றிலுமாக மறந்து, பல வருடகாலம் வனத்தினில் தவம் புரிந்து இறைநிலை அடைந்த முனிவனைப் போல, உயிருக்கும் மேலாகக் கருதிய பொருள் தொலைந்து போய் பல வருடங்கழித்துத் தானாகவே கையில் கிடைத்தது போல, வாழும் வாழ்வின் உண்மைப் பொருள் உணர்ந்து முழுமை நிலையை அடைந்த உவகையுற்று நின்றுகொண்டிருந்தான்.

அதே நேரத்தில் குமரன் ஏறிய வேங்கை மரத்தில் ஏறி நின்ற அருமை நாயகன் தன்னிடமிருந்து தப்பிய கொள்ளையன், அந்தப்புரத்துத் தோட்டத்தில் அரசமகளிர் நீராடும் உவளகக் குளப் பகுதிக்கு சென்றதைக் கண்டதால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று, தன் கையிலிருந்த வேலைப் பலங்கொண்டமட்டும் குமரனைக் குறிபார்த்து எறிந்தான். மேகக்குழலியின் முகத்தைக் கண்ணுற்றதால் சுற்றம் முற்றும் மறந்த இளங்குமரன் தன்னைத் துரத்தி வந்தவர்களைப் பற்றியோ, அவர்களில் ஒருவன் தன்னை நோக்கி எறிந்த வேல் பற்றியோ, அது சற்றே குறிதவறியதால் தன் விலா எலும்பில் பட்டுத் துளைத்த இடத்திலிருந்து குருதி வழிவதைப் பற்றியோ சிறிதும் உணர்ச்சியின்றி நின்றுகொண்டிருந்தான்.

கதிரவனின் ஒளி பட்டதால் பொன்னென மின்னும் மேகத்தைப் போல மின்னுகின்ற மஞ்சள் முக நெற்றியில், குங்குமத் திலகம் போல இளங்குமரனது செங்குருதிக் கீற்று பட்டதால் உடல்சிலிர்த்துத் தன் அஞ்சன விழிகளைத் திறந்தாள் கார்மேகக்குழலி. மேலிருந்து வழியும் குருதியை அறிந்து தலையை நிமிர்த்தி, பால்மரக்கிளையில் நின்று தன்னை உற்று நோக்கிக் கொண்டிருந்த இளைஞனைப் பார்த்ததும் வியப்பில் தன் விழிகளை விரித்தாள். பின்புறம் வேலாலும் முன்புறம் வேல் விழிகளாலும் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டதால் குருதியுடன் சேர்ந்து தன் இதயமும் இறங்கி வழிவதை உணராது, மேகமகளின் ஒளிர்விடும் விழிகள் மின்னல் போல் வெட்டிடத் தாக்குண்டு மூர்ச்சையடைந்து தடாகத்தினுள் நேராக விழத்தொடங்கினான் இளங்குமரன்.

உடல் முழுக்கக் குருதி வழியக் குளத்தினில் விழவே சூடான செங்குருதி கலந்ததால் அந்தத் தடாகம் முழுமையும் செந்நிறமானது. முற்றிலும் புதியவன் ஒருவன் யாரும் உள்நுழைவதை சிறிதும் கற்பனை செய்துகூடப் பார்த்திராத தன் உவளகத்தில் இப்படியான ஒரு கோலத்தில் விழுந்து கிடப்பதை சற்றும் எதிர்பாராத கார்மேகக்குழலி செய்வதறியாது திகைத்து நின்றாள். அதே நேரம் மரக்கிளையில் அமர்ந்திருந்த பறவை சிறகை விரித்து மெல்ல பறக்கத் தயாராவது போல இளங்குமரனது உடலிலிருந்து அவனது உயிர் மெல்ல மெல்லப் பிரியத் தொடங்கியது.

கோரநாடுWhere stories live. Discover now