கோரநாடு 12- இதயமொழி இனியமொழி

40 6 9
                                    

இதயமொழி- இனியமொழி

பாய்ந்தருகே நின்றவளைச் சேர்ந்திழுத்துச் செவ்விதழ்
மூய்ந்திரு கண்மலர்ந் தேகிடப்- போயோரம்
சாய்ந்தவளைத் தானணத்துக் கோர்த்திருகை கொண்டுகலை
ஆய்ந்தறிந் தானனைத்து மின்று.

உலகின் அதி அற்புத நிகழ்வுகளெல்லாம் அதிகாலையிலேயே நடைபெறுகின்றன. துடைத்து எடுத்தாற்போல முந்தைய நாளின் அத்தனை துயரங்களும், பிணிகளும், அழுக்குகளும், குற்றங்களும் அதிகாலைச் சூரியனின் ஒளிமிகு கதிர்களால் ஒவ்வொன்றாகக் கழுவப்படுகின்றன. இருள் மண்டிக் கிடந்த மண்ணிலும் மனங்களிலும் ஒருசேர ஒளியைப் பாய்ச்சி உள்ளிருக்கும் தூய எண்ணங்களை ஒளிரச் செய்வதே காலைக்கதிரவனின் முதற்கடமை. அதிலும் கொட்டும் பெரும் மழையும் குளிர்விக்கும் தூறலும் இரவை நிரப்பிய பிறகு உதிக்கும் காலை உன்னதமானது.

வானின் வசந்தத்தைத் தங்களுக்குள் போட்டி போட்டிக்கொண்டு உலகிற்குப் பறையறைவிப்பவை பறவைகளே. மேற்கு நோக்கி மெல்லக் கிளம்பிய கதிரவனை முந்திக்கொண்டு முன்னேறிப் பறக்கும் பறவைகளும், முந்தைய இரவின் குளிரில் உடலை இறுக்கச் சுருட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்த விலங்குகளும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்கு வந்துகொண்டிருந்தன.

ஒட்டுமொத்த இரவையும் தனக்குள் ஒளித்துவைத்துக் கொண்டது போல நின்றுகொண்டிருக்கும் யானைக்கூட்டங்களின் பிளிறல் அந்தக் கானகத்தையே தட்டி எழுப்பிக்கொண்டிருந்தது. ஒற்றை ஒலியிலிருந்து கிளம்பி கற்றை கற்றையாய்ப் பின்னிப் பிணைந்து சங்கமித்து சங்கீதத்தை உருவாக்கும் இசைக்கலைஞர்களைப் போல, பலதரப்பட்ட பறவைகளின் ஒலியும் விலங்குகளின் குரல் விந்தைகளும், பூச்சியினங்களின் இடைவிடாத ரீங்காரமும் கலந்து ஒன்று சேர்த்து ஒற்றை ஒலியாய் மாற்றி உலகையே ஒரு கலாமன்றமாக மாற்றிக்கொண்டிருந்தாள் இயற்கையன்னை.

கொலையும் செய்யும் கொடிய விஷத்தைத் தனக்குள் வைத்துக் கொண்டு வெளியே சாதுவாகத் திரியும் நாகங்களைப் போல, பல்வேறு குழப்பங்களையும் துரோகங்களையும், வலிகளையும் சதிகளையும் தன்னுள் பதுக்கிக்கொண்டு மௌனமாக விடிந்துகொண்டிருந்த அன்றைய தினத்தில் பலமுறை பழகியவனைப் போல மிகவும் இயல்பாக கார்மேகக் குழலியின் அறைக்குள் அடியெடுத்துவைத்தான் இளங்குமரன். அங்கே சாளரத்தின் வழியே மெல்ல சொட்டிக்கொண்டிருக்கும் நீர்த்துளிகளைக் கையால் பிடிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள் கார்மேகக்குழலி. கீழே விழுந்து சிதறும் ஒவ்வொரு துளியும் அவளுக்கு இளங்குமரனின் குருதியை நினைவு படுத்தி ஒரே நேரத்தில் இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வழங்கிக் கொண்டிருந்தன.
 
அரவம் ஏதுமின்றி அவளருகில் சென்றவன் மொழியேதும் கூறாது அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அதுவரை வேறு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவள் சட்டென நினைவு திரும்பியவள் போல் அவனை வரவேற்றாள்.

“வாருங்கள். வாருங்கள்”

“வரலாமே.”

“எப்போது வந்தீர்கள்? நான் கவனிக்கவில்லை”

“எப்போதும் இங்குதானிருக்கிறேன்.” என்றபடி புன்னகைத்தான்.

“ம்ம். இதிலொன்றும் குறைச்சலில்லை. நீங்கள் விரைவில் வருகிறேன் என்று கூறிச்சென்று இத்துடன் முப்பத்தாறு யுகங்களாகி விட்டன.”

“இல்லையே. முப்பத்தாறு நாழிகைகள் தானே”

“அது உங்களுக்கு”

“ஏன் உனது உலகம் சுழல்வதில்லையா?

“அதைத் தாங்கள்தான் கூறவேண்டும்”

“ஓ. அப்படியா? ஆனால் எனது உலகம் நீதான்”

“க்கும். பார்த்தேனே அதையும். அப்படியே விட்டுவிட்டுச் சென்றதை.”

“என்ன செய்வது மேகா? எனக்கு நீயும் முக்கியம் என் நண்பனும் முக்கியம்.”

“போய் உங்கள் நண்பனையே கட்டிக்கொள்வது தானே?”

“அதெப்படி முடியும்? எனக்கு இரு கண்களும் வேண்டும் பார்ப்பதற்கு. இரு செவிகளும் வேண்டும் கேட்பதற்கு. இரு கரங்களும் வேண்டும் செயல்புரிய. இரு மா…”

“போதும் போதும் நிறுத்துங்கள். இது மாத்திரம் அத்தனை ஆண்களும் பிசகின்றி தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ஹூம்” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“அட. எத்தனை ஆண்கள்?”

“நான் எண்ணவில்லை. எண்ணுவதெல்லாம் உங்களைப் பற்றியே என்பதால்” என்றபடி அவனருகில் வந்தாள்.

மெல்ல அவளது கரங்களைப் பற்றிகொண்டு “ அடடா. குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டுமே இந்த இன்பமொழியை” என்றான்.

“இன்ப மொழியல்ல. இதய மொழி.”

“ம்ம். இதழின் மொழி”

“இசை மொழி”

“இசைவு மொழி”

“இயற்கை மொழி”

“இணக்க மொழி”

“இலக்கிய மொழி”

“இளகிய மொழி”

“இளமை மொழி”

“இரவின் மொழி”

“இடை மொழி”

“இதழின் மொழி”

“இமைகளின் மொழி”

“இணை மொழி”

“இன்றைய மொழி”

“இனிவரும் மொழி”

“இறை மொழி”

“இறவா மொழி”

“இனிய மொழி”

“இனி அம்மொழி நம் இருவர் மொழி” என்றபடி அவளைச் சேர்த்திழுத்து இடையை வளைத்து இரு கரங்களாலும் அள்ளிக் கொண்டு இன்பத்தை எதிர்நோக்கியிருந்த இதழ்களை இதழுடன் சேர்த்து இச்சைக்குள் மூழ்கிக்கொண்டிருந்த வேளையில் கதவு பலமாகத் தட்டப் படும் ஓசை கேட்டது.

வெளியே வந்திருந்த பணிப்பெண் அத்தகவலைக் கூறினாள். அதைக் கேட்டதும் இடிவிழுந்தாற் போலானாள் கார்மேகக்குழலி. இதைத் தானும் எதிர்பார்த்திராத இளங்குமரன் சற்று நிதானித்து மதுரமதிக்குத் தெரியுமா என்று வினவினான்.

மதுரமதி அவர்களுக்கும் தெரியும். தனியே அழுதுகொண்டிருக்கிறார்கள். கூடவே யாரும் தன்னைப் பார்க்க வரவேண்டாம் என்றும் கூறிவிட்டார்கள் என்றுரைத்தாள் அப்பணிப்பெண்.

இதைக் கேட்டதும் கார்குழலியை உடனடியாக மதுரமதிக்கு ஆறுதல் சொல்லக்கூறிவிட்டு, வழக்கத்திற்கு மாறான சீழ்க்கை ஒலியொன்றை எழுப்பினான். சில கணங்களில் தூதுக் கழுகு நவிலன் அவன் தோள்களில் வந்து அமர்ந்தது. உடனடியாக தன் கையிலிருந்த பட்டுத்துணியில் மகிழன் இறந்த தகவலை எழுதிவிட்டுத் தன் முத்திரையைப் பதித்து, கழுகின் கழுத்துப்பகுதியில் வைத்துக் கட்டிவிட்டு அதன் தலையில் மூன்று முறை தட்டிவிட்டு, சில சங்கேத வார்த்தைகளைக் கூறிப் பறக்கவிட்டான். சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்து அது பறக்கும் திசையை உறுதி செய்துவிட்டு அவ்விடத்தைவிட்டுக் கிளம்பி மதிமாறனைத் தேடிச் சென்றான்.

கோரநாடுWhere stories live. Discover now