கோரநாடு- 4. சதியரங்கம்

39 9 8
                                    


.

சதியரங்கம்:

முற்றிலும் மரத்தால் அமைக்கப்பட்டு சுற்றிலும் திரைச்சீலைகளால் மூடப்பட்டு எந்தவித ஒலியும் வெளியேறாதவாறு குறுகிய ஒற்றை வாயிலுடன் கட்டப்பட்டிருந்த அறை அது. அந்த ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் வெறும் ஆறு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஆனால் அன்றைய சூழலில் அந்த ஆறு பேரே ஒட்டுமொத்த நாடும் என்று சொல்வதில் தவறில்லை.

அனைவரும் வந்தமர்ந்த பிறகு "மன்னரின் மறைவு இயற்கையானதல்ல என்று நாட்டில் அனைவரும் நம்புகிறார்கள். அதனால் பெரும் புரட்சி நடைபெற வாய்ப்புள்ளது இளவரசே!" என்று தொடங்கினார் துறவியின் உடையும் துறவறத்திற்கு சற்றும் தொடர்பில்லாத பெரிய வயிறும் பத்து விரல்களிலும் பவழ மோதிரம் அணிந்திருந்ததால் சிவந்த கதிர்க் கரங்களும் கொண்டு அதை விட சிவந்த விழிகளுடன் அமர்ந்திருந்த வடமலை அல்லிமுனி. சமண மதத்தைப் பரப்ப வந்து இந்நாட்டின் சட்டங்கள் இயற்றுமளவு முக்கியத்துவம் பெற்ற ராஜ தந்திரி.

"இருப்பினும் மன்னர் சிறியதொரு நாகத்தினால் தானே கொல்லப்பட்டிருக்கிறார். இது விபத்து தானென்று குழந்தைக்குக் கூடத் தெரியுமே. இந்த மக்கள் ஏன் இத்தனை முட்டாளாக இருக்கிறார்கள்?" என்றவாறே இருக்கையிலிருந்து எழுந்தார் தலைமைத் தளபதி கமலக் கணக்காயன். மறைந்த மன்னருக்காகப் பல போர்களில் வெற்றி பெற்றுத் தந்தவர். தமிழகத்தில் அந்நாளைய தலைசிறந்த வாள் வீச்சு நிபுணர். அரியணை மேலும் குறிப்பாக அந்தப்புரத்தின் மேலும் இரு கண்களையும் எப்போதும் வைத்திருப்பவர்.

"மக்களை முட்டாள் என்கிறீரா தளபதி? அதுவும் என் முன்னால்" என்ற குரல் அந்த அறையை நிரப்பியது. சில நொடிகள் அனைவரும் பேச்சடைத்துப் போய்விட்டனர்.

உறுதியான கால்கள் தரையில் அழுத்தமாகப் பதிய, கடுங்கோபத்தினால் கண்களில் அதிக ரத்தம் பாய்ந்ததால் சிவக்க, பேரிரைச்சலுடன் மூச்சு வெளியே வர, குண்டலமணிந்த காது மடல் விடைக்க, பழுப்பேறிய உதடுகள் துடிக்கக் கொந்தளிக்கும் முகத்துடன் கொதிக்கும் எரிமலைக் குழம்பு போன்ற பார்வையுடன் அவ்வறையின் நடுநாயகமாக எழுந்து நிற்பவனும் மன்னர் வெற்றித் திருமாறனின் மூத்த புதல்வனும் தற்போதைய கோரநாட்டின் ஒரே இளவரசனுமாகிய கரம்பத் திருமாறனை எதிர்நோக்கும் தைரியம் எவர்க்கும் இருந்திட வழியில்லை.

கோரநாடுWhere stories live. Discover now