கோரநாடு- 2. நீர்ச்சிலை

51 14 15
                                    

நீர்ச்சிலை:

பொன்னிழைகள் மின்னுகிற வஞ்சியவள் இன்னுருவில்
மின்னலொளி வீசுகிற முத்தென- பின்னலொடு
பொன்னுடை தன்னிலே வெண்சுட ராய்விளங்கும்
கன்னியவள் மேக முகம்..

தனித்திருக்கும் மலர்கள் தங்கள் துணையுடன் பேசிக்கொள்ளத் தேர்ந்தெடுப்பது வண்டுகளின் ரீங்காரத்தையே ஆகும். அப்படி மலர் சூழ் வனந்தனில் தனித்தும் இணைந்தும் தக்க துணையுடன் கொஞ்சியும் குலாவியும் பிணைந்துகொள்ள உதவுவதுமாக எப்புறமும் கேள்விகளும் பதில்களுமாக அவ்வனத்தினை நிரப்பிக்கொண்டிருந்த பலவகை வண்டினங்களின் இசைக்கச்சேரிகளுக்கு நடுவிலும், பற்பல நாடுகளில் சுற்றித்திரிவதால் நாடெங்கும் நிகழும் நல்லன தீயனவற்றைப் பலவாறு பேசி மகிழும் பறவைகளின் கீச்சுப் பட்டிமன்றங்களுக்கு இடையிலும் தன்னைச் சுற்றி நிகழ்வன எதுவும் தன்னைச் சிறிதும் கவனம் கலைக்காதவாறு அமர்ந்த இடத்திலிருந்தே ஆதிபகவனை நோக்கிய ஒருமுக சிந்தனையில் மோனத் தவத்தில் மூழ்கிக்கொண்டிருந்த மோகனச்சிலைக்கு வயது இருபது அகவைக்கு மேலிருக்க நியாயமில்லை. இருப்பினும் இளமை பெருக்கெடுக்கும் இந்தச் சிறு வயதிலும் இறையை எண்ணித் தவம் புரிவதற்கு காரணங்களும் இல்லாமலில்லை.

சிறு வயதில் தந்தையையும் தாயையும் இழந்து தாதிகளாலும் சிற்றன்னையாலும் வளர்க்கப்பட்டதாலும், இளவரசியாகவே இருந்தாலும் தனக்குரிய வட்டத்துக்குள்ளாகவே தன்னைச் சுருக்கிக் கொண்டதாலும் மேலும் தானுண்டு தவமுண்டு தன் தங்கை மதுரமதியுண்டு என்று துறவிகளுக்கே உரிய காவி உடையணிந்து தூய ஒளித் தேவதையாகத் தானே ஏற்றுக்கொண்ட தவ வாழ்வுதனைச் சிறிதும் பிழையின்றி வாழ்ந்து வரும் கோரநாட்டின் இளவரசியான கார்மேகக்குழலிக்கு அழகும் அதை மிஞ்சிய அறிவும் அதனினும் மிஞ்சிய பொறுமையும் நிறைந்திருந்தன.

அதிகாலையில் எழுந்து அந்தப்புரத்தை ஒட்டி அமைந்திருந்த தாமரைத் தடாகத்தில் தன்னுடல் நனைத்துப்பின் தவத்திலமர்ந்திருக்கும் தங்கத்தாரகையின் தலைக்கு மேல் உதித்துத் தடாகத்தில் பட்டுத் தெறித்து பலவண்ணக் கதிர்களாக உடலழகை முழுவதுமாக உலகிற்குப் பறைசாற்றிடும் விதமாக ஈர ஆடையின் மேல் பட்டு எதிரொளித்துக் கொண்டிருந்த ஆதவனின் அழகிய கதிர்க்கீற்றுகள் அவளது தவநிலையையும் மீறி ஒரு தனி அழகைத் தந்துகொண்டிருந்தன.

களிமண்ணின் மேலே தேர்ந்த சிற்பியின் தெளிந்த கைகள் பட்டதும் சிலையாக உருமாறுவதைப்போலவே கதிரவனின் கரங்கள் பட்டதும் கார்மேகக்குழலியின் மென்மேனியும் மின்னத் தொடங்கியது.

நீரில் நனைந்ததால் இறுக்கமாகச் சுற்றியிருந்த ஆடை அவளுக்குத் துறவுத்தன்மையை அளிப்பதற்கு மாறாக அழகினையே அள்ளி வழங்கிக் கொண்டிருந்தது. வான்மழை பொழியும் கருமேகம் போல நீண்டு அடர்ந்த குழலும், நீறிட்ட நெற்றியும், நெடுங்கதவம்போல மூடியிருந்த விழிகளும், நேரான நாசியும், நிறை சிவந்த இதழ்களும், வானவில் வளைவு போல ஏறி இறங்கும் மார்புகளும், மதுநிறை மாதுளை முத்துக்கள் போன்ற அவற்றின் நுனிகளும், ஒட்டிய இடையும் ஒளிவிடும் உடலுமாய் அந்த இடமே தவச் சாலை போன்றில்லாமல் அழகின் தனிச் சோலையாகவே விலங்கியது.

சுற்றுப்புற நிகழ்வுகள் எதிலும் மனங்கொடாமல் இமைமூடிய விழிகளுடனும் இளகிய மனநிலையை வெளிக்காட்டும் முகத்துடனும் கருணை வழிந்தோடும் நீர்ச்சிலையெனக் காட்சியளிக்கும் அவளது நிலையைக் கண்டு அங்கு சுற்றித் திரிந்த மானினங்களும் அமைதியாக அமர்ந்து மெய்மறந்து ரசித்துக்கொண்டிருந்தன.

அத்தகைய ரம்மியமான சூழ்நிலையை அடியோடு மாற்றியமைக்கக் கூடிய நிகழ்வுகள் அடுத்த அரை நாழிகைக்குள் நிறைவேறும் என எவரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

கோரநாடுWhere stories live. Discover now