கோரநாடு- 3. மாமன்னர் வரகுணதிருமாறன்

44 9 22
                                    

கோரநாட் டிற்கோர் குணமிகு கோவென
ஈரநெஞ் சங்கொள் இறையென- வீரமுடன்
போரது தான்வரின் பொங்கிடும் வில்லவன்
தீரன் வரகுணமா றன்.

ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோரநாடு பாண்டியநாட்டிற்குத் தலைவணங்கிய ஒரு மலைப்புற சிற்றரசாக மட்டுமே இருந்துவந்தது. அந்த நிலையை மாற்றி மலைக்குக் கீழே இருந்த சமவெளிப்பகுதி முழுவதையும் தொடர்ச்சியான போர்களால் வெற்றிகொண்டு இத்தகைய பேரரசாக நிறுவி, மேலும் அப்பகுதியில் மலையையும் ஒரு புறம் சேர்த்துப் பிறநாட்டினர் அவ்வளவு எளிதில் உட்புகாதவாறு சிறந்த கோட்டையையும் உருவாக்கி அகழிகள் விற்பொறிகள் எனப் பல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து, பாண்டிய நாட்டுடன் திருமண உறவையும் ஏற்படுத்திக்கொண்டு அந்நாட்டின் சிற்றரசு என்ற அவப்பெயரையும் நீக்கி நெடுநாள் ஆட்சிபுரிந்தவர் மாமன்னர் வரகுண திருமாறன்.

இதற்கு முன் இருந்த அனைத்து அரசர்களையும் வரிசையில் நிற்கவைத்துப் பார்த்தால் இவரது ஆட்சி நான்கைந்து படிகள் மேலே இருப்பது இவரது தனிச்சிறப்பு.

இக்காலத்தில் உழவும், அதனை ஒட்டிய பதினெண் தொழில்களும் பெருமளவில் வளர்ச்சியுற்று அதனால் உருவாக்கப்பட்ட பொருள்களைக் கொண்டுசெல்வதற்காக அமராநதியில் மனிதர்கள் கடந்து செல்லும் மரப்பாலங்களும், யானைகள் செல்லக்கூடிய கற்பாலங்களும் அமைக்கப்பட்டன.

கோவில்கள் அதிக அளவில் கட்டப்படவில்லையென்றாலும் மத உணர்வு மக்களிடம் வேகமாகப் பரவியிருந்தது. பல நாடுகளைச் சேர்ந்த பல சமயத் துறவிகள் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

சைவ வைணவ சமண பவுத்த சமயங்களைச் சார்ந்தோர் தங்களுக்குள்ளாக விவாதம் நடத்திக்கொள்ள நாடெங்கும் பல சொற்போர் மையங்கள் நிறுவப்பட்டு மழைக்காலத் தவளைகள் போல மாறி மாறிக் குறைகூறி மற்றவர்களின் தவறுகளையும் தத்துவக் குறைகளையும் சுட்டிக்காட்டி வந்த போதிலும் மகுடிக்கு மயங்காத மலைப் பாம்புகளைப் போல மக்கள் ஒற்றுமையுடனும், உணர்வுடனும், மன்னனுக்கும் அவன் சொல்லுக்கும் கட்டுப்பட்டவர்களாகவே இருந்துவந்தனர். இருப்பினும் மன்னனுக்கு வேறு வகையிலான சிக்கல்கள் தன் குடும்பத்தினர் மூலமாகவே வர ஆரம்பித்தன.

கோரநாடுWhere stories live. Discover now