கோரநாடு- 6. மேகமிடை மின்னல்

38 6 15
                                    


மேகமிடை மின்னல்:

அன்று பிறந்த பூனைக்குட்டியின் மென்மையான முதுகைப் போல படர்ந்து விரிந்த பச்சை வண்ணப் பட்டுத் துணி போலவும் அடர்ந்த கிளைகளால் ஒன்றை ஒன்று தழுவி இரவும் பகலும் இன்பம் துய்த்துக் கொண்டும், தேவைப்படும் போதெல்லாம் நீரள்ளிக் குடிப்பது போல காற்றெனும் கணையை வீசி மேகங்களை அள்ளி இழுத்து மழை பெய்யச் செய்து தாகம் தீர்த்து உடல் நனைத்துப் பார்ப்பவர் உள்ளத்தையும் ஒருங்கே நனைத்தும் அடர்ந்து வளர்ந்த மரங்கள் நிறைந்த கோரவனத்தினூடாக அமையப்பெற்ற ஒற்றையடிப் பாதையானது குதிரைகளின் காலடித் தடத்தால் அதிர்வுற்றுத் தொடர்ந்தது.

எட்டு வீரர்கள் தத்தமது குதிரைகளுடன் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தனர். இருட்டுக்குள் தலைநகரை அடையவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அவர்களில் முதல் இருவரும் பின்னிருவரும் குதிரையில் அமர்ந்து வர நடுவில் இருந்தவர்கள் குதிரையுடன் கூடவே நடந்து வந்துகொண்டிருந்தனர். நான்காவதாக இருந்த குதிரையில் ஒருவன் குற்றுயிரும் குலையுயிருமாக குதிரையின் முதுகோடு சேர்த்து கட்டிவைக்கப்பட்ட நிலையில் இருந்தான். அவனது கைகளில் விலங்கொன்று பொருத்தப்பட்டு அதன் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு ஆஜானுபாகுவான உயரத்தில் ஒருவன் நடந்துவந்துகொண்டிருந்தான்.

இவர்களுக்கெல்லாம் தலைமை தாங்கி விரைவாகவும் அதே நேரம் பதட்டமேதுமின்றியும் குதிரை மீது பேரரசனைப் போல சென்றுகொண்டிருந்தான் அருமைநாயகன். அவன் கண்களில் தெரிந்த ஒளி அவன் ஒன்றும் சாதாரண வீரன் அல்ல என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. ஆறடிக்கு மேல் உயரமும் அடங்காத் தோள்களும் முறுக்கேறிய கால்களும் நன்கு நீண்டிருந்த விரல்களும் அவன் இடையில் தொங்கிக்கொண்டிருந்த வாளும் அவன் நிறைய போர்களில் பங்கேற்றிருப்பான் என உணர்த்தியது. திருநீறணிந்து அகண்ட நெற்றியும் நேரான கூரான நாசியும் அவனது அறிவுப் புலமையைப் பறைசாற்றிக்கொண்டிருந்தன. ஒரு கையில் நீண்ட எஃகாலான ஈட்டியை லாவகமாகக் கையில் பிடித்திருந்த விதம் அவனை அந்தக் காட்டுக்கே அரசன் போலக் காட்டிக் கொண்டிருந்தது.

கோரநாடுWhere stories live. Discover now