கோரநாடு- 8. நாகபூமி

36 7 6
                                    

நாகபூமி:

ஓசை யெழுப்பி யிணைசேர் வதுவுமாம்
ஈசனின் மேலோர் குடையுமாம்- வீசிடும்
வாசமும் வெப்பமும் கண்டுதன் னூன்தேடும்
ஆசையும் நாகமு மாம்.

பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் பல்கிப் பெருகிப் பரவி உண்டுயிர்ந்து வாழும் இப்புவியில் நாகங்கள் எனப்படுபவை மனித மனங்களில் மறைந்திருக்கும் அனைத்து வித ஆசைகளின் உயிர்வடிவங்களாகும். இரையைக் கண்டுபிடித்துக் கொன்று உண்பதிலிருந்து இணையுடன் கட்டித் தழுவிப் புரண்டு இன்பந்துய்ப்பது வரை அவை ஆசைகளின் வெளிப்பாடுகளாகவே விளங்குகின்றன. அதிலும் மனித மனங்களில் மறைந்து விளங்கும் நாகங்களின் விஷம் அளவிடமுடியாதது. ஆலகாலத்தினும் கொடிய காலகாலனின் நஞ்சாகும். சுயநலத்திற்காக எவரையும் கணப்பொழுதில் பகைத்துப் பழிதீர்க்கும் வல்லமை வாய்ந்தது.

அப்படிப்பட்ட நாகங்களின் கூடாரமாகவே மாறிவிட்ட கோரநாட்டின் அரசவையில் உள்ள ஒவ்வொருவரும் தத்தமது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள எப்போதும் தங்கள் விஷம் தோய்ந்த நாக்குகளை நீட்டியும், மடக்கியும், சுழற்றியும் கொடும்பசியுடன் இரை தேடி அலையும் நாகங்களைப் போல இரவும் பகலும் அயராது அலைந்துகொண்டிருந்தனர். இணையுடன் கூடித் தழுவதற்காக ஒலியெழுப்பி இந்நாகங்களிடம் சிக்கிகொள்ளும் நுணல் போல எண்ணற்ற மனிதர்களும் இங்கு உண்டு.  அதிலும் அல்லிமுனி மற்றும் சகாதேவன் போன்ற மலைப்பாம்புகள் தங்களின் சாளுக்கிய சகவாசத்தையும் அந்நாட்டு மன்னனின் மீதிருந்த விசுவாசத்தையும் ஒருபோதும் மறந்ததில்லை. தங்களால் அதிகாரப்பூர்வமாக அரியணையில் அமரமுடியாதென்பதை அறிந்திருந்தனரென்றாலும் தங்களுக்கு சாதகமானவன் மட்டுமே அரியணையில் நிலைத்திருக்க வேண்டுமென்பதில் இருவரும் கண்ணுங்கருத்துமாய் இருந்துவந்தனர்.

அதே நேரம் தளபதி கமலக்கணக்காயனும் பழைய விஜயேந்திரன் ராணிசந்திரிகாவை மனமுடித்து மாமன்னர் வெற்றித்திருமாறனானது போல இளவரசி கார்மேகக்குழலியை மணம்புரிந்து மன்னனாகலாம் என்ற கனவுடன் இருந்துவந்தான். இதை ஓரளவு அறிந்திருந்தாலும் சிறந்த படைத்தளபதி என்பதால் இளவரசன் கரம்பத்திருமாறன் அவனையும் தன்னுடன் வைத்துக்கொண்டு அடுத்த அரசனாகும் பணிகளில் ஈடுபடத் தொடங்கினான். மேலும் எஞ்சியிருந்த நான்கு சிற்றரசர்களும் தங்களால் இயன்ற அளவு கரம்பனின் புகழைக் கெடுப்பதிலும் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதிலும் கவனம் செலுத்திவந்தனர்.

இந்த நிலையில் நீலநாட்டு இளவரசனான மகிழனுக்கு இளவரசி மதுரமதியை மணமுடிக்க நிச்சயிக்கப்பட்டிருந்தது. அத்திருமணம் நிகழும் பட்சத்தில் கரம்பனின் பலம் இன்னும் கூடிவிடும் என்பதால் இதனையும் ஒரு சிலர் மறைமுகமாக எதிர்த்து வந்தனர். கூடவே புதியதாகக் கொள்ளையர்களின் இடையூறும் அதிகரித்து வந்த்தால் கோரநாடு குழப்ப மேகங்கள் சூழப்பட்ட நாகங்களின் பிறப்பிடமாக மாறிவிட்டிருந்தது. எனவே முதலில் கொள்ளையர்களிடமிருந்து கணக்கைத் தொடங்கினான் கரம்பன்.

நாடு முழுவதும் கொள்ளையர்களைப் பற்றியோ புரட்சி செய்பவரைப் பற்றியோ தகவல் தருபவர்க்குப் பெரும் பரிசுகள் வழங்கப்படுமென முரசறைவித்தான். அப்படியொரு ஒற்றின் அடிப்படையில் நகரின் கிழக்கேயிருந்த ஒரு மண்டபத்தில் பதுங்கியிருந்தனர் தளபதியும் உடன் சில வீரர்களும். நள்ளிரவுக்கு இன்னும் சில நாழிகைகளே இருக்கும் நேரம் முற்றிலும் இருள் சூழ்ந்து கிடந்த அம்மண்டபத்தில் திடீரெனக் குதிரைகளின் குளம்பொலி கேட்கத் துவங்கியது.

மண்டபத்தின் வடக்குப் புறமாக இருந்த தூண்களின் மறைவில் பதுங்கியிருந்த படத்தளபதி கமலக்கணக்காயன் போயும் போயும் இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்கத் தானே வரவேண்டியிருக்கிறதே என அவ்வப்போது நொந்துகொண்டானாகிலும் இவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை என்பதையும் உணர்ந்திருந்ததால், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்த குளம்பொலியைக் கேட்டு மெல்லத் தலையைத் திருப்பி நடப்பதைக் கவனித்தான். வெறும் பதினைந்து வீரர்களுடன் வந்திருந்த அவன் எழுபதுக்கும் மேற்பட்ட கொள்ளையர் படையே வந்திருப்பதறிந்து வியப்புக்கும் பீதிக்கும் உள்ளானான். எனினும் வீரனான அவன் சிறிதும் தாமதிக்காது தாக்குதலைத் தொடங்கினான்.

ஆயினும் எதிர்பாராவிதமாக அரைநாழிகைக்குள்ளாகவே அந்தப் பதினைந்து பேரும் நிராயுதபாணியாகச் சிறைப்பட்டனர் அக்கொள்ளையர் தலைவனிடம். மெல்லத் தான் வந்த குதிரையிலிருந்து இறங்கித் தன் வாளை எடுத்து தளபதியின் குரல்வளையில் வைத்துக் கொண்டே கேட்டான் அவன் “என்ன தளபதி? இந்தப் பக்கம். அதுவும் இந்நேரத்தில்?” என்று வினவினான். வினவலை விட எளக்காரமே அதிகம் தொனித்தது.

உங்களேல்லோரையும் கூண்டோடு கொண்டுசெல்ல வந்து இப்படி சிக்கிக் கொண்டேன் என எப்படி சொல்வான் அந்தப் பாவப்பட்ட தளபதி? ஆனால் அந்த நிலையிலும் கலங்காது “ நீ எங்களை சிறைப்படுத்தியதாகப் பெருமிதம் கொள்ளாதே. இன்னும் சிறிது நேரத்தில் மன்னர் வந்துவிடுவார். அதன் பிறகு..” என்று பற்களைக் கடித்தான்.

“அப்படியா? வரச்சொல் பார்க்கலாம்” என்றவாறே அருகிலிருந்த கல்லில் சென்று அமர்ந்தான். அடுத்த நொடி பாய்ந்து வந்த அம்பொன்று அவனது வாளைத் தட்டிவிட்டுக் கீழே விழுந்தது. என்ன நடக்கிறதென்று யூகிக்கும் முன்னரே கரம்பத் திருமாறனும், நீலநாட்டு இளவரசன் மகிழனும் கொள்ளையர் கூட்டத்தைப் புரட்டி எடுத்துவிட்டார்கள். சற்று முன் தளபதி இருந்த அதே நிலையில் மகிழனின் வாள் நுனியில் இருந்தான் மாட்டிக்கொண்ட கொள்ளையர் தலைவன்.

“இப்பொழுது உனது பெயரைக் கூறடா?” என்றான் கமலக்கணக்காயன் கடுங்கோபத்தில்.

அவனை நோக்கி ஒரு இகழ்நகை புரிந்தவாறே “மதிமாறன்” என்றான் அவன்.

“மதி பெயரில் மட்டும்தான் போலிருக்கிறது. இருக்கட்டும். தற்போது தாங்கள் சிறையில் ஓய்வெடுக்கலாம் மதிமா… இல்லையில்லை வெறும் மாறா” என்றபடி உரக்கச் சிரித்துவிட்டு மகிழனைக் கட்டித் தழுவியபடி “தக்க சமயத்தில் வந்தாய் நண்பா” என்று கூறிவிட்டு தன் குதிரையில் ஏறினான் கரம்பன்.

“தாங்களிருவரும் எப்படி சந்தித்தீர்கள்?” என்று ஐயம் பொறுக்காதவனாய் அவ்விடத்திலேயே வினவினான் தளபதி.

“அருகிலுள்ள முதுநகர் கோட்டத்தில் நானும் மகிழனும் இளவரசியின் திருமணத்தை பற்றி உரையாடிக் கொண்டிருந்தபோது இடைமறித்த ஒற்றனொருவன் தாங்கள் இங்கிருக்கும் நிலையை விரைவாக வந்து தெரிவித்தான். ஆகவே இருவரும் எங்கள் வீரர்களுடன் வந்துவிட்டோம். ஆனாலும் நீங்கள் கொள்ளையர்களின் எண்ணிக்கை தெரியாமல் இப்படி வந்திருக்கக்கூடாது தளபதியாரே” என்றான் கரம்பன்.

“இதைத் தான்
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றொரு
ஒற்றரால் ஒற்றிக் கொளல்
என்று கூறியிருக்கிறான் தமிழ் மூத்தோன். கற்றதில்லையோ தாங்கள்?” என்றபடியே தானும் தன் குதிரையில் ஏறிக் கிளம்பத் தயாரானான் நீலநாட்டின் இளவரசனும் கரம்பனின் நெருங்கிய நண்பனும், இளவரசி மதுரமதியின் வருங்காலக் கணவனுமாகிய மகிழன்.

வேறுவழியின்றி வெற்றுச் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டுக் கொள்ளையர்களைக் கைது செய்து கிளம்பினான் கமலன். நடப்பதை முற்றும் உணர்ந்து தான் வந்த வேலை எளிதாக முடிந்ததை எண்ணி மனதிற்குள் நகைத்துக் கொண்டான் இளங்குமரனின் உயிர்நண்பனும் தலைசிறந்த வீரனுமாகிய மதிமாறன். அவ்விடத்திலிருந்து அனைவருக்கும் முன்பாக அரண்மனை நோக்கிப் பறந்து சென்றது ஒரு ராஜாளிக் கழுகு.

கோரநாடுUnde poveștirile trăiesc. Descoperă acum