கோரநாடு-11. கனவும் களவும்

36 5 6
                                    

கனவும் களவும்:

சிகரம் போல்வள ரால மரங்கீழ்
நகர்ந்திடும் நஞ்சரவு சூழ-அகன்று
விரிந்து பறவை யுடல்சுற்றிக் கொன்று
பிரிக்குமுன் காக்கும் கழுகு.

கதிரவனை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மெல்ல மெல்ல தன் கருநிறப் போர்வையை விரித்து இருள் பரவிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அந்தப்புரத்து மாளிகையில் இளவரசியின் அறையில் இரு நாட்களாகத் தங்கியிருந்த ஆண்மகன் ஒருவனிடம் அரண்மனை ரகசியங்களைச் சிறிதும் தயக்கமின்றித் தன் தமக்கை உரையாடிக் கொண்டிருந்ததை நம்பமுடியாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்த மதுரமதி, இளங்குமரன் சென்ற அடுத்த நொடி உள்ளே நுழைந்தாள். இதை சற்றும் கவனிக்காமல் குமரன் சென்ற வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள் கார்மேகக்குழலி.

பின்னிருந்து வந்து மெல்ல அவளது கைகளைப் பிடித்து “என்ன நடக்கிறதக்கா இங்கு?” என்று வினவினாள் மாசற்ற நிலவொளியின் முகங்கொண்ட மதுரமதி. மானின் தோலினையொத்த மெல்லிய அவளது கரங்களால் தன் கரங்களைப் பற்றிக் கொண்ட நிலையறிந்து, சுய நினைவுக்கு வந்தவளாய் அவள் புறம் திரும்பிப் பதிலேதும் கூறாமல் ஒரு புன்னகை மட்டும் புரிந்தாள் கார்குழலி.

“நான் கூறியது விளங்கவில்லையா? அல்லது விளக்கவுரை அளிப்பவர் விரைந்து நீங்கிவிட்டாரா? யார் அவர்? இரு நாட்களாக நீ நீராடவும் வரவில்லை. வழக்கமாக எனது அறையில் என்னுடன் உறங்கும் நீ இரவும் பகலும் இங்கேயே இருக்கிறாய். இன்று உனக்கு என்னதான் ஆனதென்று காணவந்தால் இந்நாட்டு ரகசியங்களை எவனோ ஒருவனிடம் இலகுவாகக் கூறிக்கொண்டிருக்கிறாய்? என்ன ஆனது உனக்கு?” என்று கேட்டாள் மதுரமதி சிறு கோபத்துடன்.

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே. அவரைப் பற்றி நான் கூறும் முன் எனக்கு இரு தினங்களுக்கு முன் வந்த கனவைப் பற்றி நீ தெரிந்துகொள்ளவேண்டும் மதுரா”

“கனவா?”

“ஆம். கனவு தான். ஆனால் அது அத்தனை நன்மை பயப்பதாக இல்லை மதுரா. அடர்ந்த காட்டுக்குள் ஒரு ஆலமரத்தடியில் நெருப்பு வளர்க்கப்பட்டு அணைக்கப்பட்டிருக்கிறது. எண்ணற்ற நாகங்கள் சிறியதும் பெரியதுமாக அந்த வனம் முழுவதும் நெளிந்துகொண்டிருக்கின்றன. ஆலமரத்தின் விழுதுகளாக இருப்பவையும் நாகங்களே. அவற்றுக்கு நடுவே சிக்கிக்கொண்டிருக்கின்றன இரு புறாக்கள். அவற்றைக் காக்க வந்த ஆண் புறாவும் அருகில் வந்ததும் மிகப் பெரிய ராஜநாகமாக மாறிப் படமெடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது. இவ்விரு புறாக்களையும் இறுக்கிக் கொன்றுவிட ஒரு மலைப்பாம்பு எத்தனிக்கையில் எங்கிருந்தோ வந்து மரக்கிளையில் அமர்கிறது ஒரு கழுகு. இப்படியாக என் கனவு கலைந்துவிட்டது மதுரா.”

“சரி. அதற்கும் இப்போது வந்து சென்றவருக்கும் என்ன சம்பந்தம் மேகா?”

“கனவுகளெல்லாம் வெறும் எண்ணப் பிதற்றல்கள் இல்லை மதுரா. அவை ஆண்டவன் நமக்குத் தெரிவிக்கும் குறியீடுகள். விழுதுகளெங்கும் விஷநாகங்கள் சூழ்ந்த அவ்வாலமரமே நம் நாடாகும். அந்தப் புறாக்கள் நாம் தான். மேலும் நம்மைக் காக்க வேண்டியவர்களே நம்மைக் காவு கொடுக்கத் தயாராகி இருக்கிறார்கள். நம்மையும் நம் நாட்டையும் முற்றிலுமாகக் கைப்பற்ற மிகப்பெரிய வலிமையுடன் ஒரு பெரிய கூட்டமே செயல்படுகிறது. இவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்ற அந்தக் கழுகினால் மட்டுமே முடியும் என்று தோன்றுகிறது.”

“என்ன? கழுகா?”

“கழுகுதான். நம் அரச சின்னம் பற்றித் தெரியுமல்லவா. நம் கொடியே கழுகுக் கொடிதானே. நம் அரச முத்திரையும் கழுகுதானே?” என்றாள் கார்மேகக்குழலி.

“அப்படியானால்?”

“நான் வெறும் கனவை மட்டும் நம்பவில்லை மது. சில நாட்களுக்கு முன் எனக்கு வந்த ஓலையை நீயே பார்.” என்று மதுரமதியின் மாசற்ற கரங்களில் அவ்வோலையை அளித்தாள்.

ஓலையை ஒருமுறைக்கிருமுறை நன்றாகப் படித்துப் பார்த்த மதுரமதி “இவ்வோலையிலிருக்கும் தகவல் உண்மையென்பதையும், இங்கே வந்துசென்றவர் தான் இதில் குறிப்பிடப்பட்டிருப்பவர் என்பதையும் எப்படி உறுதி செய்தாயக்கா?” என்று தன் ஐயம் விலகாமல் வினவினாள்.

“இதற்குத் தான் நம் நாட்டில் அரச குடும்பத்தினருக்கெனத் தனி முத்திரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்பீடு காணும் ஒப்பச் சான்று முறையும் வழக்கத்திலுள்ளது. வழக்கமாக நம் நாட்டிலிருந்து அரசரீதியாகவோ உள்நாட்டிற்குள்ளாகவோ வெளிநாடுகளுக்கோ கொண்டுசெல்லப்படும் ஓலைகளில் இடப்படும் அரசமுத்திரையில் வலப்புறம் திரும்பிய கழுகின் தலையே இடம்பெறும். ஆனால் அரசகுடும்பத்தினருக்குள் மட்டுமே நடைபெறும் தகவல் பரிமாற்றத்திற்கு இடப்படும் முத்திரையில் கழுகின் தலை இடப்புறமாக இருக்கும். இந்த ஓலையில் இடப்பட்ட முத்திரையை நன்றாகப் பார். மேலும் தலையில் மகுடம் வைக்கும் முறை உன் தந்தை வெற்றித்திருமாறனின் காலத்தில் தான் துவக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பான காலத்தில் கழுகின் தலையில் மகுடம் இருந்ததில்லை. ஆக இவ்வோலையை அனுப்பியவர் பல வருடங்களாகவே நம் அரண்மனைக்குள் வந்ததில்லை. ஆனால் நம் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பது மட்டும் உண்மை.” என்று முடித்தாள் கார்மேகக்குழலி. அத்துடன் நில்லாது மேலும் என்று ஆரம்பித்து மற்றோர் மறைபொருளையும் மதுரமதியின் செவிகளில் இட்டு நிரப்பினாள்.

சற்று முன் வரை எண்ணற்ற ஐயங்களால் தேய்பிறை நிலவென வாடியிருந்த மதுரமதியின் மஞ்சள் முகம் தற்போது அனைத்து ஐயங்களும் அற்றுப் போனதால் முழுமதியாய் மாறி ஒளிர்ந்தது.

அதே நேரம் கீழ்ச்சிறையில் அடைபட்டிருந்த மகிழன் சிறையிலிருந்து தப்பித்து தன் நண்பன் இளங்குமரனைச் சந்தித்து வெண்முகில்வேள் அளித்திருந்த பட்டுத்துணியையும் முத்திரை மோதிரத்தையும் தந்துவிட்டு அரண்மனையிலிருந்து உடனடியாக வெளியேறினான். பட்டுத் துணியிலிருந்த செய்தியைக் கவனமாகப் படித்துத் தன் இடையில் செருகிக்கொண்ட இளங்குமரன் அங்கிருந்து நேரே கார்மேகக்குழலியின் அறைக்கு சென்றான். அதற்குள் பொழுதும் விடியத்தொடங்கியிருந்தது.

கோரநாடுWhere stories live. Discover now