கோரநாடு- 5. அரசியல் நரபலி

26 6 6
                                    

அரசியல் நரபலி:

பூஜைக்கு மலராகச் செல்வோமா பிணத்துக்கு மாலையாகச் செல்வோமா என்றெல்லாம் தெரியாமல் இயல்பாக எல்லோருக்கும் சேர்த்தே மணம் வீசி மலரும் பூக்களைப் போல வெகு இயல்பாக விடிந்திருந்தது அந்த ஆடி அமாவாசை தினம். காட்டின் நடுவே பகவதியம்மன் கோவிலில் அல்லி முனியின் தலைமையில் மங்களகரமாகத் தொடங்கிய அந்த பூஜையில் மன்னன் புகழ் திருமாறன் தம்பதி சமேதராகக் கலந்துகொண்டு நாட்டுமக்கள் நலனையும் குடும்பத்தோர் குடிமக்கள் நலனையும் தன் குல மூத்தோரிடம் வேண்டிக்கொண்டு அல்லிமுனி நடத்திய அத்தனை சடங்குகளையும் பிழையின்றி நிறைவேற்றிக் கொண்டிருந்தான்.

சமண முனிவராக இருந்த போதிலும் அனைத்து வைதீக பூஜைகளும் அல்லிமுனிக்குப் பழக்கமாகும். சாளுக்கிய நாட்டுக்கு அவசர வேலையாகச் சென்றிருந்ததால் விஜயேந்திரனும் அவன் குடும்பத்தாரும் கலந்து கொள்ளவில்லை.

செல்வத்திருமகளும் மேகவர்மனும் தமது அருமை மகளுடன் அதில் கலந்துகொண்டனர். அந்த நேரத்தில் அந்தக் குகைக்கோவிலின் வாயில் அடைக்கப்படும் ஓசை கேட்டதும் அத்தனை கண்களும் வாயிலை நோக்கித் திரும்பின. மெல்லப் பரவிய எண்ணெய் வாசமும் நெருப்பின் புகைமணமும் நிலைமையைப் புரியவைத்தது புகழ் திருமாறனுக்கு.

வெளியே தபதபவென்று காபாலிகர்கள் ஓடிவரும் சத்தமும் தெளிவாகக் கேட்கத் தொடங்கியிருந்தது உள்ளிருந்தவர்களுக்கு. பூஜை முடியும் வரை குல வழக்கப்படி தம்பதியர் இருவரும் தங்களது பீடத்தை விட்டு வெளியே வருவது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல என்று முன்பே எச்சரித்திருந்ததால் முக்கால் நாழிகை முடியும் வரை கடவுளை வேண்டியபடி காத்திருக்கத் தொடங்கினர் அரசனும் அரசியும்.

குகைக் கோவிலுக்குப் பின்புறம் வழி இருப்பதை நினைவுகூர்ந்த செல்வத் திருமகள் உடனடியாக இளவரசனைத் தன் கணவன் மேகவர்மனிடம் கொடுத்துவிட்டுத் தன் மகள் கார்மேகக்குழலியைக் கைகளில் ஏந்திக் கொண்டு முக்கால் நாழிகை முடிவிற்குக் காத்திருக்கலானாள்.

கோரநாடுWhere stories live. Discover now