💟 ஜீவாமிர்தம் 26

2.3K 110 10
                                    

அதிகாலை ஆறு மணியளவில் இனியா ராசுவின் வீட்டு வாசலைப் பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்த போது அப்போது தான் தன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு ஓர் ஆட்டுக்குட்டியை கைகளில் அள்ளி அதற்கு பாட்டிலில் பால் கொடுத்து கொண்டு தன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான் இசக்கிராசு.

"இந்த வேலையெல்லாம் நீங்க எதுக்கு செஞ்சுட்டு?" என்று கேட்ட படி நின்றவனை தலை தூக்கிப் பார்த்தாள் இனியா.

கனமான ஒரு லெதர் செருப்பு, முழங்கால் அளவு மடித்து கட்டியிருந்த லுங்கி, அகன்ற தோள்களை பற்றியிருந்த பனியன், கைகளில் ஆட்டுக்குட்டி என நின்றவனை பார்த்து துப்புரவு வேலையை அப்படியே விட்டு விட்டு அவனருகில் வந்தாள்.

"இதெல்லாம் நான் பார்க்கலைன்னா நீங்க பார்ப்பீங்களா? நான் இருக்கும் போது அப்பத்தாவை எதுக்கு வேலை பார்க்க சொல்றது? அது தான் நானே சுத்தம் செஞ்சேன்..... உங்க வீட்ல நான் இந்த வேலையெல்லாம் பார்க்கிறது உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லிடுங்க. நான் செய்யல!" என்றாள் இனியா புன்னகையுடன்.

அவள் மூச்சு அவன் முகத்தில் படும் அளவுக்கு அவள் முகம் நோக்கி சற்று குனிந்தபடி நின்றவன்,

"என் வூட்டு வேலைன்னு நெனைச்சுகிட்டு செஞ்சீகன்னா வேல அப்படியே கிடக்கட்டும். நம்ம வூட்டு வேலைன்னு நினைச்சீகன்னா மட்டும் செய்ங்க; ஆனா எதைப் பேசினாலும் பூனைக்குட்டிய தடவிக் குடுக்குத மாதிரி மியா மியான்னு பேசுதீக பாத்தீகளா...... இந்த அழகுல நீங்க என்னைய பழி வாங்க வந்துவுகளா.... உங்க முகத்துக்கு எல்லாம் கோபம், ஆத்திரமெல்லாம் பொருந்த மாட்டேங்குது நர்ஸம்மா. உள்ள போய் தலையை துவட்டுங்க. நா வாச, தெரணையெல்லாம் பெருக்கி சுத்தம் பண்ணி வக்கிறேன். அது வரைக்கும் இந்த செவலப்பயல கொஞ்சம் கையில வாங்கிக்கிடுங்க!" என்று சொன்னவன்
அவள் கையில் ஆட்டுக்குட்டியை தந்து விட்டு துடைப்பத்தை கையில் எடுத்துக் கொண்டு சுத்தம் செய்து கொண்டிருந்தான்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now