1 | சிந்தனை

151 11 30
                                    

     மீண்டும் மீண்டும் மனக்கடலில் அலைபாயும் பொல்லாத எண்ணங்களைத் தட்டியடக்கியவளாய் அடுப்பிலிருந்த கறியை அகப்பையினால் கிளறிக் கொண்டிருந்தாள் ஜன்னா.

ஜன்னலினூடாகத் தெரிந்த மலைக் காட்சி வழமைக்கு மாறாக, இன்று அவள் உள்ளத்துக்குக் குளிர்ச்சியைத் தரவில்லை. காகங்கள் கரைந்து கொண்டே மின்கம்பிகளின் மாறி மாறி அமர்ந்த வண்ணமிருந்தன.

மனித மனம் தான் எத்தகையது?!

மனம் குரங்கு போல என்பது மெத்தச்சரி. ஒவ்வொரு விதமான வேற்று எண்ணங்களிடையே தாவித்தாவி உறுதியின்றிக் கிடப்பது தானே மனம்? அது அவள் விடயத்தில் எப்படியோ உண்மையாயிற்று அல்லவா?

இன்னதென்று சொல்லத்தெரியாத ஒரு வகை வலி உள்ளத்தை இறுக்கிப் பிழிந்தது. இப்போது இரண்டு நாட்களாகவே அப்படித் தான் கிடக்கிறாள். அவளது நடத்தை மாற்றம் பற்றி அவள் கணவனைத் தவிர மற்றவர்கள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. எதையோ பறிகொடுத்தது போன்று ஒளி மங்கிக் காணப்பட்ட அவளது முகத்தை இடைக்கிடையே பார்த்தவாறு இருந்த அவனும் அதைப்பற்றி அவளை ஒன்றும் கேட்கவில்லை.

ஜன்னாவின் சிந்தனை கடந்த காலத்தை நோக்கிச் சிறகடித்தது. சட்டியை மூடி விட்டுக் கதிரையில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொண்டாள். பெருமூச்சொன்று அனுமதி கோராமலே வெளியேறியது.

ஆறு வருடங்கள் என்பது அவ்வளவு பெரியதொரு காலம் அல்லவே. அது எத்தனை விரைவில் கடந்து போய் விட்டதென்பதை நினைக்கும் போதே ஆச்சர்யமாக இருந்தது. அதற்குள் இவ்வளவு மாற்றங்கள்!

வாழ்வைப் பற்றிய கவலைகளின்றி மனம் விரும்பியதெல்லாம் செய்து கொண்டு சிட்டுக்குருவி போல் பறந்து திரிந்த காலமொன்று ஜன்னாவின் வாழ்விலும் இருக்கத் தான் செய்தது. அவளுக்கு என்ன குறை? அவள் தந்தை ஓர் இரத்தின வியாபாரி. ஆடம்பரத்தைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?

பிறந்தது முதல் பசி என்பதற்கு அர்த்தம் தெரியாமலே வளர்ந்து விட்டாள் என்றும் சொல்லலாம். அவளது பெற்றோருக்கு ஒரே மகள் ஜன்னா, அந்தப் பெரிய வீட்டில் இளவரசி போல உலா வந்தவள்.

காயம்✔️Where stories live. Discover now