5 | ஆடம்பரம்

67 9 9
                                    

       ஒரு வாரம் இரு வாரங்களாகி ஒரு மாதமாகி, காலம் தன் கால்களில் சக்கரங்களையும் கைகளில் இறக்கைகளையும் கட்டிக் கொண்டு வெகு விரைவாக எங்கோ பயணித்துக் கொண்டிருந்தது.

எவருக்கு என்ன துன்பம் வந்தாலும் உலகம் தன் பாட்டில் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. தனக்கும் தன் கணவனுக்கும் இடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்பை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து அதிலிருந்து இப்போது முற்றாக வெளியில் வந்திருந்தாள் ஜன்னா.

குருவிகள் கீச்சிடுவதை; முகில்கள் வந்து பகலவனை மறைப்பதை; சல சலவென ஓடி வரும் ஆற்று நீரின் ஓசையை; சோவென மழை பொழிவதை; காகங்கள் கரைந்து கரைந்து விருந்துண்பதை எல்லாம் மீண்டும் முன்பு போலவே இரசிக்கத் துவங்கியிருந்தாள் அவள்.

வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போலவே. ஜன்னா கூட அதை இப்போது உணர்ந்திருந்தாள்.

அமீரா அன்று அதிகாலையிலே ஜன்னா வீட்டுக்கு வந்திருந்தாள். அவர்களது சாதாரண தர வகுப்புத் தோழியர் அனைவரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஒன்று சேரும் நிகழ்வுக்கு ஒரே நிறத்தில், ஒரே மாதிரியான உடை அணிவதற்கு திட்டமிட்டிருந்தனர். உடை தைக்கும் பெண்ணிடம் சென்று அளவு கொடுப்பதற்கு ஜன்னாவும் அமீராவும் தயாராகி வெளியிறங்கினர். குழந்தை ஹம்தானை மாமியிடம் கொடுத்து விட்டு அமீராவுடன் கால்நடையாகவே புறப்பட்டாள் ஜன்னா.

சாம்பிளாகத் தைத்து வைத்திருந்த இளம்சிவப்பு வண்ணத்தில் நிலத்தைத் தொடும் முழுக்கைச்சட்டை பார்ப்பதற்கே அழகாயிருந்தது. ஜன்னாவுக்கு அதைப் பார்த்ததும், நிறைய வண்ணமயமான வனப்புள்ள உடைகள் வாங்கி உடுத்த வேண்டுமென ஆசை ஆசையாக வந்து தொலைத்தது.

ஒரு காலத்தில் தன்னிஷ்டப்படி விதவிதமான அலங்காரங்களுடன் கொடுத்துத் தைக்கும் உடைகளையும், உயர்ரக ஆடைக்கடைகளில் மணித்தயாலங்கள் செலவழித்துத் தெரிந்தெடுக்கும் விலையுயர்ந்த ஆடைகளையும் உடைமையாகக் கொண்டவள் தான் அவள்.

காயம்✔️Where stories live. Discover now