7 | அதிர்ச்சி

39 7 13
                                    

     அவளுக்கு இப்போது சில காலமாகவே மனதின் மூலையில்  ஏதோ இடிப்பதாக ஓருணர்வு. அது என்னவென்று புரிந்து கொள்ளவே முடியவில்லை. அன்பான கணவனின் புறக்கணிப்பு வேறு கொல்லாமல் கொன்றது. எதனால் அவளது முகத்தைக் கூட பார்க்க மறுக்கிறான் என்று அவளுக்குப் புரியவில்லை.

இன்று எப்படியாவது ஹனானின் பாராமுகத்துக்கான காரணத்தைத் தெரிந்து கொண்டே ஆவது என்ற எண்ணத்தில் அவன் வரும் வரை பொறுமையிழந்து வாசலிலே காத்திருந்தாள். நேற்று புதிதாக வாங்கி சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் அவளைப் பார்த்துச் சிரித்தது. நேரத்தைப் போக்குவதற்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சலாம் கூறிக் கொண்டு உள்ளே நுழைந்த ஹனான் சத்தமாக சீரியல் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த மனைவியை ஒரு பார்வை பார்த்து விட்டு நகரப் போனவன் கண்கள் ஒழுங்கின்றி அங்குமிங்கும் சிதறிக் கிடந்த பொருட்களைக் கண்டன.

ஏதோ தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு அறைக்குள் சென்று தொழுது, உடை மாற்றி வந்தான். அவனது வருகையறிந்தும் சத்தத்தைக் கூடக் குறைக்காமல் சோபா மீது கால்களை மடித்து அமர்ந்து கொண்டு செல்போனுடன் இருந்தவள் மீது மீண்டும் அவனது பார்வை நிலைத்தது.

நிலத்தில் விரித்திருந்த சிறிய மெத்தை மீது விளையாட்டுப் பொருட்கள் சூழ ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் ஹம்தான். தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஹனானை அப்போது தான் கண்டவள் செல்போனை அணைத்து வைத்து விட்டு எழுந்து நின்றாள். புன்னகைத்தாள், அவன் முகம் இறுகிப் போயிருந்தது.

"பசிக்குது" என்றவன் உணவு மேசையில் வந்தமர்ந்து கொள்ள, அவசர அவசரமாக உணவுப் பண்டங்களைப் பரிமாறலானாள் ஜன்னா.

அவன் சாப்பிடுவதை சமையல்க்கட்டில் சாய்ந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். வுழு செய்ததன் அடையாளமாக தலைமுடியில் தண்ணீர் முத்துக்கள் மின்னின. அதைப் பார்க்கையில் அந்த முடியைக் களைத்து விளையாட வேண்டும் போல்த் தோன்றியது. பார்த்துக் கொண்டிருந்தாள் என்பதை விட இரசித்துக் கொண்டிருந்தாள் என்பதே சாலப் பொருந்தும். இனம்புரியாததொரு ஏக்கம் வந்து 'ஹாய்' சொன்னது.

காயம்✔️Where stories live. Discover now