2 | குடும்பம்

110 10 14
                                    

     ஹனான் அவளையே பார்த்தவாறு இயலாமையுடன் நின்று கொண்டிருக்க, அடுப்பின் அருகே சென்றவள் உணவு சமைத்து முடிந்திருப்பதால் அவற்றை ஹனானுக்காக எடுத்து வைக்கத் துவங்கினாள்.

ஐந்து நிமிடங்கள் வரை சமையலறையிலிருந்த சிறிய மேசையில் அமர்ந்தவாறு அமைதியாக இருந்தவனிடம், "சாப்பிடுங்க" என்று கூறியவள், "ஹம்தான், வாப்பாவோட வந்து சாப்பிடுங்கோ" என்று தன் நான்கு வயது மகனை அழைத்தாள்.

"நீ சாப்பிடலியா?" என்று புருவத்தை உயர்த்தி அவளைப் பார்த்த ஹனானிடம், "பசிக்கல" என்று கூறி விட்டு அப்பால் செல்லப்போக, "ஜன்னா.." என்ற இயலாமையுடன் ஒலித்த அவனது குரலில் அப்படியே நின்றாள்.

அதற்கிடையில் ஹம்தான் வந்து ஹனான் அருகில் அமர்ந்து விட, ஒன்றும் பேசாமல் சாப்பிடலானான். அவர்களுக்கு உணவைப் பரிமாறி விட்டு அங்கிருந்து சென்றாள் ஜன்னா.

'ஏன் ஹனான் இப்படி செய்றீங்க? உங்களுக்காக எது வேணாலும் செய்யக் காத்திருந்த எனக்கு இது தானே நீங்க குடுக்குற பரிசு?' தனக்குள்ளே பேசிக் கொண்டவள், தொப்பென்று சோபாவில் அமர்ந்து இரண்டு நாட்களுக்கு முன் வாசித்து விட்டு அரைவாசியில் வைத்திருந்த நாவலைக் கையிலெடுத்தாள்.

அந்த அமைதியான வீட்டில் அவளும் ஹனானும் குழந்தை ஹம்தானுடன் சந்தோஷத்துக்குக் குறைவின்றி வாழ்ந்து வருகின்றனர். ஹனானின் பெற்றோரும் அவனது தங்கை யும்னாவும் எதிர்வீட்டிலேயே வசிப்பதால் எல்லோரும் பெரும்பாலான நேரங்களில் ஒன்றாகவே இருப்பது வழக்கம். சிறிது நேரத்துக்கு முன்பு தான் யும்னாவும் வந்து சென்றிருந்தாள்.

காலையுணவை உட்கொண்டு விட்டு வேலைக்குப் போகக் கிளம்பி விடும் ஹனான் பகலைக்கு வீட்டுக்கு வந்து விடுவான். எப்போதும் அவர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து மகிழ்வுடன் கதைத்துக் கொண்டே சாப்பிட்டு முடிப்பார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வரை அப்படித்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அவர்களது மனதைப் பாதிக்கும் ஏதோவொரு விடயம் நடந்து விட்டதற்கு அறிகுறியாக ஜன்னாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. 

காயம்✔️Where stories live. Discover now