4 | அவள் மனம்

80 10 17
                                    

     தெளிந்த நீரோடையினுள் சிறு கல்லொன்றை எறிந்த பின் எவ்வாறு களங்கித் தெளிகிறதோ, அதே போன்று தான் ஜன்னாவின் மனமும் ஹனானுடன் கதைத்த பின்பு குழப்பம் குறைந்து காணப்பட்டது.

ஆகாயத்தை அண்ணாந்து பார்த்த போது, வெண்முகில்களெல்லாம் அத்தனை சுறுசுறுப்பாக எங்கு தான் சென்று கொண்டிருக்கின்றனவோ என்று தோன்றுமளவிற்கு ஜன்னா தன் நாளாந்த செயற்பாடுகளில் மிகவும் சோர்வாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.

தனக்குக் கிடைத்திருக்கும் அன்பான கணவன் மற்றும் அழகான குழந்தையுடன் முடிவிலி வருடங்கள் வாழ்ந்து விட ஆசைப்பட்டுக் கொண்டிருந்தவளுக்கு இப்போது சில தினங்களாக வாழ்வே கசந்து போயிருந்தது.

குழந்தை ஹம்தானின் குண்டுக் கன்னங்களையும், ரோஜா இதழ்கள் போன்ற அவனது உதட்டில் தோன்றும் புன்னகையையும் பார்க்கையில் உள்ளுக்குள் ஏதோவொரு புத்துணர்வு தோன்றும். தன் மகனுக்காகவேனும் வாழ வேண்டும் எனும் எண்ணம் அவள் மனதில் எழும்.

இந்த விடயத்தை ஹனான் எவ்வளவு எளிதாக எடுத்துக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கையில் அவளுக்கு ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. தனது கணவனை வேறொருத்திக்கு விட்டுத் தர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த அவளது மனதை எவ்வளவு முயன்றும் அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லையே. ஆனால் அவனுக்குள் தன் மனைவி மீது அப்படிப்பட்ட ஓர் உணர்ச்சியே இல்லை என்று புரிந்த போது நெஞ்சை ஏதோ அடைத்தது.

அவள் மீது அவன் காட்டும் அன்பு எல்லாம் உண்மை தான். ஆனால் அவளுக்குள் இருப்பது போன்ற இந்த உணர்வு அவனுக்குள் எப்படி இல்லாமலிருக்கலாம்?

அவர்கள் திருமணம் செய்து கொண்ட ஓரிரு வருடங்களாக உருக்கத்துடன் அவளையே சுற்றிச் சுற்றி வந்தவன் இன்று இன்னொருத்தியை மனதால் நினைக்கத் துவங்கி விட்டான். இப்போது அத்தகைய எண்ணம் தனக்கு இல்லை என்று அவன் வாயால் கூறினாலும், தான் திருமணம் செய்து கொள்ள நினைத்த அந்தப் பெண்ணைப் பற்றிய எண்ணம் வராமலா இருக்கும்?

காயம்✔️Where stories live. Discover now