யாழமுதன்

5 3 1
                                    

யாழமுதன்

யாரவன்?
தீந்தமிழின் சொற்கணையோ?

யாரவன்?
அந்தநாளின் நல்வினையோ?

யாரவன்?
யாப்பிலக்கணம் சொரிந்தவுடலோ?

யாரவன்?
யாமிருவர் எறிந்தவுயிரோ?

பாலை நடுவினிலே காற்றிலாடும்
நெல்மணிகளின் ஓசையோ அவன்?
சீலைத் திரையில் என்னவளை
ஒரே நாளில் உரிமை கொண்டாடிய கள்வனோ அவன்?

கண்களிரண்டால் எந்தன்
ஆவிப்பருகிடும் கருந்துளையோ அவன்?
தன் வாய்மொழியால், குறுநகையால், எனை
ஆகாயமுகிலோடு நீந்தவிடும் பைந்தளிரோ அவன்?

ஆதவனும் பிறைமதியும் ஒருசேர வரும்
அந்திமாலையோ அவன்?
ஆதிரையின் சிமிட்டல்கிளில்
இசைந்தாடும் ஆதிரனோ அவன்?

வந்த முதன்முதல் கவியின்
பாடுபொருளோ அவன்?
சந்தங்கள் கெஞ்சிடும்
கொஞ்சல் மொழியோ அவன்?

இருட்கடலில் படகிற்கு
கலங்கரை விளக்கமோ அவன்?
கருவிலிருந்து எனது
அண்டமாய் விரிந்த உயிரியலோ அவன்?

புவிதனின் விசையோ?
புறா விதழ்தனில் தசையோ?

சலனமில்லா வோடையின் நீரோ?
சாமி யிழுக்கவிரும்பும் தேரோ?

நினைவினில் சொட்டும் இனிப்போ?
புனைவினில் கொட்டும் கனவோ?

யாரோ நீ? அமுதோ நீ?
யாழோ நீ? தமிழோ நீ?

யாழமுதன் தானோ நீ?!

- ஆசைமிகு அப்பன்,
அருண்.

கவிக்கிளை Where stories live. Discover now