மெய்க்கண்ணாடி (must read)

4 2 1
                                    

நீண்ட போர் ஒன்று, திரை மூடி,
மெல்ல விலகிடும் நேரம்!

கண்ட கனவை வினவாது,
உள்ளம் ஏற்றபடி ஓடும்!

புதிய விடியல் ஒன்று,
எனது வாசல் வந்தது!
இருளில் உழன்ற இதயம்,
அதைக் காண தயங்குது!

பிஞ்சிலே நெஞ்சம் புண்ணாக,
நினைவுக் கூட்டில் ஏதுமிலை மருந்தாக;
காலம், அது போக்கில் உருண்டோட,
பெரும் புயலில் நானோ சருகாக!

இரு கண்களை மெல்ல திறக்கிறேன்,
முதன்முறை கண்ணீரின் உப்புப்படிசல் உருத்தவில்லை!

எழுந்து நின்று வான் நோக்கினேன்,
என்னை அடித்து வீழ்த்த ஆயுதங்கள் வீசப்படவில்லை!

அடி யெடுத்து முன் செல்கிறேன்,
அடியோடு மண்ணும் சரிந்து போகவில்லை!

முன்னும் பின்னும் கை வீசினேன்,
விலங்கிட்டு அடைத்திட ஆள் வரவில்லை!

அன்றலர்ந்த மலரை ஸ்பரிசித்தேன்,
அதன் இதழ்கள் வாடிப் போகவில்லை!

மூச்சினை இழுத்து வெளிவிட்டேன்,
நெஞ்சம் கனத்து வலிக்கவில்லை!

பறக்க வேண்டி கைகள் நீட்டினேன்,
காலைப் பிடித்திழுத்துத் தரையில் யாரும் தள்ளவில்லை!

இதயம் எடுத்து வெளியே வைத்தேன்,
யாரும் விளையாடிவிட்டுத் தூக்கி யெறியவில்லை!

கரு முகில்கள் துளி தூவ,
சருமம் தீப்பற்றி எரியவில்லை!

குளிர் வாடைக் காற்று உரசிட,
தேகம் ஜடமாய் நிற்கவில்லை!

நீரோடையில் தண்ணீர் எடுத்தேன்,
செந்நீர் அதில் கலந்திருக்கவில்லை!
அருந்தினேன்...
தொண்டை இறுக்கவில்லை!

உலகைச் சுற்றிப் பார்த்தேன்,
கேளி செய்யும் ஓசைகள் கேட்கவில்லை!
இரவு வான நிலவு,
என்னைப் பார்த்து மறையவில்லை!

பூஞ்சோலையில் நிற்கிறேன்,
காலைச் சுட்ட பாலை காணவில்லை!

அதனுள்ளே பெரிதாய் கண்ணாடி...
மெதுவாக அதன் முன்னாடி,
நான் பார்க்கிறேன் அதில் என்னை!

உடலெங்கும் வடுவாக,
காயங்கள் வலிக்கவில்லை!

காலத்தோடு அயராத போராட்டம்,
கண்மணிகளில் தெரியவில்லை!

இறுதிச் சோதனை ஒன்று,
நிம்பிக்கையின் இறுதிப்படி அதுவே!

சக்தி அனைத்தும் திரட்டி,
மெதுவாகப் புன்னகைத்தேன்...

மெய்க்கண்ணாடி அழவில்லை!

கவிக்கிளை Where stories live. Discover now