செந்தூர மயக்கம்

1 1 0
                                    

குளிர் மூச்சு விட்டபடி,
தளிர்-தேகம் உரசிப்போகும்...
பூவும் இதழ் சினுங்கும்;
தாவும் இளவேனில் மாலைக் காற்று!

அரைகுறையாய் முறித்த சோம்பல்,
திரை திரையாய் தெரிந்த முகில்கள்,
கதை பேசி ஆடும், கொடியில் உலரும் ஆடைகள்;
கவிதை மழையில், மௌன-ரசனை தூது அனுப்பும் வான் ஓடைகள்!

மலையிடுக்கில் மறையும் ஞாயிறு,
வலை வீசிய முத்தக் கயிறு,
சிந்திச் சிதறிய காதல் கொஞ்சம்;
அந்தியில், வெட்கச் செந்தூர மயக்கம் கொஞ்சும்!

மனக்காட்டில் நினைவுப் புயல் அடிக்க,
தனிக்கூட்டில் இவ்வேளை, அதை அடைக்க,
மெல்லிய தோர் இறகு, இதமாக வருட;
தள்ளி இருந்த இன்பம், பாதங்களை நெருட...

கூச்சல் போடும் இவ்வுலகின் சப்தம்,
நீச்சல் போட்டு... இயற்கை மடியில் நிசப்தம்!
நிம்மதியின் கருவறையில் எனை நிறுத்தி, என்,
சம்மதத்தோடு கைது செய்தது, அந்த அழகு வான்!

கவிக்கிளை Where stories live. Discover now