புரிகிறது

2 1 0
                                    

ஏதும் நிலையில்லை...
பணமும் பொருளும்,
பதவியும் புகழும்,
உயிரும் மெய்யும்,
என ஏதும் நிலைப்பதில்லை!

ஆறாவது அறிவானது,
சிந்தித்து வாழவே இறைவன் அளித்தான்!
ஆனால் மனிதா, நீ,
சிந்திக்கிறாய்...வாழ்வதில்லை!
ஜீவிக்கிறாய்...வளர்வதில்லை!

அன்பும் பண்பும்,
பின்தங்கி நிற்பின்,
மனிதனின் வாழ்வு பயனற்றேப் போகும்!

'நன்மை கடலினும் பெரிது',
என்றதாலோ என்னவோ,
எவரும் நீந்தத் தயாராக இல்லை!

முதுகு விழுந்து,
நாணயத் தாட்களை அள்ளி,
தர்ம நியாயம் இழந்து,
பேர்-புகழ் சொல்லி,
அர்த்தமற்றப் பயணமானது, வாழ்க்கை!

ஏய் மானுடா!
வளர்ந்து முன்னேறி விட்டதாய் எண்ணுகிறாய்...
வாழ்வாதாரங்களை பேணிக்காக்க தவறிப்போனாய்!

நம் புவி உருகிடுதே!
அதன் பச்சை ஆடை உரிக்கப்படுதே!
நீ, நாடகம் நடத்த,
இனி மேடைக்கு எங்கு போவாயோ?

அழிவை நோக்கி ஆரவாரமாய்ச் செல்லும் பதரினமே!
சாவின் விளிம்பில் நிற்பினும் ஆணவத்தி லாடும் மூடரினமே!
வெள்ளம் கழுத்து வரை வர விட்டுவிட்டு,
இன்னும் வானம் பார்க்கும் மேதாவியினமே!

இறப்பின் போது வாழ்கை விளங்குமாம்!
எல்லாம் முடிந்த பின் விளக்கம் கண்டென்ன பயன்?

மானிடப் பருவங்கள்,
மாறிப் போய்,
ஒரு புறம் அழிய!
காலப் பருவங்கள்,
குழம்பிப் போய்,
மறு புறம் கிழிய!

எரிந்து வரும் மடலில்,
கவி வரைந்து என் செய்வாய்?
தங்கபஸ்பம் சேர்த்துவிட்டு,
தாகம் தவித்தால், எங்கு செல்வாய்?

காதல், காமம் வழியினில் சேரவும்,
கண்ணில் தவறே பார்வையென மாறவும்,

தூய்மை தூரத்தில் ஓட,
உண்மை அந்தரத்தில் ஆட!

"என் பிள்ளைகளாலே புறக்கணிக்கப்பட்டேனே!",
என்று, தமிழன்னை தூக்குமேடை ஏற!

பிரம்மனுக்கும் பித்துப் பிடித்து,
தன் படைப்பால், தன் புலன்கள் இழந்தோட!

கல்வி என்பதன் பொருள் காணாமலே போக!
வெண்தாமரையில் சரஸ்வதி,
செந்நீர் பூக்கள் சூட!

பக்திக்கான சாமியெல்லாம்,
பணப்பந்தயத்தில் ஓடவிட!

எதனை நோக்கி ஓடுகிறோம்,
என்று கூட அறியாது,
தரிக்கெட்டோடும் மானுடமே!

இறைவன் எனக்கேன் ஐந்தறிவு அளித்தானென்று,
நன்றாகப் புரிகிறது!!

- இப்படிக்கு,
  ஆலமரத்து அணில்.

- இப்படிக்கு,  ஆலமரத்து அணில்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
கவிக்கிளை Where stories live. Discover now