முகவுரை - Bonus chapter

4 1 1
                                    

'தமிழால் பித்தனானேன்!', என்று கூறினால் அது மிகையாகாது. மொழியைத் தாண்டிய ஒரு பந்தம் எனக்கும் என் தமிழுக்கும் உண்டு என்று நம்புபவன் நான். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே செய்யுள்கள் மீதான ஈர்ப்பு ஒரு தனிச் சுகமாய் என்னை ஆட்கொண்டிருந்தது. மனது, உணர்வுகள் கலந்து வாசிக்க நினைப்பதையே என் நா வெளியே சத்தமிட்டு படித்துக் காட்டும். தமிழ் செய்யுள்களை படித்து நான் அழுததுண்டு; வியந்ததுண்டு; மெய்சிலிர்த்ததுண்டு; கரைந்து காணாமல் போனதும் உண்டு. கவிதை என்பது என் உள்ளத்தை, அதன் உணர்வுகளை எனக்கே எழுத்தில் காட்டும் கண்ணாடி. எழுத வேண்டும் என்று உட்கார்ந்து, பின் கற்பனை செய்து, வார்த்தைகள் கொய்து, வரிகள் அமைத்து எழுதுபவன் அல்ல நான். என் கவிதைகள் ஒவ்வொன்றும் தனித்துவம் மிக்கவை; என் ஒவ்வொரு உணர்வையும் மூளையிடம் சென்று அனுமதி கேட்காமல், மனதில் தோன்றிய கணமே கையில் ஊறி வந்து, வண்ண-மையால் மடலில் நிரம்பியவை. என் கவிதைகள் மீது மூளைக்கு விமர்சனம் இருக்கும்; மனதிற்கு சிநேகம் இருக்கும். மனதிற்கு தன்னைத் தானே காண்பது போன்ற நிலையை கவி தோற்றுவிக்கிறது. மெய்க்கவிதை என்று அந்நாளில் ஆன்றோர்கள் விளக்கியது இதையே. இந்தக் கவிதைத் தொகுப்பு 'தமிழ்த்தருவின் கவிக்கனிகள்!' அனைத்து உணர்வுகளையும் தொட்டு, மனதோடு பேச விரும்புபவை. வலி, காதல், நட்பு, உறவு, சமூகம், இயற்கை, வாழ்க்கை, மனம் ஆகிய வாழ்வின் மிக முக்கியமான அங்கங்களைக் காட்ட எடுக்கப்பட்ட எழுத்து-முயற்சிகள்! 'ஆசைமிகு அம்மாவுக்கு!', என்ற கவிதை என் தாய்க்கு நான் கொடுத்த பிறந்தநாள் பரிசு. ஒரு தாய் மற்றும் அவள் மகனுடைய பாசத்தை மாறி மாறி போட்டியிட்டு காட்டியிருக்கும் அக்கவிதை; என் இதயத்திற்கு நெருக்கமான கவிதைகளில் அஃதும் ஒன்று.'மெய்க்கண்ணாடி' என்ற கவிதை, பல போராட்டங்கள் கண்டு துவளாது மீண்டும் மீண்டும் எழுந்து போராடிய ஒரு உயிரின் நம்பிக்கைக்காக, உருக்கத்தோடு எழுதப்பட்டது. 'புரிகிறது' என்ற கவிதை மனிதர்களாய் நாம் எப்படியெல்லாம் மாறிவிட்டோம் என்பதைப் பற்றி கதறியிருக்கும். 'மெய்ப்போர்' என்ற கவிதை ஜல்லிக்கட்டு விவகாரத்திற்காக; தமிழன் என்ற ஒரு உணர்வுக்காக நடந்த அறப்போரின் சமர்ப்பணம். 'வானில் பூத்த நிலா' என்ற கவிதை, மதுரையில், கல்லூரி விடுதியில் தங்கியிருந்த ஒரு நாள் சாயுங்காலம், திடீரென 'சோ!' வென்று பெய்து விட்டுப் போன மழையும், அது பளிச்சென்ற வானில் விட்டுச் சென்ற தெளிவான பௌர்ணமி நிலவும் கண்டு பரவசத்தில் உதித்தது. இவை போலே ஒவ்வொன்றிற்கும் ஒரு கதை உண்டு. படிக்கும் போது மனம் மூடப்பட்டிருந்தால், இவை வெறும் எதுகை, மோனை கலந்து காகிதத்தில் தெளித்து விட்ட வரிகளாய் நின்று விடும். மனம் திறந்து வாசிக்கையில், பேசாமல் உள்ளத்தோடு பேசும்.

கவிக்கிளை Tempat cerita menjadi hidup. Temukan sekarang