-31-

731 37 0
                                    

இன்றுதான் அந்த விசாலமான கட்டிலின் அனுகூலத்தை முழுதாக அனுபவித்தாள் ஹிக்மா. பஞ்சுமெத்தை அவள் தேகத்திற்கு என்றுமில்லாத சுகம் கொடுத்தது. அசதியில் கைகால்களை நீட்டி இஷ்டத்துக்கு உருண்டு புரண்டு படுத்தாள்.

தூக்கத்தில் புரண்டு படுத்தவள் கையால் எதையோ தொட்டதுபோல உணரவும் திடுக்கிட்டு விழித்தாள். கையை நீட்டி எதன்மீது வைத்தோம் என்று ஆராய்ந்தாள். மீண்டும் எதுவோ தட்டுப்பட உடனே கையை பின்னோடு இழுத்துக்கொண்டாள்.

தொட்டது ஒரு மனித உடலை என்பதை மூளை உணர்த்திய நொடியே கட்டிலில் இருந்து பாய்ந்து இறங்கிய கதவை நோக்கி ஓடினாள்.

தன்னை தவிர அங்கே வேறுயாரோவும் இருக்கிறார்கள் என்பதை அறிய அவளுக்கு அதிகநேரம் எடுக்கவில்லை.
'ஆனால் யார்?' இதயம் மார்பு கூட்டிலிருந்து தப்பி தொண்டையில் சிக்கிக்கொண்டது. கத்திக்கூச்சலிட குரலே எழவில்லை. பயத்தில் வெடவெடத்தது உடல்.

இருட்டில் எப்படியோ கதவை எட்டியவளின் கையில் அதிஷ்டவசமாக அறையின் ஸ்விட்ச்போர்ட் தட்டுப்பபட்டது. கதவை திறந்து வைத்துக்கொண்டே ஸ்விட்சைப் போட்டாள்.

விளக்கின் ஒளி அறை முழுதும் பரவி அங்குள்ள பொருட்களில் பட்டுத்தெரித்து அவள் விழிகளை அடைந்தது.

அதில் தெரிந்த காட்சியை கண்டு அதிர்ந்து நின்றாள் ஹிக்மா.

அங்கே ரய்யான் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தான்.

'காண்பது நிஜந்தானா? இல்லை ஏதேனும் கனவு கண்டு பாதி தூக்கத்தில் விழித்துக்கொண்டு உலாத்துகிறோமா?' நம்பிக்கையற்று மீண்டும் ஒருதரம் கண்களை கசக்கி உற்றுப் பார்த்தாள். அவனேதான்! உறுதிப்படுத்தும் விதமாக அவனது பயணப்பைகளும் அறையில் கிடந்தன.

'அவன் வரப்போவதாக யாரும் சொல்லவும் இல்லை. வீட்டில் யாருக்கேனும் தெரிந்திருக்குமா? தெரியாமல் எப்படி உள்ளே வந்திருப்பான்'

சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் தூக்கத்தில் புரண்டதும் விழித்துவிடுவானோ என்ற பயத்தில் விளக்கை அணைத்தாள்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now