15 - இங்கே தங்கி விடு

75 19 12
                                    

"வழமையாக நாம் வீட்டில் தான் தராவீஹ் தொழுவோம். இம்முறை உங்கள் விடுதியில் பெண்களுக்குத் தொழுகை நடாத்துவதாகக் கேள்விப்பட்டதும் தான் அங்கு வந்தோம். முதல் நாளே, எனது மகனைப் போலவே நீ தொழுகையில் ஓதுவதைக் கேட்டேன். அப்படி ஓதியது யாரென்று பார்க்க எவ்வளவு முயன்றும் முடியாமல் போயிற்று. கடைசியில்..." என்று பெருமூச்சு விட்ட ரிழாவைப் பேச்சற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸைனப்.

ஸைனபை இனிமேல் விடுதியில் தங்க வேண்டாம், வீட்டில் வந்து தங்கிக் கொள்ள வேண்டுமென்று ரிழா அன்பாகக் கட்டளையிட்டார்.

ஆனால் அவள் அதைப் பிடிவாதமாக மறுத்தே விட்டாள். மஸ்லமாஹ் இருப்பதால் தான் அவள் பிடிவாதமாக இருக்கிறாள் என்பதையுணர்ந்த ரிழா,

"எனது மகன் வீட்டில் இருப்பதேயில்லை. இப்படி இடையிடையே வந்து விட்டுப் போய் விடுவான். நீ அதைப் பற்றிக் கவலைப்படாதே. இங்கு வீடு இருக்கும் போது விடுதியில் ஏன் தங்க வேண்டும்?" என்றார்.

"நான் கொஞ்சம் யோசித்துப் பார்த்து விட்டுச் சொல்கிறேன்" என்று ஒருவாறு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் ஸைனப்.

"சரி, உனது குடும்பத்தில் நீ மட்டும் தான் தப்பி வந்தாயா? இல்லை..." ஸைனபைக் கண்டது முதல் தனது மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வியை இறுதியில் கேட்டார்.

"நான் மட்டும் தான்" தனது மடியில் ஒன்றுடனொன்று கோர்க்கப்பட்டுக் கிடந்த தன்னிரு கைகளையும் நோக்கியவாறு அவள் கூறினாள்.

அவளது தோளைப் பற்றிக் கொண்ட ரிழா ஒரு சிறு புன்னகையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் புன்னகை அத்தனை வருடங்கள் அவள் இழந்திருந்த அன்பை மீட்டுத் தருவது போலிருந்தது.

"நான்... போக வேண்டும். கூட்டமொன்று இருக்கிறது" என்றவாறு வேகமாக எழுந்தாள்.

அவளது சிக்கலான நேரசூசி பற்றி ரிழாவும் அறிந்திருந்ததால் அவளைத் தடுக்கவில்லை. தாயன்போடு அணைத்து விடை கொடுத்தார்.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now